search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவர்னர் தமிழிசை - முதலமைச்சர் ரங்கசாமி
    X
    கவர்னர் தமிழிசை - முதலமைச்சர் ரங்கசாமி

    கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    புதுச்சேரி:

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    அன்பு, சகோதரத்துவம், அமைதி, தியாகம், எளிமை, ஈகை ஆகியவற்றை உலகுக்கு போதித்த ஏசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடுகிறோம். இந்த திருநாளில் புதுச்சேரியில் உள்ள கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். புதியவகை கொரோனா பரவி வரும் சூழலில் பாதுகாப்பு நடைமுறைகளை அனைவரும் பின்பற்றி கிறிஸ்துமஸ் தினவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது உள்ளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுயநலமில்லாத அன்பு, கைமாறு கருதாத உழைப்பு, எதிர்பார்ப்பு இல்லாத தியாகம் போன்றவை நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உதிக்கவேண்டும் என்பதுதான் ஏசு பிறப்பின் அடிப்படை உண்மை ஆகும். பகைவருக்கும் அருளுகின்ற நல்லிதயம் கொண்ட புனிதர் ஏசு பிரான் பிறந்த இத்திருநாள் கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் இல்லங்களில் எல்லா வளங்களையும் நலன்களையும் கொண்டுவந்து சேர்ப்பதாக அமையட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி:-

    அன்பு என்ற பண்பு உலக மக்களிடையே வளர ஏசுபிரான் தனது ஆயுளையே அர்ப்பணித்தார். கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையே அன்பும், கருணையும், இரக்கமும்தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இந்த நாளில் நம்மிடையே உள்ள மனமாச்சரியங்களை மறந்து அவற்றை விட்டொழித்து ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி இந்த கொரோனா காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவியாய் இருந்து பண்டிகை நாளை சிறப்பாக்குவோம். அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன்:

    அனைத்து மக்களிடமும் பரிவு, பாசத்துடன் வாழவேண்டும் என்று போதித்த ஏசுவின் அருள்வாக்கை பின்பற்றி நாம் அனைவரும் அமைதி வாழ்க்கை வாழ வேண்டும் என்று இந்நன்னாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.

    மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர்:

    மனித இனத்திற்கு கருணை வெள்ளமாக திகழும் ஏசு பிரானின் போதனைகளை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடையும் இந்த இனிய தருணத்தில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்

    Next Story
    ×