search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் வகுப்பு
    X
    ஆன்லைன் வகுப்பு

    1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மீண்டும் இன்று ஆன்லைன் வகுப்பு தொடங்கியது

    9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளில் பங்கேற்றார்கள்.
    சென்னை:

    உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனா தொற்றும் சமூக பரவலாக மாறி விட்டது.

    இதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் மீண்டும் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    பண்டிகை விடுமுறைக்கு பின்னர் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. ஆனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வீடுகளில் இருந்து படிக்கும் வகையில் கல்வி கற்றல் பணியை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வருகிற 10-ந்தேதி வரை ஆன்லைன் வகுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் கூட இது மேலும் நீடிக்கும் என்று தெரிகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் இன்று பள்ளிக்கூடங்களுக்கு செல்லவில்லை.

    மீண்டும் செல்போன் வழியாக ஆன்லைன் கற்றல் பணியை தொடங்கி உள்ளனர். ஆசிரியர்கள் பாடங்களை வீடுகளில் இருந்து மாணவர்களுக்கு கற்றுத் தந்தனர்.

    2 மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகளுக்கு சென்ற பள்ளி குழந்தைகள் மீண்டும் ஆன்லைன் பாடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேரடி வகுப்புகள் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிரிக்கும் என்று எதிர்பார்த்த பெற்றோர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு தொடங்கி இருப்பது வேதனை அளித்து உள்ளது.

    இதுவரையில் காலையிலேயே அல்லது மாலையிலேயே ஒருநேரம் மட்டும் வகுப்புகளுக்கு சென்று வந்த மாணவர்கள் இன்று முதல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    விடுமுறை முடிந்து பள்ளிகளுக்கு செல்வார்கள் என்று ஆவலோடு இருந்த பெற்றோர்கள் கொரோனா பரவல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்கள் வழியாக நேரில் பாடம் நடத்தி வந்த நிலையில் தொற்றின் தாக்கத்தின் காரணமாக ஆன்லைன் வகுப்புக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் பெற்றோர்களின் பாதுகாப்பில் படிக்க வேண்டிய நிலைக்கு மீண்டும் திரும்பி உள்ளனர்.

    தனியார் பள்ளிகள் நடத்த வேண்டிய பாட பகுதிகளை செல்போன் வழியாக மாணவர்களுக்கு அனுப்பி கற்பித்தல் பணியை தொடங்கி உள்ளனர். இன்று காலை 8.30 மணியில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி விட்டன.

    தனியார் பள்ளிகளில் பெரும்பாலான பாடப்பகுதிகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் பாடம் முழுமையாக நடத்தி முடிக்கப்படவில்லை. அவர்களுக்கு இந்த ஒரு வாரமும் எந்த வகையில் கற்பித்தல் பணியை மேற்கொள்வது குறித்து கல்வித்துறை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

    கடந்த முறை கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டன. ஆனால் தற்போது அதுபற்றிய எந்த அறிவிப்பும் இல்லாததால் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

    சென்னையில் மாநகராட்சி பள்ளிகள் அதிகளவில் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் சுமார் 90 ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்றல் பணி பாதித்துள்ளது.

    9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அவர்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளில் பங்கேற்றார்கள்.

    ஒரு பெஞ்சுக்கு 2 மாணவர்கள் வீதம் சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்புகளில் அமர வைக்கப்பட்டனர். முக கவசம் மற்றும் கிருமி நாசினி கட்டாயம் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டன. ஆசிரியர்களும் முகக்கவசம் அணிந்து கட்டாயம் பாடம் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் கூறியதாவது:-

    மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நேரடி வகுப்புகள் ரத்து என்பது பேரிடியாக உள்ளது. ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவார்கள். இதை பயனுள்ளதாக மாற்றும் வகையில் கல்வி தொலைக்காட்சி இணைய வழி கல்வி என்பது ஒருவழி பயிற்சியாகவே இருந்து வருகிறது. இது முழுமையாக பயன்தராது.

    எனவே 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில், நுண்ணுயியல் முறை வகுப்புகள் மூலம் பள்ளிகள் இயங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு வகுப்புகள் என்று நுண்ணுயியல் முறையில் 5 மாணவர்கள் முதல் 10 மாணவர்களை கொண்டு பாடம் நடத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×