search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது பிரச்சனை- முக ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்
    X

    மேகதாது பிரச்சனை- முக ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

    மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது #DMK #MKStalin #Mekedatudam #AllPartyMeet
    சென்னை:

    காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா மாநில அரசு ஏற்கனவே கிருஷ்ணசாகர் அணையைக் கட்டியுள்ளது.

    தற்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் பகுதியில் மேலும் ஒரு அணை கட்ட கர்நாடக மாநில அரசு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சுமார் ரூ.5200 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    மேகதாதுவில் கடந்த 5 ஆண்டுகளாக அணை கட்டும் முயற்சியை கர்நாடகா மாநில அரசு மேற்கொண்டது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டத்தை தொடங்க முடியாமல் கர்நாடக அரசு இருந்து வந்தது.

    இந்த நிலையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு திடீரென ஒப்புதல் அளித்துள்ளது. இது தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய அரசு தனது அனுமதியை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் இதை வலியுறுத்தியுள்ளனர்.

    இதற்கிடையே மத்திய அரசின் அனுமதியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடரும் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தமிழக சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.


    இந்த நிலையில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 29-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘அனைத்துக் கட்சிக் கூட்டம்’ நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #DMK #MKStalin #Mekedatudam #AllPartyMeet
    Next Story
    ×