என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனிதா நினைவு நூலகம் அடிக்கல் நாட்டு விழாவில் அதிமுக எம்.எல்.ஏ., மாவட்ட திமுக செயலாளர் கலந்துகொண்ட காட்சி.
    X
    அனிதா நினைவு நூலகம் அடிக்கல் நாட்டு விழாவில் அதிமுக எம்.எல்.ஏ., மாவட்ட திமுக செயலாளர் கலந்துகொண்ட காட்சி.

    நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற அரசியல் கட்சியினரின் கருத்தை நம்பவேண்டாம்: அதிமுக எம்.எல்.ஏ.

    நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்களை மாணவர்களும், பெற்றோர்களும் நம்ப வேண்டாம் என அனிதா நினைவு நூலக அடிக்கல் நாட்டு விழாவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேசினார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த அனிதா நீட் தேர்வால் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார்.

    மாணவி அனிதா நினைவாக நூலக அடிக்கல்நாட்டு விழா, அவரது சொந்த ஊரான, குழுமூர் கிராமத்தில் நடந்தது. விழாவுக்கு குன்னம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம். எல்.ஏ. சிவசங்கர் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், மத்திய மாநில அரசுகள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கடைசி வரை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதால்தான் அனிதா தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யப்படும் வரை தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து போராடும் என்றார்.

    அவரை தொடர்ந்து குன்னம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர்.டி.ராமச்சந்திரன் பேசுகையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சியினர் தெரிவிக்கும் கருத்துக்களை மாணவர்களும், பெற்றோர்களும் நம்ப வேண்டாம். மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வில் இருந்து கடந்த ஆண்டு தமிழகத்திற்கு விலக்கு பெற அ.தி.மு.க. அரசு கடுமையாக போராடியது.

    உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரிலேயே நீட் தேர்வை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவேண்டிய கட்டாயத்திற்கு தமிழக அரசு தள்ளப்பட்டது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவிடாமல் தடுத்தார். எனவே தமிழகத்தில் நீட் வந்ததற்கு அ.தி.மு.க. அரசு காரணம் இல்லை.

    அரசியல்வாதிகளின் போராட்டத்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு இல்லை. ஆகையால் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். இதனை கேட்ட அ.தி.மு.க.வினர் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

    தொடர்ந்து பேசிய அவர் அனிதா இறந்தபோது என்னால் நேரில் வர இயலவில்லை. எனவே, அவரது நினைவு நூலக கட்டுமானப் பணிக்காக எனது சொந்த பணத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்குகிறேன் என்றார்.

    அனிதா நினைவு நூலகத்திற்கு நடிகர் லாரன்ஸ் அடிக்கல் நாட்டியபோது எடுத்தபடம்
    .

    திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு அடிக்கல்நாட்டி பேசுகையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன் இன்னுயிரை இழந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற வாலிபரின் தாயாருக்கு, நான் மகனாக இருந்து எனது சொந்த செலவில் வீட்டு கட்டிக் கொடுத்தேன். அதற்கான கிரகப்பிரவேசம் நடந்தது. அந்த விழாவில் பங்கேற்று விட்டு வந்தேன்.

    அதேபோல, நீட் தேர்வால் இறந்த அனிதாவுக்கு, அவரது அண்ணணாக இருந்து எனது சொந்த செலவில் இந்த நூலகத்தை கட்டி முடிப்பேன். பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன். வரும் தேர்தலிலாவது மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட இலவசங்களுக்காக ஓட்டு போடாதீர்கள். யார் கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்குகிறேன் என்று சொல்கிறார்களே அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று பேசினார்.

    ஒரே மேடையில் அ.தி.மு.க., தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டது அரசியல் நாகரீகம் மாறியுள்ளதாகவும், மக்கள் பிரச்சனைகளுக்கும் இதே போன்று அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். #Tamilnews
    Next Story
    ×