search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் பகுதியில் மதுக்கடைகளுக்கு எதிராக மீண்டும் வெடித்த போராட்டம்
    X

    சத்தியமங்கலம் பகுதியில் மதுக்கடைகளுக்கு எதிராக மீண்டும் வெடித்த போராட்டம்

    மதுக்கடையை அகற்றக் கோரி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சத்தி-கோபி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகள் கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டது.

    அதற்கு பதிலாக புதிய கடைகள் திறக்கப்பட்டது. ஆனால் பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் புதிய மதுக் கடைகள் திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தடுமாறி வருகிறது.

    அது மட்டுமல்லாமல் பல ஆண்டாக உள்ள மதுக்கடை களை மூடவும் பெண்கள் வரிந்து கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பொது மக்களின் போராட்டத்தால் மூடப்பட்ட மதுக்கடைகளை எப்பேற்பட்டாவது மீண்டும் திறந்தே ஆக வேண்டும் என மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் கோதாவில் இறங்கி உள்ளது. இதனால் மதுக்கடைகளுக்கு எதிராக மீண்டும் மக்களின் போராட்டம் எழுச்சி அடைந்துள்ளது.

    சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக் கோரி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சத்தி-கோபி ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட திரண்டு வந்தனர்.

    இதை அறிந்து அங்கு வந்த சத்தி போலீசார் மக்களை தடுத்தனர். மறியல் நடத்தினால் அனைவரையும் கைது செய்ய நேரிடும் என்று கூறினர்.

    இதை தொடர்ந்து பொது மக்கள் சத்தி தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் புகழேந்தியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    இதே போல் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன் பாளையத்தில் மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த அந்த பகுதி மக்கள் அந்த கடையை அகற்ற கோரி கடை முன் கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ‘‘மூடு.. மூடு மதுக்கடையை மூடு’’ ‘‘வேண்டாம்.. வேண்டாம் மதுக்கடை வேண்டாம்’’ போன்ற கோ‌ஷங்களை முழங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை எச்சரித்து விரட்டினர். மேலும் சத்தி தென்றல் நகரில் மதுக்கடை திறக்கப்பட்டது. இதனால் கோபம் அடைந்த அந்த பகுதி மக்கள் சத்தியில் நடந்த ஜமா பந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அதிகாரி சதீசிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    ஆனால் இது பற்றி அவர் எதுவும் கூறாததால் பொது மக்கள் சத்தி-மைசூர் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இப்படி சத்தியமங்கலம் பகுதியில் மதுக்கடைகளுக்கு எதிராக மக்களின் போராட்டம் எழுச்சி அடைந்துள்ளது.

    Next Story
    ×