search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: அன்புமணி ராமதாஸ்
    X

    ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்: அன்புமணி ராமதாஸ்

    தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
    ஸ்ரீவைகுண்டம்:

    தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணி நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து தொடங்கியது. இந்த பேரணி அம்பை, வீரவநல்லூர், சுத்தமல்லி வழியாக நெல்லையை அடைந்தது.

    பின்னர் நெல்லையில் இருந்து தொடங்கிய பேரணி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் வந்தடைந்தது. அங்கு பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., மாநில தலைவர் ஜி.கே.மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் தாமிரபரணியை பாதுகாக்குமாறு விழிப் புணர்வு ஏற்படுத்தினர். இது தொடர்பான துண்டு பிரசுரங்களையும் அன்புமணி ராமதாஸ் எம்.பி. அங்குள்ள கடைகள் மற்றும் பஜார் பகுதியில் நின்ற பொதுமக்களுக்கு வினியோகம் செய்தார்.

    தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. வந்தார். அவர், அங்குள்ள சுப்பிரமணியசுவாமி கோவில் முன்பு ஆற்றுபடித்துறையில் இறங்கி ஸ்ரீவைகுண்டம் அணையை பார்வையிட்டார். பின்னர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் இருந்து தென்கால் மற்றும் வடகால் பாசனத்தின் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆட்சியில் ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர்வாரும் பணியின் போது மணல் கொள்ளையடிக்கப்பட்டது.

    நெல்லை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் நேராக தாமிரபரணி ஆற்றில் கலக்கின்றன. இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஸ்ரீவைகுண்டம் அணையில் அமலை செடிகள் ஏராளமானவை ஆக்கிரமித்துள்ளன. அவைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டுக்கு ஜி.எஸ்.டி. மிகப்பெரிய பாதிப்பு. தமிழகத்தில் அதிக அளவில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள், பட்டாசு தொழிற்சாலைகள், மோட்டார் உற்பத்தி தொழிற் சாலைகள், திண்டுக்கல் பூட்டு தொழிற்சாலைகள் போன்றவைகளுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செய்துங்கநல்லூரில் பா.ம.க. சார்பில் தாமிரபரணி ஆறு பாதுகாப்பு இருசக்கர பேரணி துவங்கப்பட்டது. செய்துங்கநல்லூரில் துவங்கி ஆத்தூரில் முடிவடையும் இந்த பேரணிக்கு பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்தார்.



    விழிப்புணர்வு பேரணியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற போது எடுத்த படம்.


    மாவட்ட செயலாளர் நந்தினி லிங்கராஜ், மாவட்ட அமைப்புச் செயலாளர் ஆல்வின் ரொட்ரீகோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, 5 மாவட்டத்துக்கு குடிதண்ணீர் ஆதாரம் தாமிரபரணி நதிதான். தமிழகத்தில் தோன்றி தமிழகத்திலேயே முடியும் நதி தாமிரபரணி.

    இந்த நதியில் 8 அணை 11 கால்வாய் உள்ளது. இதில் கூடுதல் அணைகட்டி, கூடுதல் பாசன பரப்பை பெருக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தான் தாமிரபரணியை பாதுகாத்து தொடர்ந்து முறையாக பயன்படுத்த அறிவுருத்தியே இந்த பேரணி நடைபெறுகிறது என்றார். இந்நிகழ்ச்சியில் பா.ம.க தலைவர் மணி, திலகபாமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×