என் மலர்
செய்திகள்

கடந்த தேர்தலைப்போல் காங்கிரஸ் 40 தொகுதிகள் பெறுவதில் தீவிரம்
சென்னை:
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு இந்த தேர்தலில் எவ்வளவு தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் 8 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியது.
தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாமல் போனதற்கு காரணம் காங்கிரஸ் 33 தொகுதிகளை இழந்ததுதான் என்ற ஆதங்கம் தி.மு.க.வினரிடம் இருக்கிறது.
எனவே இந்த தேர்தலில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. தயங்குகிறது. மேலும் தொகுதி நிலவரம், வேட்பாளர் பலத்தை பொறுத்தே காங்கிரசுக்கான தொகுதிகளை ஒதுக்கவும் தி.மு.க. முடிவு செய்துள்ளது.
அ.தி.மு.க.வின் பலமான வேட்பாளர்கள், குறிப்பாக அமைச்சர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. நேரடியாக மோதவும் திட்டமிட்டுள்ளது.
தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் வகையில் தி.மு.க. 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து வரும் ஐபேக் நிறுவனமும் ஆலோசனை வழங்கி இருக்கிறது
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் நமது வெற்றி இலக்கு என்பது 200 பிளஸ் என்பதுதான் என்று தெரிவித்துள்ளார்.
எனவே தொகுதி பங்கீட்டில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறையும் என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் ராகுல் காந்தி புதிய வியூகத்தை வகுத்தார். ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 3 கட்ட பிரசாரம் செய்கிறார்.
முதற்கட்டமாக நேற்று முன்தினம் கோவையில் தொடங்கிய பிரசாரம் இன்று கரூரில் முடிவடைகிறது. இரண்டாவது கட்ட சுற்றுப் பயணம் அடுத்த மாதம் இறுதியில் வடதமிழகத்தில் நடக்கிறது.
தனது பிரசாரம் மூலம் மக்கள் செல்வாக்கை திரட்டி அதன் மூலம் காங்கிரசின் வலிமையை உணர்த்தி கூட்டணி, தொகுதிகளை முடிவு செய்யலாம் என்பது ராகுலின் திட்டம்.
அவர் எதிர் பார்த்தபடியே 3 நாள் பிரசார பயணத்தில் திரண்ட கூட்டத்தையும், எழுச்சியையும் பார்த்து உற்சாகம் அடைந்துள்ளார். ராகுலின் எளிமை மக்களை கவர்ந்துள்ளது. அதே போல் அவரது பேச்சும் சாதாரணமாக மக்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
தனது பிரசார பயணத்தில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி மலரும் என்று குறிப்பிடாதது குறிப்பிடத்தக்கது. மக்கள் விரும்பும் ஆட்சியை தருவோம் என்றே பேசி வருகிறார்.
அதேபோல் ராகுலின் பிரசாரத்தில் திருப்பூரில் திருப்பூர் குமரன்சிலை மற்றும் ஈரோட்டில் தீரன் சின்னமலை சிலை ஆகிய சிலைகளுக்கு மட்டுமே மாலை அணிவிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் மூலம் காங்கிரஸ் கடந்த தேர்தலைப்போல் 40 தொகுதிகளுக்கு குறையாமல் வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்படலாம் என்கிறார்கள்.
ஏற்கனவே காங்கிரஸ், மக்கள் நீதிமய்யம் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி உருவாகலாம் என்று பேசப்பட்டுவரும் நிலையில் காங்கிரசின் அதிரடி வியூகம் அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.