search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜீவ்காந்தி புகழை மறைக்க முயற்சி- திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
    X

    ராஜீவ்காந்தி புகழை மறைக்க முயற்சி- திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

    ஸ்ரீபெரும்புதூர் இளைஞர் மேம்பாட்டு மையத்தில் ராஜீவ்காந்தி புகழை மறைக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது திருநாவுக்கரசர் குற்றச்சாட்டியுள்ளார். #Congress #Thirunavukkarasar #RajivGandhi
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் பயங்கரவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு அங்கே நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது.

    அதற்கு அருகாமையில் அவரது நினைவைப் போற்றுகிற வகையில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் 1993-ம் ஆண்டு நிகர்நிலை பல்கலைக் கழகமாக தொடங்கப்பட்டது. பிறகு 2012-ல் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உயர்நிலை தேசிய கல்வி நிலையமாக உருவாக்கப்பட்டது.

    அங்கே இந்தியாவின் 29 மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் முதுநிலை படிப்பை தங்கி படித்து வந்தனர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் இல்லை.

    இளைஞர்களுக்கு பயிற்சி தருகிற தேசிய அமைப்பாக அது செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் பயிலுகிற பல்வேறு மாணவர்கள் அங்கு நிலவுகிற வசதி குறைவு காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதை கேள்வியுற்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் ரூபி ஆர். மனோகரனை அங்கே அனுப்பி நேரில் சென்று ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டேன். அவர் பார்வையிட்டு கொடுத்த தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை தருகின்றன.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் இந்த நிறுவனத்தின் முக்கியத்துவத்தை குறைக்கிற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த வகையில் ராஜீவ் காந்தியின் பெயரையும், புகைப்படத்தையும் மறைக்க முடியுமோ அந்த வகையில் எல்லாம் மறைக்கப்பட்டு வருகிறது.

    இக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அனைத்து படிவங்களிலும் ராஜீவ்காந்தியின் படத்துடன் இடம் பெற்றிருந்த லோகோ சமீப காலத்தில் அகற்றப்பட்டிருக்கிறது. அங்கே உள்ள வளாகத்தில் சாம்பல் நிறத்தில் வைக்கப்பட்டிருந்த போர் விமானத்திற்கு இன்று காவி வண்ணம் பூசப்பட்டிருக்கிறது.


    அதேபோல, கருத்தரங்கு கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் திருவுருவப்படம் அகற்றப்பட்டிருக்கிறது. வளாகத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த அவரது படம் அகற்றப்பட்டு ஒரு அறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியின் பிறந்தநாளோ, நினைவுநாளோ மற்றுமுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளோ அங்கே கடைப்பிடிக்கப்படுவதில்லை.

    முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் புகழை மறைக்கின்ற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவதை எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழகத்தில் அமைந்துள்ள இந்த கல்வி நிறுவனத்தில் நிலவுகிற சீர்கேடுகளை களைவதற்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

    ராஜீவ்காந்தியின் புகழை போற்றுகிற வகையில் நிறுவப்பட்ட ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் நிலவுகிற பல்வேறு குளறுபடிகளை களைகிற வகையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அடுத்தகட்டமாக போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar #RajivGandhi
    Next Story
    ×