என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிய  ஆட்சி இனியும் நீடிக்கலாமா?: ராமதாஸ் கண்டனம்
    X

    எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கிய ஆட்சி இனியும் நீடிக்கலாமா?: ராமதாஸ் கண்டனம்

    ஒரு கோடி ரூபாய்க்கும், 5 கோடி ரூபாய்க்கும் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் இந்த ஆட்சி இனியும் நீடிக்கலாமா? என கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

    கடலூர்:

    மது ஒழிப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி இந்தியாவில் 90 ஆயிரம் மதுக்கடைகளையும், தமிழகத்தில் 3 ஆயிரத்து 321 மதுக்கடைகளையும் மூடச்செய்ததற்காக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு பாராட்டு விழா பொதுக்கூட்டம் கடலூர் தேரடி வீதியில் நேற்று இரவு நடைபெற்றது.

    விழாவில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் இப்போது நடக்கிற ஆட்சியை பற்றி நினைத்தாலே கோபமாக வருகிறது. இந்த ஆட்சி வருவதற்கு ஓட்டுப்போட்ட மக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. 200 ரூபாயும், 300 ரூபாயும் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டால் இதுபோன்ற ஆட்சிதான் கிடைக்கும். இந்தியாவில் இதை போல் மோசமான ஆட்சி வேறு எங்கும் நடக்கவில்லை.

    தமிழகத்துக்கு என்று தனியான அரசியல் நாகரீகம் உள்ளது. நம்முன்னோர்கள் அதற்கு வழிகாட்டினார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு கோடி ரூபாய்க்கும், 5 கோடி ரூபாய்க்கும் எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். எனவே இந்த ஆட்சி இனியும் நீடிக்கலாமா?. 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நாசப்படுத்தி விட்டார்கள். தமிழக மக்களே நீங்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் தான் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

    பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் வெளிப்படையான நிர்வாகம் தருவோம் என்று சொன்னோம். இனியாவது மக்கள் திருந்த வேண்டும். தமிழகத்தில் பெண்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். பெண்கள் நினைத்தால் நல்ல ஆட்சி மாற்றத்தை கொடுக்க முடியும்.

    திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் விலைவாசி உயர்வும், வேலை இல்லா திண்டாட்டமும் மக்களை வாட்டி வதைக்கிறது. எனவே இனிமேல் விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், வேலை இல்லா திண்டாட்டத்துக்கு எதிராகவும் நம்முடைய போராட்டம் இருக்கும். பா.ம.க. தலைமையில் மக்களுக்கான கூட்டணி அமையும்.

    என்.எல்.சி.க்கு எதிராக வருகிற 29-ந்தேதி பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் இருந்து மணல் கேரளாவுக்கு கடத்திச்செல்லப்பட்டு, அங்கிருந்து மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மண்ணையும், மக்களையும் காக்க பா.ம.க. போராட்டம் நடத்தும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

    முன்னதாக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-


    தமிழகத்தில் நாளுக்கு நாள் பா.ம.க. வளர்ந்து வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க. மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். அடுத்தது யார்? என்ற கேள்வி மக்கள் மனதில் உள்ளது. அடுத்தது பா.ம.க. தான். இதில் சந்தேகமே கிடையாது.

    சட்டப்போராட்டம் நடத்தி மதுக்கடைகளை மூடியது பா.ம.க.வுக்கு கிடைத்த முதல் வெற்றி. அடுத்தது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு பா.ம.க. ஆட்சியில் கொண்டு வரப்படும். அந்தநிலை விரைவில் வர இருக்கிறது.

    தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம், அரசியல் கலாசாரம் மாற்றம் வர வேண்டும். அந்த நிலை வர வேண்டும் எனில் பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும்.

    இப்போது தமிழகத்தில் மிகப்பெரிய மவுனப்புரட்சி நடந்து கொண்டு இருக்கிறது. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி, தரமான சுகாதாரம் தருவோம்.

    இவ்வாறு டாக்டர் அன்பு மணிராமதாஸ் பேசினார்.

    கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில சொத்து பாதுகாப்புக்குழு தலைவர் கோவிந்தசாமி, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×