search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோகுல இந்திரா
    X
    கோகுல இந்திரா

    சசிகலாவை தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது- கோகுல இந்திரா பரபரப்பு பேச்சு

    ஜெயலலிதாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா. அவரை யாரும் தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறினார்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதை கண்டித்து சென்னை அரும் பாக்கத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு கோகுல இந்திரா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வரையும், பெண்களையும் தவறாக பேசியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த சொல்லவில்லை.

    பெண்களை எவ்வளவு தரக் குறைவாக ஸ்டாலின் குடும்பம் வைத்துள்ளது. என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. பெண்களை போத பொருளாக நினைத்து, பெண்களுக்கு மரியாதை கொடுக்காமல் மனதில் உள்ள எண்ணம்தான் வார்த்தையாக உதயநிதியிடம் இருந்து வெளிப்பட்டுள்ளது.

    சசிகலா

    சசிகலா பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். அவர் அ.தி.மு.க. வில் பொது செயலாளராக இருந்தவர், எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையுடன் போற்ற கூடியவர். நாங்கள் தெய்வமாக மதிக்கும் ஜெயலலிதாவோடு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர். யார் எங்கே இருந்தாலும் பெண்களை தவறாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.

    வளர்ந்து வரும் உதயநிதி இவ்வாறு பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். விஜயலட்சுமி என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். உதயநிதி பேசியதை மறுக்க முடியாது. அவர் வருத்தம் தெரிவிப்பது பிரச்சினை இல்லை. அவர்கள் வீட்டு பெண்களையும் நாங்கள் மதிக்கிறோம். இதுபோல அநாகரிகமாக பேசுவதை உதயநிதி நிறுத்தா விட்டால் அனைத்து பெண்களும் ஒன்றிணைந்து போராடுவோம் என்றார்.

    சசிகலாவிற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதா? என்று நிருபர்கள் மீண்டும் கேட்டனர். அதற்கு கோகுல இந்திரா கூறியதாவது:-

    சசிகலா வயதில் முதிர்ந்தவர், அவரோடு நாங்கள் இணைந்து பணியாற்றினோம். சசிகலா காலில் முதல்வர் விழுந்ததை கொச்சையாக பேசியுள்ளனர். அனைவரும் சேர்ந்து இருந்தோம்.

    கனிமொழியை அ.தி.மு.க. வில் யாரும் தவறாக பேசுவதில்லை. பேசவும் விட்டிருக்க மாட்டோம். எங்கள் கட்சியின் சார்பில் கனிமொழியை யாராவது தவறாக பேசியிருந்தால் நாக்கை கிழித்திருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×