search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேச வேண்டும்: ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேட்டி
    X

    முதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேச வேண்டும்: ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேட்டி

    முதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேச வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூறியுள்ளனர். #JactoGeo #Edappadipalaniswami

    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு ஒன்று திரண்ட ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    அப்போது ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் சுப்பிரமணி, வெங்கடேசன், அன்பரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளில் நியாயம் உள்ளது. இதை நீதிமன்றம் உணர்ந்துள்ளது. எனவே முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு சுமூக தீர்வு காண முன் வர வேண்டும்.

    வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று ஒரு மிரட்டல் கடிதத்தை தமிழகம் முழுவதும் தலைமை செயலாளர் அனுப்பி உள்ளார். (17)பி பிரிவை பயன்படுத்துவோம் என்று சொல்லி உள்ளார்.

    இந்த போராட்டத்தில் 8 லட்சம் பேர் பங்கேற்று உள்ளனர். அரசு மிரட்டலுக்கு பணிய மாட்டோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம். எஸ்மா, டெஸ்மா எந்த சட்டம் பாய்ந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். எங்களை கைது செய்தாலும் சம்பள பிடித்தம் செய்தாலும் கவலைப்பட போவதில்லை.


    எங்களது கோரிக்கைகள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய உயர்வு முரண்பாடுகளை களைய வேண்டும், 35 ஆண்டுகளாக பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, நூலகர், செவிலியர்களை பணி நிரந்தரம் செய்தும், மதிப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்தும் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை தட்டிப் பறிக்கிற அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும், தொடக்க பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராடுகிறோம்.

    பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இந்த அரசு இருந்தால் தலைமை செயலாளரின் அறிக்கையை ஒதுக்கி வைத்து விட்டு முதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    தலைமை செயலாளர் 21 மாத நிலுவைத் தொகையை பெற்று விட்டார். தலைமைச் செயலாளருக்கு பென்சன் உண்டு. ஆனால் 5 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு இல்லை. அதைத்தான் கேட்கிறோம்.

    தமிழக அரசு எங்களை தொடர்ந்த ஏமாற்றியதால் நீதிமன்றமும் எங்களது வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்கவில்லை.

    எங்களது போராட்டத்தால் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாதிப்பு வராது. ஏனென்றால் அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்து அவர்களை தேர்வுக்கு தயார் செய்துள்ளோம். அப்படியே போராட்டம் நீடித்தாலும் ஆசிரியர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பணியாற்றுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.  #JactoGeo #Edappadipalaniswami

    Next Story
    ×