என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒமைக்ரான் பாதித்த முதியவருடன் தொடர்பில் இருந்த 91 பேருக்கு பரிசோதனை
ஆலந்தூர்:
புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் தமிழகத்திலும் கால் பதித்து விட்டது. நேற்று மட்டும் புதிதாக 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. அவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் நைஜீரியா நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த 61 வயது முதியவர் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவ அதிகாரிகள் கண் காணித்து வருகிறார்கள்.

அந்த முதியவர் நைஜீரியா நாட்டில் இருந்து சென்னைக்கு வந்தபோது விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது கொரோனா இல்லை என்று முடிவு வந்ததால் முதியவர் நங்கநல்லூரில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஒரு வாரத்துக்கு பின்னர் மீண்டும் பரிசோதனை செய்த போது முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்தது. இதன் பின்னர் அவர் கிண்டி கிங்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைக்கு பின்னரே முதியவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து முதியவருடன் தொடர்பில் இருந்த விடுதி ஊழியர்கள், உறவினர்கள் உள்பட 91 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அவர்களது பரிசோதனை முடிவு வந்த பின்னரே நோய் தொற்று பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும்.
பரிசோதனை செய்யப்பட்டுள்ள நபர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இது தொடர்பாக ஆலந்தூர் மண்டல சுகாதார அலுவலர் சுதா கூறியதாவது:-
கடந்த 10-ந்தேதி நைஜீரியாவில் இருந்து வந்து நங்கநல்லூரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 61 வயது முதியவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நலமாக உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.
ஆலந்தூர் மண்டலத்தில் பொதுமக்கள் 50 சதவீதத்துக்கும் மேல் முககவசம் அணிவது இல்லை. முதல் தவணை தடுப்பூசி 98 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 80 சதவீதம் பேர் போட்டுக் கொண்டுள்ளனர். டெங்கு வராமல் இருக்க கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளை அறிவித்தது உத்தர பிரதேச மாநிலம்






