search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அரசியலில் மாற்றம் ஏற்படுத்த முயற்சியா? - அவசரமாக டெல்லி சென்றார் ரங்கசாமி
    X

    புதுவை அரசியலில் மாற்றம் ஏற்படுத்த முயற்சியா? - அவசரமாக டெல்லி சென்றார் ரங்கசாமி

    புதுச்சேரியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியை டெல்லிக்கு வரும்படி பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா அழைப்பு விடுத்ததால் ரங்கசாமி இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். #Puducherry #Rangasamy
    புதுச்சேரி:

    புதுவையில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்று விரைவில் 2 ஆண்டுகள் முடியப் போகிறது. புதுவை சட்டசபையில் மொத்தம் உள்ள 30 உறுப்பினர்களில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 15 உறுப்பினர்களும், கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு 2 உறுப்பினர்களும் உள்ளனர். ஒரு உறுப்பினர் சுயேச்சை ஆவார். அவரும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளார். இதன் மூலம் ஆளும் கட்சி வரிசையில் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.

    எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர். காங்கிரசுக்கு 8 உறுப்பினர்களும், அ.தி.மு.க.வுக்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.

    ஒரு ஆண்டுக்கு முன்பே இங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த என்.ஆர். காங்கிரஸ் - பாரதிய ஜனதா தரப்பில் இருந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் தரப்பில் இருந்து சிலரை இழுத்து புதிய ஆட்சி அமைத்து விடலாம் என திட்டமிட்டனர்.

    ஜனாதிபதி தேர்தலையொட்டி எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா புதுவை வந்தார். அப்போது என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அவருடன் ரகசியமாக ஆலோசனை நடத்தினார். புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக அவர்கள் விவாதித்ததாக கூறப்பட்டது.

    இதன் பின்னர்தான் புதுவையில் பா.ஜனதாவை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தனர். இதனால் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. ஆளும் கட்சியில் இருந்து 2 அல்லது 3 பேரை இழுத்து ஆட்சி அமைப்பதற்கான முயற்சியும் ரகசியமாக நடந்தது.

    ஆனால், இடையில் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டனர். ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை பாரதிய ஜனதாவோடு இணைத்தால் ஆட்சி மாற்றத்துக்கு உதவுவதாக பா.ஜனதா தரப்பில் இருந்து நிபந்தனை விதித்ததாகவும் ஆனால், அதை ரங்கசாமி விரும்பாததால் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் 8 மாத காலமாக புதுவையில் அமைதி நிலவி வந்தது.

    இந்த நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் நியமனமும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அவர்கள் நியமனம் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.



    3 பேரும் சட்டசபைக்குள் செல்ல முயன்ற போது அவர்களை சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதனால் 3 பேரும் போராட்டம் நடத்தினார்கள். சபாநாயகர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் தொடர்ந்துள்ளனர்.

    அன்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விசாரித்து தனக்கு அறிக்கை தரும்படி கவர்னர் கிரண்பேடி தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி தலைமை செயலாளர் கவர்னரிடம் அறிக்கை கொடுத்தார்.

    இந்த அறிக்கையுடன் தனது குறிப்புகளையும் எழுதி கவர்னர் கிரண்பேடி மத்திய உள்துறைக்கு புகார் அறிக்கை அனுப்பி உள்ளார். இதன் மீது மத்திய உள்துறை ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் உள்துறையின் ஒரு அங்கமாகவே புதுவை மாநிலம் உள்ளது.

    ஆனால், உள்துறை நியமித்த எம்.எல்.ஏ.க்களை அரசு ஏற்க மறுப்பதால் அது உள்துறையின் உத்தரவை மீறும் செயலாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் மத்திய உள்துறை எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

    மத்திய உள்துறை ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் என்ற தகவல் வந்ததை அடுத்து மாநில காங்கிரஸ் கட்சியின் அவசர கூட்டம் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



    அதைத்தொடர்ந்து நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் டெல்லி சென்றனர். அவர்கள் நேற்று குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுனே கார்கே, கபில்சிபல் உள்ளிட்ட மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார்கள்.

    ராகுல் காந்தியை சந்தித்து பேசுவதற்காக தொடர்ந்து அங்கேயே தங்கி உள்ளனர். மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் அதற்கு பதிலடியாக என்ன செய்வது? என்பது பற்றி மேலிட தலைவர்களிடம் அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியை உடனே டெல்லிக்கு வரும்படி பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷாவிடம் இருந்து திடீர் அழைப்பு வந்தது.

    இதையடுத்து ரங்கசாமி இன்று அதிகாலை 4 மணிக்கு புதுவையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி ஆகியோரும் சென்றனர். சென்னையில் இருந்து காலை 8 மணி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்கள்.

    இன்று மாலை 4 மணிக்கு அவர்களை சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கி உள்ளார். அப்போது புதுவை அரசு மீது மத்திய அரசு எடுக்க உள்ள நடவடிக்கை குறித்தும், இங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாரதிய ஜனதா- என்.ஆர். காங்கிரஸ் மீண்டும் ஆட்சி மாற்றம் முயற்சியை கையில் எடுத்திருப்பது புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது, எதிர்க்கட்சிகள் எந்த மாதிரி திட்டத்தை கையில் எடுக்கப் போகிறார்கள் என்பது மர்மமாக உள்ளது. காங்கிரசை உடைத்து ஆட்சி மாற்றத்தை உருவாக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது.

    எனவே, புதுவையில் அடுத்தடுத்த நாட்களில் பல திருப்பங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. #Puducherry #NRCongress #Rangasamy
    Next Story
    ×