search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட பட்டுவளர்ச்சி துறை கையெட்டினை அமைச்சர் பெஞ்சமின் பெற்று கொண்ட காட்சி.
    X
    முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட பட்டுவளர்ச்சி துறை கையெட்டினை அமைச்சர் பெஞ்சமின் பெற்று கொண்ட காட்சி.

    ஏற்காட்டில் ரூ.2.50 கோடி செலவில் பட்டு சுற்றுலா மையம் விரைவில் திறப்பு- முதலமைச்சர் தகவல்

    ஏற்காட்டில் பட்டு வளர்ப்பு குறித்த அனைத்து செயல் விளக்கங்கள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரூ. 2.50 கோடி செலவில் பட்டு சுற்றுலா மையம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். #TNCM #Edappadipalanisamy
    சேலம்:

    சேலம் அழகாபுரத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மண்டபத்தில் பட்டு விவசாயிகள், பட்டு தொழில் முனைவோர்களுக்கான கண்காட்சி, கருத்தரங்க தொடக்க விழா, பட்டு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை நடைபெற்றது.

    விழாவில் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வரவேற்று பேசினார்.

    விழாவில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பட்டு வளர்ச்சி துறை கையேட்டினை வெளியிட்டார். அதை அமைச்சர் பெஞ்சமின் பெற்றுக்கொண்டார்.

    விழாவில் ரூ. 4.14 கோடி மதிப்பிலான 9 முடிவுற்ற திட்டப்பணிகளை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

    மேலும் 14.40 கோடி மதிப்பிலான 24 புதிய புதிய திட்டப்பணிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 2 ஆயிரத்து 78 பயனாளிகளுக்கு ரூ. 13.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

    கடந்த 7 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பட்டு தொழில் வளர்ச்சிக்காக மத்திய - மாநில அரசுகளால் ரூ. 148 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன் விளைவாக தற்போது தமிழகம் முழுவதும் 27 ஆயிரத்து 427 விவசாயிகளால் 46 ஆயிரத்து 570 ஏக்கர் பரப்பில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    கச்சா பட்டு உற்பத்தியில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. பட்டு தொழில் வளர்ச்சிக்கு ரூ. 75 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது.

    சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணர்வு கையெட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டடார். அதனை மாவட்ட கலெக்டர் ரோகிணி பெற்று கொண்ட காட்சி.

    நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் பட்டு நூல் தேவை 3 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தபோதும் தற்போது 1900 மெட்ரிக் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை உயர்த்திட பட்டு விவசாயிகளுக்கும் பட்டு தொழில் முனைவோருக்கும் பல்வேறு திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. சிறந்த பட்டு உற்பத்தியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பட்டு வளர்ப்பு குறித்த அனைத்து செயல் விளக்கங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரூ. 2.50 கோடி செலவில் பட்டு சுற்றுலா மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநில மற்றும் மாவட்ட அளவில் பட்டு தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயிகள் 93 பேருக்கு எடப்பாடி பழனிசாமி ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.

    விழாவுக்கு தலைமை தாங்கிய ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் பேசியதாவது:-

    தற்போதைய சூழலில் இதர தொழில்களை ஒப்பு நோக்கும்பொழுது ஒரு ஏக்கர் மல்பெரி சாகுபடி செய்யும் விவசாயி ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1.50 லட்சம் வருவாய் ஈட்ட முடியும். பட்டு தொழிலை பொருத்தமட்டில் தமிழகம் தேசிய அளவில் சராசரி பட்டுகூடு உற்பத்தியிலும், இளம்பட்டு புழு வினியோகத்திலும், வெண் பட்டு உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கின்றது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிற்பகலில் திருவாரூர் புறப்பட்டு செல்லும் எடப்பாடி பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் இரவில் சேலத்திற்கு திரும்புகிறார்.

    சேலம் அண்ணா பூங்காவில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அகியோருக்கு 2100 சதுர அடியில் ரூ.80 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டப்படுகிறது. நாளை (29-ந் தேதி) காலை 10 மணியளவில் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி அந்த பணியை தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ. பி.மனோன்மணி இல்லத்திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசுகிறார். மாலையில் சேலம் கோகுலம் மருத்துமனை நிர்வாக இயக்குனர் எஸ்.அர்த்தனாரிக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார். #Salem #TNCM #EdappadiPalanisamy

    Next Story
    ×