search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    ‘நான் தமிழன்’ என்ற ராகுல்காந்தியின் பேச்சு 8 கோடி தமிழர்களுக்கு பெருமையை சேர்த்துள்ளது- கே.எஸ்.அழகிரி

    மக்களவையில் ராகுல் காந்தி ‘நான் ஒரு தமிழன்’ என்று கூறியிருப்பது எட்டு கோடி தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரை மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா என்ற கருத்தை வலியுறுத்தியதோடு, பாரதிய ஜனதா கட்சி வாழ்நாளில் தமிழகத்தை ஆள முடியாது என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

    மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி கூறியிருக்கிறார். இதன் மூலம் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார். இக்கருத்தை கூறியதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று டுவிட்டரில் கருத்து கூறியிருக்கிறார்.

    மக்களவையில் ராகுல் காந்தி தமிழகத்தைப் பற்றி குறிப்பிட்டு பேசியது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ‘நான் ஒரு தமிழன்’ என்று பதில் கூறியிருப்பது எட்டு கோடி தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தியாவில் உள்ள பன்முக கலாச்சாரத்தை மதிப்பதோடு, வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற வகையில் தலைவர் ராகுல்காந்தி இத்தகைய கருத்தை மக்களவையில் மிகுந்த எழுச்சியோடு கூறியதை குறிப்பிட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து வரவேற்றிருக்கிறார். இதன் மூலம் தேசிய அளவில், ராகுல்காந்தி கூறிய கருத்துக்கு, தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருக்கிற முதல்-அமைச்சர்
    மு.க.ஸ்டாலின்
    நன்றியை வெளிப்படுத்தியிருப்பது மதச்சார்பற்ற சக்திகளுக்கு மிகுந்த வலிமையை வழங்கும் என்பதை உறுதியோடு கூற விரும்புகிறேன்.

    மக்களவையில் தமிழக மக்கள் பெருமைப்படுகிற வகையில் உரையாற்றிய ராகுல்காந்தி, அந்த உரைக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலினையும் பாராட்டி பெருமைப்படுவதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    Next Story
    ×