என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    இரவு தூங்கும் முன்பு ஆப்பிள் சாப்பிடலாமா?
    X

    இரவு தூங்கும் முன்பு ஆப்பிள் சாப்பிடலாமா?

    • ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
    • சிலருக்கு ஆப்பிள் சாப்பிட்ட பிறகு வாயு தொல்லை அல்லது வயிறு உப்புசம் ஏற்படலாம்.

    இரவு உணவு உட்கொண்ட பிறகு சிலருக்கு ஏதாவது பழமோ, நொறுக்குத்தீனியோ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். பெரும்பாலானவர்களின் தேர்வு வாழைப்பழமாகவே இருக்கும். ஆப்பிளும் சாப்பிடலாமா? என்ற குழப்பமும் சிலருக்கு எழுவதுண்டு. இரவில் ஆப்பிள் சாப்பிடுவது தவறல்ல. ஆனால் சாப்பிடும் நேரத்தையும், தூங்கும் நேரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. ஏனெனில் இரவில் ஆப்பிள் சாப்பிடுவதில் நன்மைகளும், தீமைகளும் ஒருசேர கலந்திருக்கின்றன.

    நன்மைகள்:

    ஆப்பிளில் பெக்டின் நிறைந்துள்ளது. இது கரையக்கூடிய நார்ச்சத்தை கொண்டிருப்பதால் நீண்ட நேரம் வயிறு நிறைவாக இருக்கும் உணர்வை தரும். அதனால் இரவில் சிற்றுண்டி அதிகம் சாப்பிடுவதையும் கட்டுப்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவையும் சீராக வைத்துக்கொள்ள உதவும். குறிப்பாக உடல் எடையை குறைக்க அல்லது பசியை நிர்வகிக்க முயற்சிப்பவர்களுக்கு ஆப்பிள் சிறந்த தேர்வாக இருக்கும்.

    ஆப்பிள்களில் உள்ளடங்கி இருக்கும் பிரக்டோஸ் நார்ச்சத்து, சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கும். இதனால் ரத்த சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கும். பதப்படுத்தப்பட்ட இனிப்புகளை விட இரவில் சாப்பிட ஏற்றதாக ஆப்பிள் விளங்கும்.



    இரவு சாப்பிட்ட பின்பு வயிறு உப்புசமோ, வயிறு வீங்கியோ செரிமானம் மந்தமாக நடப்பதாக உணர்ந்தாலோ, அதன் காரணமாக இரவில் தூக்கம் வருவதற்கு தாமதித்தாலோ ஆப்பிள் சாப்பிடலாம். ஏனெனில் ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எனினும் கார்போஹைட்ரேட்டுகள் அல்லது வறுத்த உணவுகளுடன் ஆப்பிளை உட்கொள்ள வேண்டாம்.

    எப்போது சாப்பிடலாம்?

    தூங்க செல்வதற்கு 30 முதல் 60 நிமிடங்களுள் சாப்பிடுங்கள். அது ஜீரணமாவதற்கு போதிய கால அவகாசத்தை ஏற்படுத்திக்கொடுக்கும். சிவப்பு நிற ஆப்பிளை சாப்பிடுவது நல்லது. அது செரிமானத்தை எளிதாக்கும். ஆப்பிளுடன் பீனட் பட்டர் போன்ற புரதம் நிறைந்த உணவுப்பொருட்களை சேர்த்து உட்கொள்ளலாம். அது ரத்த சர்க்கரையை சமப்படுத்தி வயிறை முழுமையாக உணர வைக்கும். பாலுடன் ஆப்பிள் சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆப்பிளை லேசாக தீயில் சுட்டு எடுத்தோ, வேகவைத்தோ சாப்பிடலாம். அது ஆப்பிளை பச்சையாக சாப்பிடுவதை விட எளிதில் செரிமானமாகுவதற்கு வழிவகை செய்யும்.

    தீமைகள்:

    சிலருக்கு ஆப்பிள் சாப்பிட்ட பிறகு வாயு தொல்லை அல்லது வயிறு உப்புசம் ஏற்படலாம். அத்தகைய உணர்திறன் மிக்க வயிற்று பிரச்சனை கொண்டவர்கள் ஆப்பிள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். விரும்பும் பட்சத்தில் பாதி ஆப்பிள் சாப்பிடலாம். அல்லது ஆப்பிளை வேகவைத்து உட்கொள்ளலாம்.

    இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்து சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களும் ஆப்பிளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் ஆப்பிளில் அதிக நீர்ச்சத்து உள்ளது. அதனால் சிறுநீர் அதிகம் கழிக்க நேரிடும்.

    ஆப்பிளை சாப்பிட்ட உடன் தூங்குவதும் நல்லதல்ல. சிலருக்கு அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தும்.

    பழங்களை துண்டுகளாக நறுக்கி சாப்பிடும்போது சிலர், சில துண்டுகளை அப்படியே வைத்து விட்டு தங்கள் வேலையை தொடர்வார்கள். சில மணி நேரம் கழித்து பார்க்கும்போது அவை பழுப்பு நிறமாக மாறியிருக்கும். அவை ஏன் அந்த மாற்றத்திற்கு உள்ளாகின்றன தெரியுமா?

    ஆப்பிள், பேரிக்காய், கொய்யா போன்ற பழங்களை வெட்டிய பின்பு அவற்றில் இருக்கும் ஒரு நொதி காற்றிலுள்ள ஆக்சிஜனுடன் கலக்கிறது. அந்த வினையின் காரணமாக பழம் பழுப்பு நிறமாக மாறுகிறது. இந்த நிகழ்வு `நொதி பழுப்பு நிறமாக்கல்' என்று அழைக்கப்படுகிறது. இச்செயலின் காரணமாக பழுப்பு நிறமாக மாறிய பழம் அதன் இயல்பு சுவையை இழந்து விடும். இந்த மாற்றம் ஒரு பழம் வெட்டப்படும்போதோ, மரத்தில் இருந்து பழுத்து கீழே விழும்போது சேதமடைந்தாலோ நிகழும். அதனை தடுப்பதற்கான வழிமுறைகள்:

    * எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் அமிலத்தன்மை கொண்ட பழச்சாறை பழத்துண்டுகள் மீது பூசுவதன் மூலம் இந்த வினையை தடுக்கலாம்.

    * ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து பழத்துண்டுகளை சுமார் 2 நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டவும். பின்பு பழங்களை சாதாரண நீரில் கழுவி சாப்பிடலாம்.

    * ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சிறிது தேன் சேர்த்து கலக்கவும். இதில் அனைத்து பழத்துண்டுகளையும் சுமார் 30 முதல் 40 விநாடிகள் ஊற வைக்கவும். அதன்பிறகு தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இது பழங்களை சில மணி நேரங்களுக்குப் பிறகும் பிரஷ்ஷாக வைத்திருக்க உதவும்.

    * வெட்டப்பட்ட பழங்கள் கெட்டுப்போவதை தடுக்க பிரிட்ஜில் வைக்கலாம். அது பழங்கள் பழுப்பு நிறமாக்குவதை தாமதமாக்கும்.

    Next Story
    ×