search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபாட்டில்களை உடைத்து தீ வைத்து கொளுத்திய கிராம மக்கள்
    X
    மதுபாட்டில்களை உடைத்து தீ வைத்து கொளுத்திய கிராம மக்கள்

    சீர்காழி அருகே திருட்டுத்தனமாக விற்ற மதுபாட்டில் தீ வைப்பு - கிராம மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

    சீர்காழி அருகே திருட்டுத்தனமாக நடைபெறும் மது விற்பனையை கண்டித்து பெண்கள் நடத்திய ஆவேச போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தில் கங்கா (வயது45) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து திருட்டுதனமாக பாண்டிச்சேரி மாநில மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளார்.

    இது தொடர்பாக பல முறை சிறை சென்ற நிலையில் மீனவ கிராம மக்களின் எச்சரிக்கை யையும் மீறி தொடர்ந்து மதுவிற்பனையை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் தங்களது கணவர்கள் மதுவிற்கு அடிமையாகி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் 10நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவ பெண்கள் திருட்டுத்தனமாக மதுவிற்பனை செய்யப்படுவதை பார்த்து ஆத்திரமடைந்தனர்.

    உடனே கங்காவின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி மாநில மதுபாட்டில் பெட்டிகளை வெளியே கொண்டுவந்து ஒவ்வொரு பாட்டிலாக கீழே போட்டு உடைத்து தீயிட்டு கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்த சீர்காழி டி.எஸ்.பி வந்தனா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏராளமான போலீசார் கங்காவை சீர்காழி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    இது தொடர்பாக கங்கா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×