search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
    X

    பாவூர்சத்திரம் பகுதியில் நான்குவழிச்சாலை பணிகள் நடைபெறுவதை படத்தில் காணலாம்.




    நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    • நெல்லை-தென்காசி மாவட்ட மக்கள் இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளங்கள், மண் குவியல்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி இடையேயான சாலை 2 மாவட்டங்களை மட்டுமல்லாது இரு மாநிலங்களை இணைக்கும் மிக முக்கிய நெடுஞ்சாலையாகும்.

    கோவில்கள்

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் வாகனங்கள் இந்த சாலையில் தான் செல்கிறது. மேலும் சிமெண்ட், மரம், ஓடு, காய்கறிகள் உள்ளிட்ட வையும் அதிக அளவில் இந்த சாலை வழியாக தான் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.

    குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில், பண்பொழி குமாரசுவாமி கோவில், கேரளாவில் உள்ள அச்சன்கோவில், சபரிமலை போன்ற ஆன்மீக தலங்களுக்கு செல்பவர்களும் இந்த சாலையை தான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    ரூ.430.71 கோடி

    மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ராணி அண்ணா கல்லூரி மற்றும் பல்வேறு தனியார் பொறியியல், தொழில்நுட்பம், கலை கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும் இந்த சாலையில் அமைந்துள்ளதால் எப்போதுமே பரபரப்பாக காணப்படுகிறது.

    நெல்லை-தென்காசி மாவட்ட மக்கள் இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.430.71 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முடிப்பதற்கு வருகிற ஆகஸ்ட் மாதம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    விபத்துகள்

    இந்த சாலையில் பெரும்பாலும் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவற்றில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளங்கள், மண் குவியல்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

    எனவே போதுமான எச்சரிக்கை பலகைகள், வழிகாட்டி பலகைகள், இரவில் எச்சரிக்கை செய்யும் விளக்குகள், வாகனங்கள் செல்லும் பகுதியையும் பணிகள் நடக்கும் பகுதியையும் பிரிக்கும் வகையில் தடுப்புகள் அதிக அளவில் வைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அதிவேக பஸ்கள்

    தார் சாலையின் இருபுறமும் ஒரே நேரத்தில் பள்ளம் தோண்டி சாலை அமைக்கப்படும் பணிகள் நடைபெறுவதால் சாலையின் அகலம் குறைவு காரணமாக வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

    சாலை பணிகள் நடைபெறும் பகுதியில் வாகனங்கள் மாற்று பாதையில் செல்வதற்கு சரியான முறையில் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு உள்ளது.

    புலம்பல்

    மேலும் ஒரு நாளைக்கு குறைந்தது 3 விபத்துகளாவது ஏற்படுகிறது. உயிர் சேதம், பொருள் சேதம் என பல்வேறு இழப்புகள் ஏற்படுகிறது. நேற்று கீழப்பாவூர் யூனியன் அலுவலகம் அருகே தென்காசியில் இருந்து நெல்லை சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆனால் மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதுகுறித்து பஸ் டிரைவர்களிடம் கேட்டால், தாமதமாக சென்றால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும். இதனால் அலுவலக நடவடிக்கைகளுக்கு பயந்து நாங்கள் இவ்வாறு குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடைய வேண்டியுள்ளது என்று புலம்புகின்றனர்.

    இந்த சாலை விபத்துகள் குறித்து சமூக ஆர்வலர் பாவூர்சத்திரம் பாண்டியராஜா கூறுகையில், நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.


    Next Story
    ×