search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக கவர்னர் ஆர்என் ரவி
    X
    தமிழக கவர்னர் ஆர்என் ரவி

    டெல்லி பயணம்: மோடி-அமித்ஷாவை கவர்னர் ரவி சந்திக்கிறார்

    நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி-அமித்ஷாவுடன் கவர்னர் ரவி ஆலோசிப்பார் என்று தெரிய வந்துள்ளது.
    சென்னை:

    நீட் விலக்கு மசோதா விவகாரம் தமிழகத்தில் மட்டுமின்றி டெல்லி அரசியலிலும் எதிரொலிக்க தொடங்கி உள்ளது.

    தமிழக கவர்னர் ரவி நீட் விலக்கு மசோதாவை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்தில் தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி செல்ல திட்டமிட்டு உள்ளார். வருகிற 7, 8-ந் தேதிகளில் அவர் டெல்லியில் 2 நாட்கள் இருப்பார் என்று தெரிய வந்துள்ளது. டெல்லியில் அவர் யார், யாரை சந்திக்கிறார். எந்தெந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    என்றாலும் நீட் தேர்வு விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ள இருக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது டெல்லி பயணம் இருப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு மீண்டும் அனுப்பி வைக்கும் பட்சத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து அவர் டெல்லியில் உள்ள மூத்த சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டெல்லியில் எந்தெந்த சட்ட நிபுணர்களை கவர்னர் ரவி சந்திப்பார் என்பது உறுதியாக தெரியவில்லை. இதற்கிடையே
    பிரதமர் மோடி
    யை கவர்னர் ரவி சந்திப்பது உறுதியாகி இருக்கிறது.

    அதுபோல மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் அவர் சந்திக்க உள்ளார். அவர்கள் இருவரிடமும் நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் புதிய சூழ்நிலை குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது.

    அதோடு நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மோடி-அமித்ஷாவுடன் கவர்னர் ரவி ஆலோசிப்பார் என்று தெரிய வந்துள்ளது. எனவே கவர்னர் ரவியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இதற்கிடையே கவர்னர் ரவியின் இல்ல திருமணம் நடக்க இருப்பதால் அது தொடர்பாகவும் அவர் டெல்லியில் சில பணிகளை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



    Next Story
    ×