search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    மின்வெட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு மின்வெட்டுப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும், தேவையான நிலக்கரியை விரைந்து பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நிலக்கரி பிரச்சினை என்பது சென்ற ஆண்டிலிருந்தே இருந்து வருகிற ஒன்றாகும். இதுகுறித்து நான்கூட அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அப்பொழுதே, கோடை காலத்தில் மின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதை மனதில் நிலைநிறுத்தி நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், மின் வெட்டு வந்தவுடன், நிலக்கரி பற்றாக்குறையைப் போக்க 4.80 லட்சம் டன் இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.

    எப்போது ஒப்பந்தப்புள்ளி முடிந்து, எப்போது நிலக்கரி தமிழ்நாட்டின் அனல் மின் நிலையங்களை வந்தடைவது? அதுவரை மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட வேண்டுமென்று கூறுகிறாரா அமைச்சர்? நிலைமை மோசமடைந்த நிலையில் முதல்-அமைச்சர் பிரதமருக்கு நேற்று கடிதம் எழுதி இருக்கிறார்.

    அந்தக் கடிதத்தில் நிலக்கரிவரத்து குறைவாக இருப்பதாகவும், நிலக்கரி உற்பத்தி போதுமானதாக இருந்தாலும், ரெயில் பெட்டிகளின் பற்றாக்குறை காரணமாக நிலக்கரியை எடுத்துவர இயலவில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார். இதிலிருந்து, கோடை காலத்தில் மின் பயன்பாடு அதிகரிக்கும் என்ற நிலையில் தி.மு.க. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது.

    தி.மு.க. அரசின் நடவடிக்கை கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது. தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கு கண்டனத்திற்குரியது. இந்த நிலையில், நிலைமை சரி செய்யப்பட்டு விட்டதாக அமைச்சர் நேற்று விளக்கம் அளித்து இருக்கிறார். இதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    மின் வெட்டினால் தி.மு.க. ஆட்சியே பறிபோனது என்பதையெல்லாம் முதல்-அமைச்சர் நன்கு அறிவார். எனவே, முதல்- அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு மின்வெட்டுப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும், தேவையான நிலக்கரியை விரைந்து பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அ.தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×