என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்க்கட்சி தலைவரே போராட்டத்தை தூண்டிவிடலாமா?: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
    X

    எதிர்க்கட்சி தலைவரே போராட்டத்தை தூண்டிவிடலாமா?: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

    ‘பஸ் கட்டணம் குறைக்கப்பட்ட பிறகும் எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு போராட்டத்தை தூண்டிவிடலாமா?’, என்று மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- பஸ் கட்டணம் மிக மிக குறைவான அளவிலேயே குறைக்கப்பட்டிருப்பது, இதனால் பயன் இல்லை என்று விமர்சனங்கள் எழுகிறதே?

    பதில்:- இக்கட்டான அந்த சூழ்நிலையிலும் கடந்த 7 வருடங்களாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. இத்தனை ஆண்டுகளில் டீசல் விலை, உதிரி பாகங்களின் விலை உயர்ந்திருக்கிறது. தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பஸ்கள் பராமரிப்பு செலவும் உள்ளடங்கி இருக்கிறது. இத்தனை பிரச்சினைகளையும் சமாளித்து வந்தோம்.

    ஒரு நாளைக்கு ரூ.9 கோடி என்ற ரீதியில் போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கி வந்தது. அதனால் தான் வேறு வழியின்றி மன அழுத்தம் மற்றும் மன வருத்தத்துடன் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.

    பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டபோதும் நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி நஷ்டம் ஏற்பட்டு வந்தது. தற்போது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையிலேயே கட்டணங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. இதனால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு மேலும் ரூ.2 கோடி என மொத்தம் ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. அந்த வகையிலேயே வருடத்துக்கு ரூ.600 கோடி அளவில் மக்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் பஸ் கட்டணம் மிக மிக குறைவு.

    கேள்வி:- ‘பஸ் கட்டணம் குறைக்கப்பட்டாலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்’, என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாரே?

    பதில்:- தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருப்பவரே இதுபோல போராட்டத்தை தூண்டிவிடலாமா? இது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்ட சூழ்நிலையிலும் கூட, வாக்களித்த மக்களுக்கு ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    முழுமையான அளவுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரு அரசாக ஜெயலலிதாவின் அரசு செயல்படுகையில், இந்த அரசுக்கு எதிராக கடந்த ஒரு வருடமாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை பார்க்கும்போது, இந்த ஆட்சியை கலைத்துவிட்டு, தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் ஏற்றி விடலாம் என்ற நப்பாசை காரணமாக, பகல் கனவு காரணமாக பல்வேறு வகைகளிலே செயல்பட்டு வருகிறார். சட்டசபையில் கூட ஒரு நாடகம் அரங்கேற்றினார், ஆனால் அதிலும் தோல்வி அடைந்தார். பல கட்சிகளை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள், அதிலும் தோல்வி.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை 2021-ம் ஆண்டு வரை நாங்கள் தான் ஆட்சி நடத்துவோம். பட்ஜெட் போடுவோம். அதற்கு பிறகு நடக்கும் தேர்தல்களிலும் மக்களை சந்தித்து வெற்றி பெறுவோம். மு.க.ஸ்டாலின் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். அரசியலை பொறுத்தவரையிலே மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் யாராக இருந்தாலும் ஒரு பரந்த மனப்பான்மை வேண்டும்.

    இவ்வளவு பெரிய நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையிலும் கூட, சாமர்த்தியமாக செயல்படும் அரசுக்கு கைகோர்த்து ஆலோசனை கொடுப்போம் என்று எண்ணாமல், அரசு கவிழ்ந்துவிடும் என்று நப்பாசை நினைப்புடன் மு.க.ஸ்டாலின் உள்ளார். அது தவறான நினைப்பு. அதனை கண்டிக்கிறோம். அரசியல் உள்நோக்கம் கொண்ட அவரது அந்த நினைப்பு பகல் கனவாகவே முடியும்.

    மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார். #tamilnews
    Next Story
    ×