என் மலர்
பொது மருத்துவம்

இயற்கையோடு நேரம் செலவிடுங்கள்...
- அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும்
- இயற்கை சூழல் மன அமைதியை அளிக்கிறது.
கிராமத்தில் இருப்பவர்களோடு ஒப்பிட்டால் நகரத்தில் வாழ்பவர்களுக்கு மன அழுத்தம், கவலை அதிகமாக இருக்குமாம். காரணம் நாம் வாழும் சூழல். நாம் நகர்ப்புற சூழல்களிலோ அல்லது அலுவலகத்திலோ நாள் முழுவதும் இருக்கும்போது, ஏதோ ஒன்றை தாங்கிக்கொண்டு இருப்பதுபோலவே ஒரு மன ஓட்டம் இருந்துக்கொண்டே இருக்கும். இதன் விளைவாக எப்போதும் ஒரு மனசோர்வு இருக்கும். ஒருநிலையில் மிகவும் அழுத்தமாக இருக்கிறது வெளியே போகலாம் எனக்கூறி, பூங்கா அல்லது ஷாப்பிங் மால்களுக்கு செல்வோம். அல்லது வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வோம். ஏன் பூங்காவிற்கு செல்கிறோம்? சுற்றுலாவிற்கு செல்கிறோம்? கொஞ்சம் நன்றாக உணர்வோம் என்பதற்காக. இதன்மூலம் நமது மனமும், உடலும் இயற்கையான சூழலில் இளைப்பாறுகின்றன என்பதை உணரலாம். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். இயற்கையோடு ஒன்றிருப்பது என்னென்ன நன்மைகளை மனதிற்கும், உடலுக்கும் வழங்கும் என்பதை பார்க்கலாம்.
மனத்திறன்களை மேம்படுத்தும்
இயற்கை சூழலில் இருப்பது நம் கவலைகள் அனைத்தையும் மறக்கச்செய்து, ஒருவித அமைதியை கொடுக்கும். எந்த சிந்தனையும் ஓடாது. மனம் தெளிவாக இருக்கும். வெளியில் இருப்பது நம் மனதில் நிம்மதியான விளைவுகளை ஏற்படுத்தும். அன்றாட வாழ்க்கையின் தேவைகளிலிருந்து தற்காலிகமாக தப்பிக்க இயற்கை நமக்கு மன அமைதியை அளிக்கும். இது உங்கள் படைப்பாற்றல் மற்றும் பிரச்சினைகளை கையாள கற்றுக்கொள்ளும் திறனையும் அதிகரிக்கும். இயற்கை சூழல் மகிழ்ச்சியான உணர்வுகளை அதிகரிக்கிறது. மேலும் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்த உதவுகிறது. உதாரணமாக சொல்ல வேண்டுமானால் ஏதேனும் மனக்குழப்பத்தில் அல்லது சிக்கலில் இருந்தால் வெளியே கொஞ்சம் நடந்து செல்லுங்கள். உங்களுக்கான விடை கிடைக்கும்.
மனக்குழப்பத்தில் அல்லது சிக்கலில் இருந்தால் வெளியே கொஞ்சம் நடந்து செல்லுங்கள்
மனஆரோக்கியம் மேம்படும்
அடிக்கடி வெளியே செல்வது இதய நோய்களை குறைக்க வழிவகுக்கும். அடிக்கடி வெளியே சென்றால் உங்கள் எலும்புகள், இரத்த அணுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமான வைட்டமின் டியை சூரிய ஒளியில் இருந்து பெறலாம். பசுமையான இடங்களுக்குத் தொடர்ந்து செல்வது மனச்சோர்வு அபாயத்தைக் குறைப்பதோடு, கவனச்சிதறலை தடுக்க உதவும். நாம் வெளியே இருக்கும்போது நன்றாக தூக்கம் வருவதை கவனிக்கலாம். இயற்கை ஒளியில் தினமும் வெளிப்படுவது தூக்கம்/விழிப்பு சுழற்சிகளை சீராக்க உதவுகிறது. டென்மார்க்கில் 1985 மற்றும் 2003 க்கு இடையில் பிறந்த 900,000 குழந்தைகளை ஆய்வு செய்ததில், அதிக பசுமையான இடங்களைக் கொண்ட சுற்றுப்புறங்களில் வாழ்ந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் மனநல கோளாறுகள் ஏற்படும் அபாயம் குறைவாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
என்ன செய்யவேண்டும்?
ஒரு நாளைக்கு ஒரு 5 நிமிடமாவது உங்கள் முகத்தில் சூரிய ஒளி படும்படி வெளியே நில்லுங்கள். இயற்கையை உணர காலில் இருக்கும் செருப்பை கழற்றிவிட்டு புல்லில் நடங்கள். வானிலை நன்றாக இல்லாவிட்டால், வீட்டில் ஜன்னலை திறந்துவைத்து இயற்கையை ரசியுங்கள். காற்றோட்டமாக வெளியில் நடந்து செல்லுங்கள். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஒரு சுற்றுலாவிற்கு செல்லுங்கள். உங்கள் சைக்கிளில் தூசியைத் தட்டிவிட்டு, அக்கம் பக்கத்தைச் சுற்றி வாருங்கள். உங்கள் நாயை அருகிலுள்ள பூங்காவிற்கு ஒரு நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் விரும்புவதைப் போலவே அவைகளும் இயற்கையை ரசிக்கும். ஒரு புத்தகத்தை எடுத்துட்டு, ஒரு நிழல் தரும் மரத்தடியில உட்காருங்க. வீட்டின் முற்றத்தில் ஒரு படரும் கொடியோ அல்லது ஏதேனும் ஒரு செடியை வளருங்கள். அடிக்கடி பூங்காக்களுக்கு செல்லுங்கள். இயற்கையோடு இணைந்து வாழுங்கள்.






