search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா, கூவத்தூர் விவகாரத்தை மூடி மறைக்க டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு பம்பர் பரிசாக பதவி நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின்
    X

    குட்கா, கூவத்தூர் விவகாரத்தை மூடி மறைக்க டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு பம்பர் பரிசாக பதவி நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின்

    குட்கா, கூவத்தூர் விவகாரம் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த அரசு கே.டி.ராஜேந்திரனுக்கு பம்பர் பரிசாக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. பதவியை நீடித்து வழங்கி உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டமன்ற வைரவிழா காணும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் படப்பை, கரசங்காலில் நேற்றிரவு நடைபெற்றது.

    பொதுக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-



    மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் எதை செய்தாலும் அதில் சிறப்பு, எழுச்சி, ஏற்றம் இருக்கும். அவர் நடத்தும் எந்த நிகழ்ச்சியையும் நான் வாழ்த்தாமல், பாராட்டாமல் சென்றதில்லை.

    தமிழ்நாட்டில் இப்போது எல்லோரும் சொல்வது இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான். இதை ஆட்சியாக கருதவில்லை. காட்சி பொருளாக, ஊழல் நிறைந்த ஆட்சியாக கருதுகிறார்கள்.

    இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அல்ல. குதிரை பேரத்தால் நடக்கும் ஆட்சியாகும்.

    கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.2 கோடி, ரூ4 கோடி, ரூ.6 கோடி, ரூ.10 கோடி வரை வழங்கப்பட்டதாக 2 எம்.எல்.ஏ.க்கள் பேட்டி கொடுத்தனர்.

    இதுபற்றி சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுத்தார்கள். வெளியே தூக்கி போட்டார்கள். நாங்கள் சாலை மறியல் செய்து கைதானோம். மறுநாள் சி.டி.கொண்டு வந்து பேசினோம். அப்போதும் மறுக்கப்பட்டது.

    பேட்டி கொடுத்த சரவணன் அதில் உள்ள ஆள்நான்தான். ஆனால் குரல் என்னுடையது அல்ல என்கிறார். சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றார். ஆனால் என் மீது இதுவரை வழக்கு தொடராதது ஏன்? ஒரு வக்கீல் நோட்டீஸ் கூட இதுவரை இல்லை.

    ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வி‌ஷயத்திலும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    இப்போ குட்கா விவகாரம் வெளிவந்துள்ளது. இதிலும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    நீதிபதி குன்கா ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பினார். இப்போது குட்கா இந்த ஆட்சியை ஜெயிலுக்கு அனுப்பி வைக்க போகிறது.

    தடை செய்யப்பட்ட குட்காவை திருட்டுத்தனமாக தமிழகத்தில் விற்க அப்போது போலீஸ் கமி‌ஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக வருமான வரித்துறை தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளது.

    இதன்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது பற்றி சட்டசபையில் விரிவாக விவாதிக்க அனுமதி மறுக்கிறார்கள். முதல்-அமைச்சரிடம் கேட்டால் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம் என்கிறார். அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பழிபோடுகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்கிறார்.

    10 நாள் ஆகிவிட்டது. இதுவரை யார் மீதாவது அவர் வழக்கு போட்டிருக்கிறாரா? இந்த தெம்பு உண்டா?

    இந்த ஆட்சியில் முதல்- அமைச்சர்கள் உள்பட 9 அமைச்சர்கள் மீது வழக்கு போடப்பட்டு அவர்கள் மீது கத்தி தொங்குகிறது.

    இப்போது ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரை அ.தி.மு.க. அணிகள் போட்டி போட்டு ஆதரிக்கிறார்கள். இவர்கள் மத்திய அரசிடம் மண்டியிட காரணம், மணல் மாபியா- ரூ.89 கோடி தேர்தல் பண வினியோகம்-குட்கா விசயம் தான் காரணம். மாட்டிறைச்சி விசயத்திலும் கருத்து சொல்ல பயப்படுகிறார்கள்.

    ஜி.எஸ்.டி.யில் உள்ள பிரச்சினைகளை சுட்டிக் காட்டினோம். அவசரப்பட்டு நிறைவேற்ற வேண்டாம் என்றோம். ஆனால் முடியாது என்று மறுத்து விட்டனர்.

    குஜராத் முதல்-அமைச்சராக மோடி இருந்த போது ஜி.எஸ்.டி. மசோதாவை எதிர்த்தார். இப்போது பிரதமர் ஆனதும் நிறைவேற்றுகிறார்.

    இப்போது பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஜி.எஸ்.டி.யால் விலைவாசி உயர போகிறது. 7½ கோடி தமிழக மக்கள் பாதிக்கப் போகிறார்கள்.

    அ.தி.மு.க. அரசு ஜி.எஸ்.டி.க்கு முழு ஆதரவு அளித்து தமிழகத்துக்கு மிகப் பெரிய துரோகம் செய்துவிட்டது.



    குட்கா விவகாரம் வெளிவந்து விடக்கூடாது என்பதற்காகவும், கூவத்தூர் வி‌ஷயம் வெளியில் தெரிந்து விடகூடாது என்பதற்காகவும் இந்த அரசு டி.கே.ராஜேந்திரனுக்கு பம்பர் பரிசாக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பதவி நீடிப்பு வழங்கி உள்ளது.

    இந்த குட்கா விவகாரத்தில் வருமான வரித்துறை கைப்பற்றி இருக்கின்ற நோட்டு, புத்தகங்கள், கணக்குப்புத் தகங்கள், டைரிகள், அதிலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற பெயர்கள், யார் யாருக்கு லஞ்சம் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள். அந்த பெயர்களின் வரிசையில் அன்றைக்கு சென்னை மாநகரத்தின் கமி‌ஷனராக இருந்த டி.கே. ராஜேந்திரன், ஜார்ஜ், இவர்களுடைய பெயர்களெல்லாம் அதிலே இடம் பெற்றிருக்கிறது.

    எனக்குத் தெரிந்து, ஒரு போலீஸ் கமி‌ஷனர் இப்படி லஞ்சம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டு இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றிலே கிடையாது. இப்போது இந்த ஆட்சியில் 40 கோடி ரூபாயில் 60 லட்சம் ரூபாய் பங்கு டி.கே.ராஜேந்திரனுக்கு கிறிஸ்துமஸ் போனஸ், தீபாவளி போனஸ் என்ற தலைப்பில் வழங்கி இருக்கிறார்கள்.

    ஒருவருக்கு விதிமுறையை மீறி நீட்டிப்பு கொடுக்கிறார்கள் என்றால் என்ன காரணம்? ஒரே காரணம் இந்த குட்கா விவகாரம் வெளியில் வந்து விடும். அதையும் மீறி இன்னொரு காரணம் கூவத்தூர் கொண்டாட்டம், அதுவும் வெளியில் வந்துவிடும் என்ற அந்த நிலையிலே தான், அவையெல்லாம் வெளியில் வரக்கூடாது என்பதற்காகத் தான் எடப்பாடி பழனிசாமி டி.கே.ராஜேந்திரனுக்கு ஒரு பம்பர் பரிசாக இன்றைக்கு பதவி நீட்டிப்பு வழங்கியிருக்கிறார்கள்.

    இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராகி விட்டனர். இந்த ஆட்சியை இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்களே என்று எங்கே போனாலும் கேட்கிறார்கள்.

    இப்படிப்பட்ட நிலையில் குதிரை பேரத்தால் நடைபெறும் தலையில்லாத இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். இந்த ஆட்சியை அவர்களே கவிழ்க்க காத்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுக்கு தா.மோ.அன்பரசன் வீரவாள் பரிசு வழங்கினார். இதில் 5 ஆயிரம் பேர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    நலிந்த கட்சிகாரர்கள் 70 பேருக்கு தலாரூ.10 ஆயிரம் வீதம் உதவிகள், மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்பட்டது.
    Next Story
    ×