என் மலர்

  செய்திகள்

  தமிழக ஏழை மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்பு குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது: ராமதாஸ் அறிக்கை
  X

  தமிழக ஏழை மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்பு குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது: ராமதாஸ் அறிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க நினைத்த தமிழக ஏழை மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்பு குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
  சென்னை:

  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

  தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க நினைத்த கிராமப்புற ஏழை மாணவர்களை அதிமுக பினாமி அரசு நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டது. அடுத்த 5 நாட்களில், அதாவது மே 7-ந்தேதி தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு(நீட்) நடைபெறவுள்ள நிலையில், அதிலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட அனுமதியை பெறுவதில் அரசு தோற்று விட்டது.

  தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெற்றால் சமூக நீதிக்கும், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல.

  தமிழகத்தில் இன்றைய நிலையில், புதிதாக தொடங்கப்படவுள்ள புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி உட்பட 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில், அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் வழங்கியது போக 2445 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படவுள்ள 1198 இடங்கள் என மொத்தம் 3643 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பபட உள்ளன.


  அதேபோல், அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1330 பல் மருத்துவ இடங்களுக்கும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் சேர்க்கை நடை பெறவிருக்கிறது.

  தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. அதில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட இடங்களை கிராமப்புற, ஏழை மாணவர்கள் தான் கைப்பற்றி வந்தனர். சாதாரண கூலித் தொழிலாளியின் பிள்ளைகள் கூட மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது என்றால், அதற்குக் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து நடத்திய சட்டப்போராட்டம் மற்றும் அரசியல் போராட்டங்களின் பயனாக 2007-ஆம் ஆண்டில் மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது தான்.

  ஆனால், இப்போது தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகள் அறிமுகப்படுத்துவதன் மூலம் 2007-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்ததை விட மிக மோசமான அளவில் தமிழக கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு மத்திய அரசால் பறிக்கப்படவுள்ளது.

  புதிய தேர்வு முறையின் கீழ் நீட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் தான் மாணவர் சேர்க்கை நடைபெற விருக்கிறது. நீட் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் நடத்தப்படவுள்ளது. அதனால் அந்த பாடத்திட்டத்தில் இருந்து தான் 97 சதவீத வினாக்கள் கேட்கப்படுகின்றன. 3 சதவீத வினாக்கள் தான் பிற பாடத்திட்டங்களில் இருந்து கேட்கப்படுகின்றன.

  அதில் தமிழ்நாடு பாடத்திட்டத்திலிருந்து ஒரே ஒரு வினா மட்டுமே கேட்கப்படும். மத்தியப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படுவதால் அதில் படித்தவர்கள் தான் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். அவர்கள் தான் 90 விழுக்காட்டு மருத்துவ இடங்களை பிடிப்பார்கள்.

  தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின்படி 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய 9 லட்சம் பேரில் 4 லட்சம் பேர் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான உயிரியல் மற்றும் விலங்கியல் பாடம் படித்தவர்கள். அதேநேரத்தில் மத்திய பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய 12,000 பேரில் 4000 பேர் மட்டுமே உயிரியல் மற்றும் விலங்கியல் பாடம் படித்தவர்கள்.

  ஆனால், மொத்தமுள்ள 3623 மாணவர் சேர்க்கை இடங்களில் 3,300 இடங்களை மத்தியப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தான் பிடிக்கப் போகிறார்கள். மாநிலப் பாடத்திட்டத்தில் உயிரியல் பாடம் படித்த 4 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டினருக்குக் கூட மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புக் கிடைக்கப் போவதில்லை. இதைவிட சமூக நீதிக்கு தீங்கு இழைக்க முடியுமா?

  தமிழகத்தில் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளின் இன்றைய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.25,000 கோடி ஆகும். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை எப்படி சேர்ப்பது என்பதை மாநில அரசு தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இதை மத்திய அரசு தீர்மானிப்பதை எப்படி ஏற்க முடியும்? இதைவிடக் கொடுமையான அதிகார அத்துமீறல் இருக்க முடியாது.

  இந்த அத்துமீறலைத் தடுப்பதற்காகத் தான் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கான சட்டம் பேரவையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிப்ரவரி ஒன்றாம் தேதி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு 90 நாட்களாகியும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற முடியவில்லை.


  தமிழக அரசு மத்திய அரசுக்கு முறையாக அழுத்தம் கொடுத்திருந்தால் இந்த சட்டத்திற்கு எப்போதோ ஒப்புதல் பெற்றிருக்க முடியும். ஆனால், ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக மத்திய ஆட்சியாளர்களின் கால்களில் தமிழக ஆட்சியாளர்கள் விழுந்து கிடந்ததால் தான் ஒப்புதலை வாங்க முடியவில்லை.

  மொத்தத்தில் ஆட்சியாளர்கள் வாழ்வதற்காகவும், ஆள்வதற்காகவும் தமிழகத்தின் சமூக நீதியும், கிராமப்புற, ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பும் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாவத்திற்காக தமிழக ஆட்சியாளர்களை தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.

  இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
  Next Story
  ×