search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை சந்திப்போம்: முத்தரசன் பேட்டி
    X

    கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை சந்திப்போம்: முத்தரசன் பேட்டி

    மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று முத்தரசன் கூறினார்.

    சென்னை:

    மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் பேட்டியில் கூறியதாவது:-

    எடப்பாடிக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என்று 19 எம்.எல்.ஏ.க்கள் தனித் தனியாக கடிதம் கொடுத்த பிறகும் கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். இந்த பிரச்சினை கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் அல்லது புதுச்சேரியில் நடந்திருந்தால் அங்குள்ள கவர்னர் எப்படி செயல்பட்டு இருப்பார் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.

    ஆனால் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் பஞ்சாயத்து பேசுகிறார்கள். தங்கள் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க. ஆட்சியை தொடர வைக்க நினைக்கிறார்கள். இது அப்பட்டமான ஜனநாயக படுகொலையாகும்.

    கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்து மக்களை சந்திப்போம். மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு முத்தரசன் கூறினார்.

    மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது:-

    கவர்னரை இன்று நாங்கள் 4 கட்சித் தலைவர்களும் சந்தித்துப் பேசியபோது, “அ.தி.மு.க. விவகாரத்தில் இன்னமும் பந்து என்னிடத்தில் வரவில்லை” என்று கூறினார். அதற்கு நாங்கள், “இல்லை.... பந்து உங்கள் வசம்தான் உள்ளது. நீங்கள்தான் அதை அடிக்க வேண்டும்” என்று கூறினோம்.

    அதை அவர் ஏற்கவில்லை. அ.தி.மு.க.வினர் இரு குழுக்களாகவே உள்ளனர். அதில் நான் எப்படி தலையிட முடியும் என்கிறார். 19 எம்.எல்.ஏ.க்களும் வேறு கட்சியில் சேர்ந்தால்தான் சட்டப்படி நான் தலையிட முடியும் என்கிறார்.

    இதன் மூலம் ஜனநாயக படுகொலை நடக்கிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கவர்னர் தனக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியல் சட்டப் பிரிவை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

    Next Story
    ×