என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள்: திவாகரன் பேட்டி
    X

    தி.மு.க. கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள்: திவாகரன் பேட்டி

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்து வது தொடர்பாக தி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்து வது தொடர்பாக தி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை யாராலும் ஏற்று கொள்ள முடியாதது. இந்த விவகாரத்தில் மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பதவி விலக வேண்டும்.

    நீட் விவகாரம் தொடர்பாக தி.மு.க. கூட்டும் அனைத்து கட்சி கூட்டத்தில் எங்கள் அணி (தினகரன் அணி) சார்பில் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள். எங்களுக்கு 60 எம்.எல்.ஏ.க்கள், 8 அமைச்சர்கள் ஆதரவு உள்ளது. 8 அமைச்சர்களும் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.

    அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சசிகலா தான் பொதுச் செயலாளர் ஆகவேண்டும் என்று முதலில் கூறினார். இப்போது குழப்பி வருகிறார். இவரைப்போல் அ.தி.மு.க.வில் பல நிர்வாகிகள் உள்ளனர். அவர்கள் இன்னும் 3 மாத காலத்திற்குள் அரசியல் அனாதையாக ஆக்கப்படுவார்கள்.

    ஜெயலலிதா இருந்த போது அரசியல் நிகழ்வு என்பது வேறு. தற்போது இருக்க கூடிய அரசியல் சூழ்நிலை என்பது வேறு. தற்போதைய சூழ்நிலையில் பண்ணையார் முறையில் கட்சியையும் ஆட்சியையும் நடத்த முடியாது. அனைவரையும் அரவணைத்து சென்றால் மட்டுமே கட்சியையும் ஆட்சியையும் நடத்த முடியும்.

    எடப்பாடி பழனிசாமி உடனடியாக ராஜினாமா செய்தால் ஆட்சி காப்பாற்றப்படும். சபாநாயகர் தனபால் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×