search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக தேர்தல் வெற்றி- மோடிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
    X

    கர்நாடக தேர்தல் வெற்றி- மோடிக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #KarnatakaElection2018 #BJP #EdappadiPalanisamy #OPanneerselvam
    சென்னை:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதேபோல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் வாழ்த்து கூறியுள்ளார்.

    சென்னையில் ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாட்டுக்கும், பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கும் மக்கள் ஆதரவு தெரிவிப்பதாகவே இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

    இதற்காக பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் வாழ்த்து தெரிவித்து உள்ளேன். முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள எடியூரப்பாவையும் நேரில் சந்திப்பேன். அப்போது காவிரி பிரச்சனை சம்பந்தமாகவும் வலியுறுத்தி பேசுவேன்.

    காவிரி நீரை பெறுவதற்கு எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து அம்மா காலம் வரை எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் உயிரோட்டமாக உள்ளது என்பதை அனைவரும் அறிவர். இப்போது காவிரி பிரச்சனை விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று விட்டது.


    மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளது. அதன் சாதக பாதகங்களை கூறுமாறு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

    எனவே கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் உறுதியாக கிடைக்கும். நல்ல தீர்வு வரும்.

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் கடமை மத்திய அரசுக்கு உண்டு.

    சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினாலும் அரசு சார்பில் உரிய பதிலை அளிப்போம்.

    கேள்வி:- கர்நாடகத்தில் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ள வெற்றி தமிழகத்திலும் தொடரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறி இருக்கிறாரே?

    பதில்:- அது அவரது தனிப்பட்ட கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaElection2018 #BJP #EdappadiPalanisamy #OPanneerselvam
    Next Story
    ×