search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கைக்கு வெளியே சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்: ராமதாஸ்
    X

    இலங்கைக்கு வெளியே சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்: ராமதாஸ்

    ஈழத் தமிழர் படுகொலை, போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க இலங்கைக்கு வெளியில் பன்னாட்டு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இலங்கையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்ட வி‌ஷயத்தில் என்ன நடந்து விடக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அஞ்சிக் கொண்டிருந்தார்களோ, அது நடந்து விட்டது. போர்க் குற்றவாளிகள் மீதான போர்க் குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்கும் நடைமுறைகளை இலங்கை அரசு குழி தோண்டி புதைத்து விட்டது.

    இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதுகுறித்து சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்; அந்த விசாரணையில் பன்னாட்டு சட்ட வல்லுனர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2015ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தற்போதைய நிலை தொடர்பாக விவாதிக்க ஐநா. மனித உரிமை பேரவையின் 37ஆவது கூட்டத் தொடர் வரும் 26 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 23ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் சையத் அல் ஹூசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேரவையின் தீர்மானத்தை செயலாக்கும் நடவடிக்கைகளை இலங்கை அப்பட்டமாக கைவிட்டு விட்டதாக குற்றஞ்சாற்றியுள்ளார்.

    ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் அரக்கத்தனமாக இனப்படுகொலை செய்யப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு இன்று வரை நீதி வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, அதற்கான அறிகுறிகள் கூட தென்படாதது தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

    முதலில் போர்க்குற்றங்கள் நடக்கவே இல்லை என்று கூறி விசாரணைக்கு மறுத்து வந்த இலங்கை அரசு, இப்போது போர்க் குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு போர்க்குற்றவாளிகளை தண்டிக்க முன்வராதது கடுமையாக கண்டிக்கத் தக்கது.

    ஈழத் தமிழர் படுகொலை, போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க இலங்கைக்கு வெளியில் பன்னாட்டு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை இன பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான முன்முயற்சிகளை உலக நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Tamilnews
    Next Story
    ×