search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின்
    X
    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின்

    சட்டசபையை முடக்குங்கள் பார்க்கலாம்- அ.தி.மு.க.வுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

    மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் சிம்மசொப்பனமாக திகழ்கிறார் என மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
    மதுரை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மதுரையில் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். ஒபுளாபடித்துறை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் மக்களிடையே காணப்படும் எழுச்சி மகிழ்ச்சி தருகிறது. உங்களின் அன்பும் ஆதரவும் என்றென்றும் எனக்கு உண்டு என்பது தெரியும். உங்களிடம் சட்டசபை தேர்தலில் வாக்கு கேட்டேன். நீங்கள் எங்களை வெற்றிபெற செய்தீர்கள்.

    உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே நல்லாட்சி தர முடியும். எனவே உங்களுக்காக உழைக்க தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்த ஒரு சில மாதங்களில் கொரோனா மூன்றாவது அலையை முற்றிலுமாக தடுத்து நிறுத்தினார். இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் பெயர் முதலாவதாக இடம்பெற்று உள்ளது.

    நாங்கள் ஆட்சிக்கு வந்து 8 மாத காலம் தான் ஆகிறது. அதற்குள் தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளோம். நாங்கள் சொன்னதை செய்வோம். செய்வதை தான் சொல்வோம்.

    சட்டசபை தேர்தலில் ஓட்டு கேட்கும்போது கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் தருவோம் என்று சொன்னோம். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து விலகிச் செல்லும்போது 5 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றனர். இருந்த போதிலும் தலைவர் மு.க. ஸ்டாலின் மூன்று மாதங்களில் 2000 ரூபாய் வீதம் இரண்டு தவணைகளில் நிவாரண நிதி வழங்கினார்.

    பெண்களுக்கு இலவச பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது. எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. இதையெல்லாம் நீங்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

    பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதி வழங்கப்படும் என்று தலைவர் அறிவித்து உள்ளார். அதுவும் நிச்சயமாக நடைமுறைக்கு வரும். மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி ஆகிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    விபத்தில் சிக்குவோருக்கு முதல் 48 மணிநேரங்களில் இலவச மருத்துவம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விவசாய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

    தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழக சட்டசபையை முடக்குவோம்’ என்று தெரிவித்துள்ளார். நான் அனுபவத்தில் உங்களை விட மிகவும் சிறியவன். இருந்தாலும் சவால் விடுகிறேன். சட்டசபையை முடக்குங்கள் பார்ப்போம்.

    பாராளுமன்றத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, தமிழகத்தில் தி.மு.க. இருக்கும் வரை பாஜ.க. ஆட்சிக்கு வரமுடியாது என்று சூளுரைத்தார். அந்த அளவுக்கு மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்.

    நாங்கள் உங்களைப் போல சசிகலா காலை வாரி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்ல. மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள். கியாஸ் விலையை நிச்சயமாக முதல்-அமைச்சர் குறைப்பார். மதுரை மாவட்டத்தில் 120 கோடி செலவில் கலைஞர் நூலகம் கட்டுமானப்பணி நடந்துவருகிறது.

    மதுரையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் மேம்பால பணிகள் நடந்துவருகின்றன. பாதாள சாக்கடைக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மதுரை புறநகரில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சிறைச்சாலை தயாராக உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. நீங்கள் வாக்காளர்களிடம் தி.மு.க.வின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்து 8 மாதம் தான் ஆகிறது. உங்களுக்காக உழைக்க தயாராக உள்ளோம். எனவே நீங்கள் அனைவரும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்குகளை செலுத்தவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனாக, முத்தமிழறிஞர் கலைஞரின் பேரனாக உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது மதுரை மாநகராட்சி 43-வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் அருள்பிரகாஷ் என்பவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

    Next Story
    ×