search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்
    X

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா பேசினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி என 2 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி, குன்னண்டார்கோவில் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களை இணைத்து இலுப்பூரை தலைமை இடமாக கொண்டு 3-வது கல்வி மாவட்டமாக இலுப்பூர் கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா பேசியதாவது:-

    அரசு அறிவித்துள்ளபடி அறந்தாங்கி, திருவரங்குளம், மணமேல்குடி, ஆவுடையார்கோவில் ஆகிய ஒன்றியங்கள் அறந்தாங்கி கல்வி மாவட்டத்திலும், புதுக்கோட்டை, அரிமளம், திருமயம், கந்தர்வக்கோட்டை கறம்பக்குடி ஆகிய ஒன்றியங்கள் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திலும், அன்னவாசல், விராலிமலை, பொன்னமராவதி, குன்னண்டார்கோவில் ஒன்றியங்கள் இலுப்பூர் கல்வி மாவட்டத்திலும் இயங்கும்.

    இந்த முறையில் மழலையர் பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், சுயநிதி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளும் இனி ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பின் கீழ் இயங்கும். இனி உதவி மற்றும் கூடுதல் தொடக்கக்கல்வி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரிகள் என அழைக்கப்படுவார்கள்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் இணைந்து பாடுபட வேண்டும். வருகிற கல்வி ஆண்டில் அரசு பொதுத்தேர்வுகளில் புதுக்கோட்டை மாவட்டம் 100 சதவீதம் தேர்ச்சி பெற அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து நேற்று மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான ஆலோசனை கூட்டம் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் சாமி, சத்தியமூர்த்தி, அறந்தாங்கி திராவிடச்செல்வம், குணசேகரன், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேலு, அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட முதன்மைகல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சின்னப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
    Next Story
    ×