search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயபுரத்தில் மழையால் சேதம் அடைந்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்
    X
    ராயபுரத்தில் மழையால் சேதம் அடைந்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்

    சென்னையில் மழை பாதிப்புகளை மத்திய குழு பார்வையிட்டது

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளை மத்திய குழு அதிகாரிகள் பார்வையிட்டனர்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவ மழையால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் சேதம் அடைந்தது.

    இந்த பாதிப்புகளை பார்வையிட கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஒரு மத்திய குழுவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட சேதங்களை பார்வையிட மற்றொரு குழுவினரும் டெல்லியில் இருந்து வந்திருந்தனர்.

    சென்னைக்கு வந்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ள நிதி அமைச்சக செலவின துணை இயக்குனர் முகேஷ்குமார், முதுநிலை ஆலோசகர் எஸ்.சி. சர்மா, இயக்குனர் நாகமோகன், உள்துறை இணை இயக்குனர் சஞ்சீவ் குமார் ஜிண்டால் ஆகியோர் இன்று காலை தலைமை செயலகம் வந்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.



    இதில் வருவாய்த்துறை செயலாளர் சந்திரமோகன், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு, மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு மழை பாதிப்புகளை வீடியோ படம் மூலம் விளக்கி கூறினார்கள்.

    அதன்பிறகு ராயபுரம் பாலம் அருகே உள்ள எம்.எஸ்.கோவில் தெரு, பேசின் பாலம், பவர் ஹவுஸ் சாலை, வேப்பேரி, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, மூர்த்திங்கர் சாலை, அண்ணாநகர், கொன்னூர் நெடுஞ்சாலை பகுதிகளை பார்வையிட்டனர்.

    இன்று மாலை பூந்தமல்லி, பெருங்களத்தூர், முடிச்சூர், தாம்பரம், கீழ்கட்டளை நாராயணபுரம், ஆகிய இடங்களில் ஏற்பட்ட மழை வெள்ள சேதங்களை பார்வை இடுகிறார்கள்.

    இதுபற்றி மத்திய குழு அதிகாரி நாகமோகன் கூறுகையில் தமிழக அரசு தந்துள்ள தகவலின் அடிப்படையில் மழை சேத பகுதிகளை ஆய்வு செய்து தேவையான நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் அறிக்கை அளிப்போம் என்றார்.
    Next Story
    ×