search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி பணியை ஆய்வு செய்த மத்திய மந்திரி எல் முருகன்
    X
    தடுப்பூசி பணியை ஆய்வு செய்த மத்திய மந்திரி எல் முருகன்

    கோயம்பேட்டில் மத்திய மந்திரி எல்.முருகன் தடுப்பூசி பணி குறித்து ஆய்வு

    பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்துள்ளது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்து இருக்கிறது என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
    சென்னை:

    கொரோனா தடுப்பூசியை வீடு வீடாக சென்று மக்களுக்கு செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். அத்திட்டத்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பு குஜராத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி தொடங்கி வைத்தார்.

    அதன்படி நாடு முழுவதும் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இன்று மத்திய மந்திரி எல்.முருகன் சென்னையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் 1-வது தெரு மற்றும் பிருந்தாவன் நகர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    ஒவ்வொரு வீடாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்களா? என்று கேட்டார். இன்னும் தடுப்பூசி செலுத்தாதவர்களிடம், ஏன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கிறீர்கள்? உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

    அதேபோல் 2-வது டோசை செலுத்திக் கொள்ளாதவர்களிடம், தாமதப்படுத்தாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். அது மிகவும் முக்கியமானது. தடுப்பூசிதான் கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம். அதனை நாம் கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும். இதனை நீங்கள் மற்றவர்களிடமும் சொல்லி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    நம் பாரதப் பிரதமர் கொரோனா தடுப்பு பணி குறித்து நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும்படி வலியுறுத்தினார்.

    எல் முருகன்

    உலகிலேயே 100 கோடிக்கு மேல் தடுப்பூசிகளை செலுத்திய நாடு இந்தியாதான். தமிழ்நாட்டில் சுமார் 6 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இதில் முதல் டோஸ் 93 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 2-வது டோசை தாமதிக்காமல் அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும்.

    இது திருவிழாக்காலம். எனவே மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முககவசம் அணிவது மிக மிக முக்கியம். வெளியில் செல்லும்போது முககவசத்தை அணிந்து செல்லுங்கள்.

    கடல்பாசி திட்டம் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து பயன் அளிக்கும் திட்டம் ஆகும். இதனால் பொருளாதாரம் உயரும். இந்த திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன் முதலாக செயல்படுத்தப்பட இருக்கிறது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    தமிழக அரசிடம் இருந்து சில அரசாணைகள் வெளியாக வேண்டி இருக்கிறது. அது வெளியானதும் கடல் பாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும். வருங்காலத்தில் கடல் பாசி என்பது மிக முக்கிய பயனுள்ளதாக அமையும். அது உரத்துக்கும், உணவுக்கும் பயன்படுகிறது.

    ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் கடல்பாசி உணவாக பயன்படுத்தப்படுகிறது. இது பெண்கள் முன்னேற வழிவகுக்கும் திட்டமாகும்.

    பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்துள்ளது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்து இருக்கிறது. மத்திய அரசு விலையை குறைத்ததை அடுத்து வாட் வரியை புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் குறைத்துள்ளன. இதனால் அங்கு பெட்ரோல், டீசல் விலை இன்னும் குறைந்து இருக்கிறது.

    அதேபோல் தமிழ்நாட்டிலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைப்பார்கள் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×