என் மலர்
செய்திகள்

கொடைக்கானலில் 2 மணி நேரம் பலத்த மழை
பெருமாள்மலை:
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கொடைக்கானல் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் இதமான சீசன் நிலவுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது குளு குளு சீசன் நிலவி வருகிறது. அதோடு கோடை விழாவும் நடைபெற்று வருவதால் குடும்பத்துடன் பயணிகள் கொடைக்கானல் வந்து மகிழ்ந்த வண்ணம் உள்ளனர். அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று மாலையில் கன மழை நீடித்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.
தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மலை பகுதியில் புதிதாக அருவிகள் உருவாகியுள்ளது. நகரின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து விழுவதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமடைந்துள்ளனர்.
கொடைக்கானல் மேல் மலை, கீழ்மலை பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், சாகுபடியில் இறங்கியுள்ளனர்.