search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் இடைத்தேர்தல்- அமமுக கட்சி வேட்பாளர் நாளை அறிவிப்பு: டிடிவி தினகரன்
    X

    திருவாரூர் இடைத்தேர்தல்- அமமுக கட்சி வேட்பாளர் நாளை அறிவிப்பு: டிடிவி தினகரன்

    திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #ThiruvarurByElection
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் ஒரு தொகுதிக்கு தானே வருகிறது. மற்ற தொகுதிகளுக்கு எப்படி வரும். திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சரவணன் வழக்கு போட்டு அங்கு தேர்தல் வரவிடாமல் செய்துள்ளார். மற்ற 19 தொகுதிகளுக்கும் தேர்தல் வர வேண்டும் என நினைக்கிறேன்.

    தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு ஜனவரி 25 வரை காலம் உள்ளது. அதற்கு முன்னர் எப்படி 18 தொகுதிகளுக்கும் தேர்தல் தேதியை அறிவிக்க முடியும்.

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தடை கேட்டு கபில்சிபில் மூலம் உச்சநீதிமன்றத்தில் யாரோ வழக்கு தொடுத்துள்ளதை பார்க்கும்போது அதற்கு பின்னணியில் யார் இருப்பார்கள் என்பது தெரியும். தேர்தலை வேண்டாம் என்று நினைப்பவர்கள், தேர்தலை கண்டு பயப்படுகிறவர்கள் தான் இதனை செய்துள்ளார்கள்.

    எல்லா தரப்பினரும் ஏமாற்றப்படுகிற நிலையில் தான் தற்போது தமிழகத்தில் ஆட்சி நடைபெறுகிறது. தேர்தல் வந்தால் இந்த ஆட்சி நீடிக்குமா? என்று தெரிந்து விடும். அதனால்தான் இடைத்தேர்தல் வர வேண்டும் என நான் சொல்கிறேன்.

    இடைத்தேர்தல் வரும் போது யார், என்ன என்பது தெரிந்துவிடும். அதற்காகத்தான் தேர்தல் வர வேண்டும் என நானும் காத்திருக்கிறேன்.

    இடைத்தேர்தல் நிச்சயம் நடக்கும்என நான் நினைக்கிறேன். திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். நாளை நிர்வாகிகள் கூட்டம் போட்டுள்ளோம். அதன்பிறகு வேட்பாளர் யாரென்று அறிவிப்போம்.

    பொதுமேடையிலோ, சட்டமன்றத்திலோ குரலை உயர்த்தி முதல்-அமைச்சர் பேசினால், அவர் உண்மையை பேசவில்லை, சமாளிக்கிறார் என்று அர்த்தம். கேபினட் முடிவெடுத்துவிட்டதால் ஸ்டெர்லைட் ஆலை திறக்க முடியாது என்று ஆட்சியாளர்கள் கூறியபோது மேல்முறையீடு சென்றால் ஆலை திறப்பை தடுக்க முடியாது என எல்லோரும் சொன்னோம்.

    தமிழகத்திற்கு தாமிர ஆலையே வேண்டாம் என கொள்கை முடிவெடுத்து அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு மிகவும் வேண்டியவர்களாக இருக்கிறார்கள். வாரவாரம் அமைச்சர்கள் விமானத்தில் டெல்லிக்கு பறந்து கொண்டுள்ளார்கள். ஆனால் இவர்களால் ஒன்றுமே பெற முடியவில்லையே.

    மத்தியில் இருப்பவர்கள் சொல்லும் பேச்சை கேட்டு அதனை செயல்படுத்தும் சேவகர்களாக தானே இருக்கிறார்களே தவிர, இவர்கள் கேட்கும் எதுவும் முதலாளியிடமிருந்து வருவதில்லை என்பது நன்றாக தெரிகிறது.

    சட்டமன்ற தேர்தல் வந்தால் பழனிசாமி, பன்னீர் செல்வத்தினால் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். பணம் கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க தயாராக இல்லை என்பதும் தெரியும். இருக்கும்வரை பதவியில் இருக்கலாம் என ஒரு குரூப் நினைப்பதால் இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகிறது.

    திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அறிவிக்கப்படும்.

    ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி பேசினார். அதன் பிறகு அதனை விட்டுவிட்டார். இப்போது சி.வி.சண்முகம் ஆரம்பித்துள்ளார். அவர் பேசுவதற்கெல்லாம் நான் பதில்சொல்ல விரும்பவில்லை. அமைச்சராக அவர் பேசவில்லை. அவர் தெளிவாக இருந்து நிதானத்தில் பேசினாரா? என தெரியவில்லை.

    அமைச்சரவை கூட்டமே நடக்கவில்லை. நான்தான் சாட்சி என கூறுகிறார். ஆனால், தலைமைச் செயலாளர் கடிதத்தில் அக்டோபர் 19-ந்தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது என உள்ளது. எல்லோரையும் மிரட்டுவது போல பேசுகிறார். சுகாதாரத்துறை செயலாளர் அவருக்கு தெரிந்த உண்மையை சொல்கிறார்.

    அதுபோல காலை 10 மணி ஆனவுடன் செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர், விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் உண்மை வெளிவரும் என்கிறார். அப்படியெனில் ஐ.ஏ.எஸ். ஆபீசர்களை இவர்கள் மிரட்டுகிறார்களா? ஆட்சியாளர்களை விசாரிக்க வேண்டிய காலம் வரப்போகிறது.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக திடீரென்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார். இப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    ஜெயலலிதா மருத்துவமனைக்கு உயிருடன் வந்தார். அங்கு உயிருடன் தான் சிகிச்சை பெற்று வந்தார் என்பது ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. தற்போது ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோகிராம் செய்திருக்கலாமோ என்று பேசிக் கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது. கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டதால்தான் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறுவதை நாம் பார்க்கிறோம்.

    ஆர்.கே.நகரில் டெபாசிட் போனது போல திருவாரூரி லும் போய் விடக் கூடாது என்பதற்காகத் தான் எதையாவது பேசி ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran #ThiruvarurByElection
    Next Story
    ×