search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே. நகர் தேர்தலில் தினகரன் பணம் கொடுத்து தான் ஜெயித்தார்- திவாகரன்
    X

    ஆர்.கே. நகர் தேர்தலில் தினகரன் பணம் கொடுத்து தான் ஜெயித்தார்- திவாகரன்

    ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் பணம் கொடுத்து தான் ஜெயித்தார் என்று அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன் தெரிவித்தார். #Dhivakaran #TTVDhinakaran #Jayalalithaa #ApolloHospital
    கோவை:

    அண்ணா திராவிடர் கழக பொது செயலாளர் திவாகரன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது அங்கு சசிகலா குடும்பம் மட்டும் சாப்பிடவில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள், அவர்களது உறவினர்கள் என பலர் சாப்பிட்டனர். அப்பல்லோவில் உணவு விலை அதிகம் என்பதால் பில் அதிகம் வர காரணம்.

    ஜெயலலிதாவை அப்பல்லோவில் அனுமதித்த போது சசிகலாவின் குடும்பத்தில் ஒட்டு மொத்தம் 10 பேர் தான் இருந்தனர். சசிகலா மீது தற்போது குற்றச்சாட்டு கூறுபவர்கள் அப்போது சசிகலாவின் காலில் விழுந்தவர்கள். அப்போது அவர்கள் கோமா நிலையிலா இருந்தார்கள்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை ஆணையத்தில் நான் ஆஜராகி ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன். அவர்கள் குறிப்பிட்ட கேள்விகளை மட்டுமே கேட்டனர்.



    ஜெயலலிதாவிடம் எந்த மாதிரியான அறிமுகம் ஏற்பட்டது என்பது குறித்து தான் கேள்வி கேட்டனர்.

    நான் தற்போது சசிகலா குடும்பத்தை விட்டு ஒட்டு மொத்தமாக வெளியே வந்து விட்டேன். தனிக்கட்சி ஆரம்பித்து 4 மாதம் ஆகி விட்டது.

    மாவட்ட செயலாளர், நகர செயலாளர், பூத் கமிட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். கட்சியை வலுப்படுத்தி வருகிறேன்.

    டி.டி.வி. தினகரன் ஜாதிக்கட்சி நடத்துகிறார். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தான் கட்சி பதவி வழங்கி உள்ளார். அவர் பதவி கொடுத்தவர்கள் அனைவரும் எங்கள் உறவினர்கள். அவர்கள் எங்கு கூட்டம் போட்டாலும் போய் விடுவார்கள்.

    டி.டி.வி. தினகரன் தனது கட்சி அங்கீகாரத்துக்கு பதிவு செய்யவில்லை. எங்கள் கட்சியில் 95 சதவீத வேலைகள் முடிந்து விட்டது.

    ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவரை சரியான வழி காட்டுதல் இல்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்தது தான் இந்த குழப்பத்திற்கு காரணம். தேர்தலில் டி.டி.வி. தினகரன் தனக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என நினைக்கிறார். அவர் ஆர்.கே. நகர் தேர்தலில் பணம் கொடுத்து தான் ஜெயித்தார்.

    20 ரூபாய் நோட்டுக்களை கொடுக்கவில்லை என்றால் அவர் ஜெயித்திருக்க மாட்டார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைய வாய்ப்பு உள்ளது. இதனை கட்சி, ஆட்சியில் இருப்பவர்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால் அமைச்சர்கள் தான் யார் வந்தாலும் சேர்த்து கொள்வோம் என கூறி வருகிறார்கள்.

    இதில் யார் நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் தான் உணர்வுபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைப்படி அழைப்பு வந்தால் நாங்கள் பேச்சு நடத்த தயாராக உள்ளோம். எங்கள் கட்சிக்கு வருபவர்கள் வரட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Dhivakaran #TTVDhinakaran #Jayalalithaa #ApolloHospital
    Next Story
    ×