search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல்
    X

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல்

    சென்னையில் அரசு தலைமை பொது மருத்துவமனை, ஸ்டான்லி ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    இதில் பாதிக்கப்படுவோர் அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டுமின்றி தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தேவையான நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி வருகிறார்.

    ஆனாலும் டெங்கு நோய் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏராளமானோர் தனியார் ஆஸ்பத்திரியிலும், அரசு ஆஸ்பத்திரிகளிலும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சென்னையில் அரசு தலைமை பொது மருத்துவமனை, ஸ்டான்லி ஆஸ்பத்திரிகளில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


    அவர்களை பார்த்து நலம் விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு நேரில் சென்றார்.

    அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு சென்று வார்டில் சிகிச்சை பெறும் டெங்கு நோயாளிகளை பார்த்து உடல்நலம் விசாரித்தார். அங்கிருந்த டாக்டர்களிடம் போதிய மருந்து கையிருப்பு உள்ளதா? என்றும் விவரம் கேட்டார்.

    இதன்பிறகு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றும் வார்டு வார்டாக நோயாளிகளை பார்த்து விசாரித்தார்.

    பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் வேகமாக பரவுகிறது. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களை திசை திருப்பும் வகையில் தவறான தகவலை அளித்து வருகிறார். அவர் சொல்லும் பிரசாரங்களை நம்பாதீர்கள். அவ்வளவும் பொய்.

    குட்கா விவகாரத்தில் எப்படி மாமூல் வாங்கிக் கொண்டிருக்கிறார்களோ, அதேபோல் டெங்கு நோய் பரவுவதற்கும் ஏதாவது மாமூல் வாங்குகிறார்களோ என்ற சந்தேகம் இப்போது வந்துள்ளது.

    டெங்கு வார்டுகளில் போதிய படுக்கை வசதி இல்லை. போதிய டாக்டர்களும் இல்லை. ஆஸ்பத்திரிக்கு நான் நேரில் சென்று நோயாளிகளிடம் விசாரித்தபோது அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்வது பொய் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×