என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக- அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும்- டி.டி.வி.தினகரன் பேச்சு
    X

    பாஜக- அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும்- டி.டி.வி.தினகரன் பேச்சு

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக- அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் பேசினார். #ttvdinakaran #bjp #admk #parliamentelection

    திருவெறும்பூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சி மாவட்டத்தில் 3 நாட்கள் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பொன்மலை கல்கண்டார்கோட்டை பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கிய அவர், அங்கு திரண்டு நின்ற பொதுமக்கள் முன்பு பேசியதாவது:-

    தமிழக மாணவ-மாணவிகளை பாதிக்கக்கூடிய நீட்தேர்வு வேண்டாம் என்று ஜெயலலிதா நிராகரித்தார். இந்த தேர்வு மூலம் கிராமப் புற மாணவ-மாணவிகள் மருத்துவக்கல்லூரியில் சேருவது குதிரை கொம்பாக இருக்கிறது. ஆனால் தற்போது மத்தியில் ஆளுகிறவர்கள் சொல்லும் கட்டளைகளை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது.

    4¾ ஆண்டுகாலம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, ஒன்றுமே செய்யாதவர்கள், தற்போது இடைக்கால பட்ஜெட்டை அறிவித்துள்ளார்கள். இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையில் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கினார்கள்.

    ஆனால் அவர்களுடைய வாக்குறுதிகளை தமிழக மக்கள் நம்பாமல் பாராளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளிலும் ஜெயலலிதாவுக்கு வெற்றியை வழங்கினார்கள். ஆனால் தற்போது இவர்கள் மத்திய அரசின் கிளை அலுவலகம் போல் செயல்பட்டு வருகிறார்கள். வருகிற தேர்தலில் இவர்களை டெபாசிட் இழக்க செய்வதன் மூலம் மத்திய அரசுக்கும், அவர்களுடைய ஏஜெண்டாக செயல்படும் தமிழக அரசுக்கும் முடிவு கட்டவேண்டும்.

    துரோகம் செய்தவர்களுக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க மாட்டார்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்துக்கு என்ன நல்ல திட்டங்கள் கிடைத்தது என்று எண்ணி பார்க்க வேண்டும்.

    தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்று சொல்வார்கள். அதைபோல 40 தொகுதிகளிலும் அ.ம.மு.க. வெற்றிபெற வேண்டும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் கடந்த முறை போட்டியிட்ட குக்கர் சின்னத்தை கூட பெறவிடாமல் துரோகிகள் தடை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் விரைவில் நல்ல தீர்ப்பை வழங்கும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலோடு 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும் வருகிறது. இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று அனைவருக்குமான இயக்கமாக செயல்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #ttvdinakaran #bjp #admk #parliamentelection 

    Next Story
    ×