search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் மகாதீப நாளில் 2500 பக்தர்களுக்கு மட்டும் மலையில் ஏற அனுமதி: ஐகோர்ட் உத்தரவு
    X

    திருவண்ணாமலையில் மகாதீப நாளில் 2500 பக்தர்களுக்கு மட்டும் மலையில் ஏற அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

    திருவண்ணாமலையில் மகா தீப நாளன்று 2500 பக்தர்கள் மட்டும் மலைமீது ஏறுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
    சென்னை:
     
    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும்போது, பக்தர்கள் மலை மேல் ஏற தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சக்திவேல் என்பவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி வாதாடினார். ‘மகாதீபம் ஏற்றும்போது மலைக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கு போடுவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேறுவதால் அசம்பாவித நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தான் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று அவர் வாதிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ், ‘கார்த்திகை தீப திருநாளன்று கிரிவலம் செல்வது என்பது மக்களின் நம்பிக்கை. அதை தடுக்கமுடியாது. மலைமேல் தீபம் ஏற்றுவது என்பது முக்கியமான நிகழ்வு. இதற்காக பக்தர்கள் 40 நாட்கள் விரதமிருந்து மலைக்குமேல் செல்கின்றனர். இந்த பழக்கம் பல நூற்றாண்டுகளாக உள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் தடுக்க முடியாது’ என்று வாதிட்டார்.

    இதுதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘குறைந்த எண்ணிக்கையில் பக்தர்களை மலைக்கு மேல் ஏன் அனுமதிக்க கூடாது? என்று கேள்வி எழுப்பி, அதற்கு மாவட்ட கலெக்டர் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த உயர்நீதிமன்றம்,  மகாதீப நாளன்று மலைமேல் ஏறுவதற்கு 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    “முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2500 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் அடையாள அட்டையுடன் பே கோபுரம் வழியாக மலை மீது ஏற அனுமதிக்க வேண்டும். மலை மேல் ஏறுபவர்கள் கற்பூரம், தீப்பெட்டி எடுத்துச் செல்லக்கூடாது. குடிநீர் மற்றும் நெய் கொப்பரையில் ஊற்றுவதற்கான நெய் ஆகியவற்றை மட்டும் எடுத்துச் செல்லலாம்” என்றும் உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Next Story
    ×