என் மலர்

    செய்திகள்

    இந்து மதத்தை கேலி செய்வோரின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி: தமிழிசை சவுந்தரராஜன்
    X

    இந்து மதத்தை கேலி செய்வோரின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி: தமிழிசை சவுந்தரராஜன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வைரமுத்துவுக்கு எதிரான போராட்டம் இந்து மதத்தை கேலி செய்வோரின் செயல்களுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan
    திருச்சி:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: தமிழகத்தில் சம்பா பயிர்கள் காய்ந்து வரும் நிலையில் காவிரியில் தண்ணீர் திறந்து விட மத்திய மாநில அரசுகள் காவிரி நீரை பெற்று தர நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    பதில்: விவசாயிகள் பிரச்சனையை தீர்க்க மாநில அரசு பெரும் முயற்சி எடுக்கவில்லை. மத்திய அரசின் கடன் நிலவள அட்டையை இதுவரை விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. கடன் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்திற்கு 14 ஆயிரம் விவசாயிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரம் விவசாயிகளுக்கும் மத்திய அரசு தனது பங்கீடை செலுத்திய பிறகும், மாநில அரசு விவசாயிகளுக்கு அரசு காப்பீட்டு தொகையை கொடுப்பதில் தாமதம் செய்வதால் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.

    மத்திய அரசு காவிரி பிரச்சனையில் விவசாயிகளுக்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. காவிரி பிரச்சனை வழக்கில் 4 மாதத்தில் தீர்ப்பு வர உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, எந்த ஆணையும் பிறப்பிக்க முடியாது. இந்த பிரச்சனையில் பா.ஜனதா அரசை இப்போது குறை கூறும் கட்சிகள் முன்பு அவர்கள் ஆட்சியில் இருந்த போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இருப்பினும் பா. ஜனதா அரசு தனது கடமையில் இருந்து தவறவில்லை.

    இன்று பெரியார் அணை கட்டிய பென்னிக்குயிக்கின் பேத்தி வருகையின் போது மக்கள் வரவேற்கிறார்கள். காமராஜரும் தமிழகத்தில் பல்வேறு அணைகளை கட்டினார். ஆனால் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தார்கள். ஆந்திரா அரசு பாலாற்றின் குறுக்கேயும், கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கேயும் அணைகள் கட்டுகிறது. ஆனால் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. அதே நேரத்தில் மத்திய அரசு கோதாவரி ஆற்று நீரை கொண்டு வந்து தமிழக பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி பிரச்சனையை தீர்க்கமுயற்சி எடுத்து வருகிறது.

    எனவே விவசாயிகள் பிரச்சனையை தீர்த்து அவர்களை மகிழச்செய்ய தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் விவசாயிகளுக்கு மத்திய அரசு கொடுத்த கரும்பு தொகையை கூட மாநில அரசு கொடுக்கவில்லை. மாநில அரசு விவசாயிகள் பிரச்சனையில் மேலும் அதிக அக்கறை காட்டவேண்டும். நவீன நகரங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் மாநில அரசு சரியாக பயன்படுத்தவில்லை.

    தமிழகத்தில் ஊழல் அதிகரித்து வருகிறது. குட்கா போதை பொருள் விற்கப்படுகிறது என்றால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகளும் அதற்கு துணை போகிறார்கள் என்று அர்த்தம். குட்காவால் சமுதாயம் சீரழிந்து வருகிறது. ஒரு பக்கம் நெடுஞ்சாலையில் மது போதை என்றால், மறு பக்கம் கல்விச் சாலை அருகே குட்கா போதையால் சமுதாயம் சீரழிந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும்.

    கேள்வி: ஆண்டாள் குறித்த சர்ச்சை கருத்தில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்ட பிறகும் அவருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகிறதே?

    பதில்: தமிழ்நாட்டில் சில அரசியல்வாதிகள் மத சார்பற்று செயல்படுகிறோம் என்று கூறி தொடர்ந்து இந்து மதத்தை பற்றி விமர்சனம் செய்து வருகிறார்கள். சிறுபான்மை மக்களை தாஜா செய்வதாக சில அரசியல் வாதிகள் இந்து மதங்களை கேலி செய்கிறார்கள். இந்த போராட்டங்கள் அந்தந்த ஊர்களில், அந்தந்த கோவில்கள் முன்பு நடைபெறுகின்றன. இதை எந்த இயக்கமும் முன்னெடுக்கவில்லை.

    இனிமேல் யாரும் இந்து மதங்களை அவமதித்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இதற்கு முற்றுப்புள்ளியாக இது அமைந்துள்ளது.

    கேள்வி:ரஜினியும் பா.ஜனதாவும் இணைந்து ஆட்சி செய்யும் போது, தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்று குரு மூர்த்தி கூறியுள்ளாரே?

    பதில்: ரஜினிகாந்த இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை. குருமூர்த்தி கூறியிருப்பது அவரது கருத்து. ரஜினி காந்த் முழுமையான அரசியலுக்கு வந்த பிறகு கருத்தை கூறுகிறோம். தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜனதா கட்சி வளர்ச்சி பெற்று வருகிறது. தொடர்ந்து 2 கழகங்கள் இல்லாமல் தேர்தலை சந்தித்து வருகிறோம். உள்ளாட்சி தேர்தலில் எங்கள் பலத்தை நிருபிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது திருச்சி மாவட்ட பா.ஜனதா தலைவர் தங்க.ராஜையன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன் மற்றும் பலர் உடனிருந்தனர். #Tamilnews
    Next Story
    ×