என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    • உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க ஜிம் தேவையில்லை.
    • தினமும் படி ஏறி இறங்குவது ஒரு நல்ல உடற்பயிற்சியாக திகழ்கிறது.

    பொதுவாகவே தினமும் காலையில் எழுந்து வாக்கிங் சென்று வருவது நம்முடைய உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல், மனதிற்கும் நன்மை பயக்கும். ஆனால் இன்றைக்கு உள்ள இயந்திர உலகில், குடும்பத்தினருடன் பேசுவதற்கே நேரம் இல்லாத நிலையில், உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படுவது என்பது அனைவருக்கும் முடியாத காரியமாகிவிட்டது. சிலருக்கு உடற்பயிற்சி செய்வதற்கு நேரமும் கிடைக்காது, சிலருக்கு சூழலும் வாய்க்காது. இது போன்ற நேரத்தில் தான், நீங்கள் உடற்பயிற்சி செய்வதை விட படிக்கட்டில் ஏறி இறங்குவதால் பல ஆரோக்கிய நன்மைகளோடு உடல் எடையையும் குறைக்க முடியும் என்கின்றனர் உடற்பயிற்சி நிபுணர்கள்.

    உடம்பை ஃபிட்டாக வைத்திருக்க ஜிம் தேவையில்லை. இதற்கான சில வழிமுறைகளை இங்கே காணலாம். படி ஏறுதல் என்பது மிக சிரமமான ஒன்று தான். எலிவேட்டரோ, லிப்ட்டோ இருந்தால் நாம் அதைத்தான் முதலில் பயன்படுத்துவோம். ஆனால் உடல் வேலைகள் அதிகம் இல்லாத நபர்கள் படி ஏறுவது நல்ல பலனை அளிக்கும். இது இதய துடிப்பை அதிகரிக்கச் செய்து, அதிக கலோரிகளையும் எரிக்கிறது.

    நீங்கள் 10 நிமிடம் வாக்கிங் சென்று கரைக்ககூடிய கலோரியை வெறும் 5 நிமிடத்தில் படிக்கட்டில் ஏறி இறங்கினால் கலோரிகளும் குறைந்துவிடுவதோடு உடலுக்கு அதிக சக்தியைத் தருகிறது.

    நீங்கள் பகலில் வீட்டைச் சுற்றி செல்லவோ அல்லது பூங்காவிற்குச் செல்லவோ விரும்பாத வகையாக இருந்தால், நீங்கள் படிக்கட்டில் ஏறி இறங்கினாலே உங்களது உடல் எடையை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும். பொதுவாக தினமும் 10000 படிகள் என்பதை நீங்கள் இலக்காக கொண்டால், நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மையாக அமையும். எனவே நீங்கள் சில ஆயிரம் படிகளுடன் தொடங்கி, உங்கள் தினசரி வழக்கத்தில் கூடுதல் செயல்பாட்டைக் கொண்டுவர வேண்டும். தினமும் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை விட படிக்கட்டுகள் ஏறி இறங்குவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    உடற்பயிற்சி செய்வதை விட நீங்கள் படிக்கட்டில் ஏறி இறங்கும் போது உங்களின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்கின்றது சமீபத்திய ஆய்வுகள். மேலும் உடல் எடையை குறைக்க உதவுவதோடு, தினமும் 10 நிமிடமாவது, நீங்கள் படிக்கட்டில் ஏறி இறங்கினால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்ற பல்வேறு வியாதிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    கீழ்ப்படியில் நின்றுகொண்டு கால்களை இடுப்பு அகலம் அளவிற்கு விரித்து நில்லுங்கள். உடலை ஸ்வாட் நிலைக்கு, அதாவது கால்களை சற்று மடக்கி குதித்து முதல்படிக்குச் செல்லுங்கள். உடலை சமநிலையில் வைத்துக்கொண்டு, கால்களை இதே அளவுக்கு மடக்கி, ஒவ்வொரு படியாக குதித்துக் குதித்து மேல்நோக்கிச் செல்லுங்கள். மேலே ஏறியபிறகு, கீழே விழுந்துவிடாமல் ஒவ்வொரு படியாக இதே நிலையில் இப்போது இறங்கவேண்டும். இப்போது இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து 20 முறை செய்யவும். இதை கீழ் படியில் இருந்து மேற்படி வரை தொடர்ந்து ஒரு 1/2 மணி நேரம் செய்திடுங்கள்.

    தினமும் படி ஏறி இறங்குவது ஒரு நல்ல உடற்பயிற்சியாக திகழ்கிறது. உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று கார்டியோ வகை உடற்பயிற்சிகளை செய்வதைப் போன்று அதற்கு ஈடான நன்மைகளை தரக்கூடியது, இந்த படி ஏறுவது. கல்லூரி, அலுவலகம், வெளியே செல்லும் இடங்கள், அனைத்திலும் இப்பொழுது லிப்ட் வசதிகள் வந்துவிட்டன.

    பெரும்பாலும் நாம் அனைவரும் லிஃப்ட் வசதியை தேடி செல்கிறோம். ஆனால் வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் கர்ப்பிணிப்பெண்கள், போன்றோரை தவிர, அனைவரும் படிக்கட்டுகளை பயன்படுத்துவது மிகவும் நன்மையைத் தரும். குறிப்பாக உடல் எடை அதிகம் இருக்கிறது என்று கவலைப்படுபவர்கள் முடிந்தவரை படி இருக்கிறது என்றால், அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    • 30 நிமிடங்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டால் 250 முதல் 300 கலோரி உடலில் இருந்து செலவாகிவிடும்.
    • டான்ஸ் பிட்னெஸ் உடற்பயிற்சியின் புதிய பரிணாமம்.

    முற்றிலும் அழகுப்பெண்களின் வால் போஸ்டர்கள் அடங்கிய கண்ணாடி அறை. பார்க்கவே பரவசமூட்டக்கூடியதாக இருக்கும் அந்த பிரமாண்டமான நடன அறையில் பெண்கள் வரிசைகட்டி நிற்பார்கள். நடனம் ஆடுவதற்காக அவர்கள் அணிந்திருக்கும் உடைகள் அவர்களை கூடுதல் அழகாகக்காட்டும். அவர்களுக்கு முன்னால் பயிற்சியாளர் ஒருவர் வந்து நிற்பார்.

    சிறிது நேரத்தில் லத்தீன் இசை ஒலித்து, அந்த அரங்கத்தையே உற்சாகமாக்கும். கேட்பவர்களை எல்லாம் துள்ளல் போடவைக்கும் இசை அது. இசைக்கு ஏற்றபடி அந்த அழகுப் பதுமைகள் ஆடத்தொடங்க, பயிற்சியாளர் குரலை உயர்த்தி 'கமான் ஸ்பீட் அப்.. ஒன்..டூ..த்ரி! த்ரி ரெய்ஸ்.. த்ரி டவுன்' என்று கூறியபடி, எப்படி ஆடவேண்டும் என்பதை தானும் ஆடிக்காட்டுவார். எல்லோருமே ரசித்து, கை, கால், தலை உடல் அனைத்தையும் அசைத்து ஆனந்தமாய் ஆடுவார்கள்.

    அதே வேகத்தோடு 20 நிமிடங்கள் தொடரும் ஆட்டம், பின்பு வேகத்தை குறைக்கிறது. பத்து நிமிடங்கள் மிதமான வேகத்தில் ஆடிவிட்டு, மூச்சு வாங்க நிற்பார்கள். இசையும் நிறுத்தப்படுகிறது. பின்பு பூத்தூவல் 'டவல்' கொண்டு வியர்வையை துடைத்துவிட்டு, ஒரு மிடறு தண்ணீர் பருகிவிட்டு, ஆளாளுக்கு 'டாடா' காட்டிவிட்டு பிரிவார்கள். சென்னை, டெல்லி, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்கள் இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நாட்களில் நடக்கும் அன்றாட காட்சி இது.

    இதன் பெயர், டான்ஸ் பிட்னெஸ். இது உடற்பயிற்சியின் புதிய பரிணாமம். உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டே உடலை வலுப்படுத்தும் வித்தை இதில் கற்றுத்தரப்படுகிறது. சல்சா, ஜும்பா, டாப் டான்ஸ், பிளமிங்கோ, ரும்பா, பாலிவுட் டான்ஸ், ஏரோபிக்ஸ் டான்ஸ் போன்ற பலவித நடனங்கள் கலந்த கலவையாக இது இருக்கிறது. சாலையில் வாகன இரைச்சலுக்கு மத்தியில் 'வாக்கிங்' செல்ல முடியாதவர்களும், ஜிம்மில் இயந்திரங்களோடு தன் உடல் சக்தியை காட்டி மேம்படுத்த விரும்பாதவர்களும் ரசித்து ஆடி இந்த 'டான்ஸ் பிட்னெஸ்' சில் ஈடுபடுகிறார்கள்.

    முன்பெல்லாம் பிட்னெஸ் நடனம் என்றால் அது 'ஏரோபிக்ஸ்' மட்டுமே என்ற எண்ணமே இருந்தது. பின்பு தான் அதிரடியாக வெளிநாட்டில் இருந்து உள்ளே புகுந்தது, ஜும்பா. இசையும்-இயல்பாக வளைந்து நெளிந்து ரசித்து ஆடும் ஆட்டமும் கலந்த ஜும்பா மிக விரைவாகவே பெண்களை கவர்ந்துவிட்டது. பெருநகரத்து பெண்கள் அதை ரசித்து ஆடத் தொடங்கினார்கள். சல்சா, ஹிப்ஹாப், ஜாஸ் போன்ற நடனங்களையும் பெண்கள் விரும்பி கற்று, பயிற்சி பெறுகிறார்கள்.

    முறைப்படுத்தப்பட்ட இத்தகைய தொடர்ச்சியான நடனப் பயிற்சிகளால், உடல் எடை குறையும். எலும்புகள் பலமடையும். தசைகள் வலுப்பெறும். உடலின் சமச்சீரான தன்மை மேம்படும். அதோடு அன்றன்று ஏற்படும் மன அழுத்தமும் காணாமல் போய்விடும். அதனால் உடலும், மனமும் ஆரோக்கியமும் உற்சாகமும் அடைகிறது.

    "முதலில் எனக்கு இந்த பயிற்சி மீது நம்பிக்கை குறைவாகத்தான் இருந்தது. பின்பு என்னோடு பயிற்சி பெறுபவர்களுடன் நட்புணர்வு ஏற்பட்டது. அவர்களோடு சேர்ந்து நடனமாடியபோது உற்சாகம் பிறந்தது. நடனப் பயிற்சி முடிந்து வீடு திரும்பும்போது உடலே ஒரு இறகுபோல் மென்மையாகிவிட்டதைப்போல் உணர்ந்தேன். அது ஒரு விவரிக்க முடியாத அனுபவம்"- என்கிறார், இந்த பயிற்சியை பெறும் குடும்பத்தலைவி சிந்தியா.

    இத்தகைய 'பிட்னெஸ் டான்ஸ்' களில் மிக அதிகமாக கால் தசைகள் பயன்படுத்தப்படுகின்றன. கைகளிலும், கால்களிலும் உள்ள மூட்டுப்பகுதிகள் மற்றும் இடுப்பும் ஒருங்கிணைந்து நன்றாக செயல்படுகின்றன. நடனத்தில் கால்களை உயர்த்தி தூக்கிப் பிடிக்கும்போது முக்கியமான தசைகள் மட்டுமின்றி, சிறிய தசைநார்களும் நன்றாக இயங்கி அதிக செயல்திறனைப்பெறுகின்றன. தொடர்ந்து இந்த பயிற்சிகளை பெறும்போது, விரும்பியபடி எல்லாம் உடலை வளைக்கவும், நெகிழ வைக்கவும் முடியும். இதனால் உச்சி முதல் பாதம் வரை வலுப் பெறுகிறது.

    இசையில் மூழ்கி, அதற்கு தக்கபடி நடனத்தை ஆடும்போது மனதில் சந்தோஷம் எழுகிறது. அது தொடர்பான ஹார்மோன்கள் சுரந்து, உடல் முழுவதும் புத்துணர்ச்சியை உருவாக்குகிறது. இத்தகைய நடனங்கள் இதய தசைகளை வலுப்படுத்துவதால் இதய நோய்களால் ஏற்படும் பாதிப்பும் குறைகிறது.

    இந்த பிட்னெஸ் டான்ஸ் பயிற்சியை மேற்கொள்ளும் 50 வயது பெண்மணியான ரக்ஷனா, "நான் அளவுக்கு அதிகமான உடல் எடை கொண்டிருந்தேன். எடையை குறைக்க எத்தனையோ வழிமுறைகளை மேற்கொண்டேன். அவை எதையுமே அதிக நாட்கள் என்னால் செய்ய முடியவில்லை. அத்தனையும் எனக்கு மனச்சோர்வையே தந்தன. இந்த பிட்னெஸ் டான்ஸ் பற்றி கேள்விப்பட்டபோது, எனக்கு இதில் அதிக ஈடுபாடு எதுவும் தோன்றவில்லை. ஆனாலும் இதையும் செய்து பார்ப்போமே என்ற எண்ணத்தோடு தான் இதில் ஈடுபட்டேன். ஒரு வாரத்திலே எனக்கு இதில் நம்பிக்கை உருவாகி விட்டது. மிகுந்த உற்சாகத்தோடு இதை செய்கிறேன். உடல் எடை குறைந்ததோடு என் வாழ்க்கைமுறையே இதனால் மாறிவிட்டது. எனக்கு இப்போது தன்னம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது" என்கிறார்.

    உடலில் இருக்கும் தேவையற்ற கலோரிகளை எரிக்கும் ஆற்றல் இந்த பயிற்சிக்கு இருக்கிறது. 60 கிலோ எடைகொண்ட ஒரு பெண், 30 நிமிடங்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டால் 250 முதல் 300 கலோரி உடலில் இருந்து செலவாகிவிடும். அதே நபர் அதே அளவு நேரம் நடக்கும்போது 150 கலோரியும், ஓடும்போது 300 கலோரியும் செலவாகும். நீந்தும்போது 240 கலோரியும், சைக்கிளிங் செய்யும்போது 240 கலோரியும் வெளியாகும். இவைகளோடு ஒப்பிடும்போது 'பிட்னெஸ் டான்ஸ்' ரசித்து செய்யும் பயிற்சியாகும். அதனால் இது ஆனந்தமான அனுபவத்தை தரும். அதிகமான அளவிலான கலோரியை செலவிட வைப்பதில் ஜும்பா நடனம் முதலிடத்தில் இருக்கிறது.

    ஜும்பா, பெண்கள் அதிகம் விரும்பும் உடற்பயிற்சி நடனமாக இருக்கிறது. ஹிப் ஹாப், சல்சா,டாம்கோ, சோக்கா போன்ற பலவகையான நடனங்களின் கலவை இதுவாகும். மிக வேகமாக இதனை ஆடவேண்டும். அதனால் கலோரியை எரிப்பதிலும் முன்னிலை வகிக்கிறது. இதயம், முதுகு, இடுப்பு பகுதியை இது அதிகம் வலுப்படுத்தும், அதனால் இதனை ஆடும் பெண்கள் கட்டுக்குலையாத உடலைப் பெறுகிறார்கள்.

    சல்சா நடனம் இடுப்பு, கை, தோள் போன்ற பகுதிகளுக்கு அதிக வலுவை தரும். உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்கும். மன அழுத்தத்திற்கும் நல்ல மருந்து.

    • கண் பார்வையைக் கூர்மையாக்குகிறது
    • இருதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

    ஆசனங்களின் அரசன் எனச் சொல்லப்படும் ஆசனம் சிரசாசனம். என்றும் இளமையான தோற்றத்தையும், சோம்பலை போக்கியும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் தரும் ஆற்றல் மிக்க ஆசனம்.

    மூளையைச் செம்மைப்படுத்தி, அறிவாற்றலை அதிகரித்து, உடலுக்கும், முகத்திற்கும் தெளிவையும் வலுவையும், வசிகரத்தையும் தரும் ஆசனமாகும். மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூளை நலனைப் பாதுகாத்தல், சஹஸ்ராரம், குரு மற்றும் ஆக்ஞா சக்கரங்களைத் தூண்டுவதன் மூலம் மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துதல் ஆகியவை சிரசாசனத்தின் முக்கிய பலன்களில் சில.

    பெரும்பாலான யோகப்பயிற்சியாளர்களுக்கு சிரசாசனம் பயில்வதன் மூலமே ஆசனப் பயிற்சி முழுமையடைகிறது.

    மேலும் சில பலன்கள் :

    மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

    முதுகுத்தண்டை பலப்படுத்துகிறது

    முதுகுத் தசைகளை உறுதியாக்குகிறது

    நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது

    நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துகிறது

    ஹார்மோன்களின் இயக்கத்தை மேம்படுத்துகிறது

    தோள்களையும் கரங்களையும் பலப்படுத்துகிறது

    நுரையீரல் நலனைப் பாதுகாக்கிறது; ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட மூச்சுக் கோளாறுகளை சரி செய்கிறது

    ஆழ்ந்து சுவாசிக்க உதவுகிறது

    இருதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

    வயிற்றுத் தசைகளை உறுதியாக்குகிறது

    வயிற்று உள்ளுறுப்புகளின் இயக்கத்தை செம்மையாக்குகிறது

    சீரணத்தைப் பலப்படுத்துகிறது

    இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது

    மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது

    மறு உற்பத்தி உறுப்புகளின் இயக்கத்தை சீர் செய்கிறது

    உடல் முழுமைக்கும் ஆற்றல் அளிக்கிறது

    ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட தலைவலிகளைப் போக்குகிறது

    தூக்கமின்மையைப் போக்குகிறது

    கண் பார்வையைக் கூர்மையாக்குகிறது

    கால்களை பலப்படுத்துகிறது; கால் வீக்கத்தைப் போக்குகிறது

    வெரிகோஸ் வெயின் பிரச்சினையை சரி செய்ய உதவுகிறது

    கூந்தல் நலனைப் பாதுகாக்கிறது; நரைமுடி தோன்றுவதை ஒத்திப் போடுகிறது

    கவனத்தைக் கூர்மையாக்குகிறது

    நினைவாற்றலை மேம்படுத்துகிறது

    மன அழுத்தத்தைப் போக்குகிறது

    செய்முறை

    தவழும் நிலைக்கு வரவும். உங்கள் உள்ளங்கைகள் தோள்களுக்கு நேர் கீழாகவும், கால் முட்டி இடுப்புக்கு நேர் கீழாகவும் இருக்க வேண்டும்.

    கைகளை மடித்து முன்கைகளைத் தரையில் வைக்கவும்.

    இரண்டு கைவிரல்களையும் பிணைத்து உள்ளங்கைகள் உங்களை நோக்கி இருக்குமாறு வைக்கவும்.உச்சந்தலையை இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையில் தரையில் வைக்கவும். இப்போது உங்கள் உள்ளங்கைகள் உங்கள் தலையின் பின்புறம் அணைத்தாற்போல் இருக்கும்.

    மூச்சை உள்ளிழுத்தவாறு கால் முட்டிகளைத் தரையிலிருந்து உயர்த்தவும்.

    மூச்சை வெளியேற்றியவாறு பாதங்களை உங்கள் கை முட்டி நோக்கிக் கொண்டு வரவும். இப்போது உங்கள் உடல் ஆங்கில எழுத்து 'V'-யைத் திருப்பிப் போட்டது போல் இருக்கும்.

    மெதுவாக மேலும் கால்களை கை நோக்கி, உங்கள் முதுகு நேராகும் வண்ணம் கொண்டு வரவும்.

    இப்போது தலையின் மீது உடல் எடையைப் போடாமல் உங்கள் முன்கைகள் பெரும்பாலும் உடல் எடையைத் தாங்குமாறு இருக்கவும்.

    மெதுவாக வலது காலைத் தரையிலிருந்து மடித்து இடுப்பு உயரத்திற்கு கொண்டு வரவும். பின் இடது காலையும் மடித்து வலது கால் அருகே கொண்டு வரவும். பின் இரண்டு கால்களையும் மேல் நோக்கி நேராக உயர்த்தவும்.

    துவக்கத்தில் சில வினாடிகள் இந்நிலையில் இருந்தால் போதுமானது. நாளடைவில் பயிலும் நேரத்தை அதிகரித்து சுமார் மூன்று முதல் 5 நிமிடங்கள் வரை சிரசாசனத்தில் இருக்கலாம்.

    ஆசன நிலையிலிருந்து வெளிவர மெதுவாக வலது காலை மடித்து இடுப்பு உயரத்திற்கு கொண்டு வந்து பின் இடது காலை வலது கால் அருகே கொண்டு வரவும். பின் வலது காலைத் தரையில் வைக்கவும்.

    பின் இடது காலை வலது கால் அருகே வைக்கவும்.

    மெதுவாக இடுப்பைக் கீழிறக்கி பாலாசனத்தில் சில வினாடிகள் ஓய்வெடுக்கவும்.

    குறிப்பு

    ஆரம்ப நிலைப் பயிற்சியாளர்களும் அதிக உடல் எடை உடையவர்களும் கண்டிப்பாக சிரசாசனத்தைத் தவிர்க்கவும்.

    தீவிர கழுத்துப் பிரச்சினை, முதுகுத்தண்டு கோளாறு, இடுப்புப் பிரச்சினை, மூட்டுப் பிரச்சினை, அதிக இரத்த அழுத்தம், இருதய கோளாறு, கண் அழுத்த நோய், குடலிறக்கம், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் சிரசாசனம் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

    • ஆரோக்கிய நன்மைகளை வாரித் தருகிறது ஜாக்கிங்.
    • ஜாக்கிங் செய்வதனால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்.

    பொதுவாக தினமும் காலையில் ஜாக்கிங் செய்வது வாக்கிங் செல்வதை விட நல்லது என்று கூறப்படுகின்றது. இதனால் அதிகப்படியான கலோரியை மிகக் குறைந்த நேரத்தில் எரிக்க முடியும்.

    மூளையில் இருந்து கால்கள் வரை பல ஆரோக்கிய நன்மைகளை வாரித் தருகிறது ஜாக்கிங். எலும்புகளுக்கும், கால்களுக்கும் மட்டுமல்ல நல்ல உறக்கத்திற்கு, ஆயுளை நீட்டிக்க, மனநிலையில் சிறந்த முன்னேற்றம் காண என உடல் ரீதியாக பல நன்மைகளை தருகிறது ஜாக்கிங். அதற்கென்று நீங்கள் உசைன் போல்ட்டை போல எல்லாம் ஓட வேண்டும் என்றில்லை.

    மிதமான வேகத்தில் ஜாக்கிங் போல ஓடி பயற்சி செய்தாலே போதுமானது. இனி, ஜாக்கிங் செய்வதனால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்.

    மன அழுத்தம் இருப்பவர்கள் குறைந்தது தினமும் அரைமணி நேரம் ஜாக்கிங் செய்து வந்தால் மனநிலையில் நல்ல முன்னேற்ற காணலாம்.

    தினமும் 10 - 20 நிமிடங்கள் ஜாக்கிங் செய்து வந்தால், உங்கள் மரணத்திற்கான சதவீதம் 30 - 60% குறைகிறதாம்.

    தினமும் ஜாக்கிங் செய்வதனால் உடல் எடை குறையும். வாக்கிங் செய்வதை விட இரண்டில் இருந்து மூன்று மடங்கு வரை அதிக உடல் எடைக் குறைவு ஏற்படும்.

    தினமும் ஜாக்கிங் செய்பவர்களுக்கு மற்றவர்களை விட 25% குறைவாக தான் மூட்டு வலிப்பிரச்சனைகள் வருகிறது. ஜாக்கிங் செய்வதை வழக்கமாக வைத்திருந்தால், உங்கள் நுரையீரல் நன்கு விரிவடையும், இரத்த ஓட்டம் சீராகும், உடற்திறனில் நல்ல மாற்றம் தெரியும்.

    தினமும் குறைந்தது ஒரு கி.மீ தூரம் ஜாக்கிங் சென்று வந்தீர்கள் என்றால் இதயப் பாதிப்புகள் வரும் வாய்ப்புகள் 50% வரை குறையும். குறைந்தது வாரம் ஐந்து நாட்களாவது அரைமணி நேரம் ஜாக்கிங் செய்து வந்தால் நீரிழிவு நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

    கால், தொடை, இடுப்பு போன்ற கீழ்ப் பகுதிகளின் வலிமை அதிகரிக்கிறது. தசைநார்கள் வலிமை பெறுகின்றன.

    ஜாக்கிங் செய்யும்போது, உடலில் உள்ள கால்சியம் எலும்புகளால் நன்றாகக் கிரகிக்கிப்படுகிறது. இதனால், எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது. எலும்பு தொடர்பான நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. இதனால் முதுமையில் ஏற்படும் மூட்டுப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் ஜாக்கிங் செய்வதனால் தூக்கமின்மை குறையும், நல்ல உறக்கம் வரும்.

    • உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.
    • நீச்சல் தெரியாதவர்கள் முறைப்படி கற்றுக் கொள்வது அவசியம்.

    நீச்சல் ஒரு நல்ல உடற்பயிற்சி. உடலின் அனைத்து தசைகளையும் ஒரே நேரத்தில் பயிற்சி செய்ய வைக்கிறது என்பது தெரிந்தது. தொடர்ந்து நீச்சல் பயிற்சியை மேற்கொண்டால் உடல் வலுமைப் பெறும். நீச்சலானது எந்த வயதிலும், எந்த நிலையிலும் செய்யக்கூடியது. அதிலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் என்று அனைவரும் செய்யக் கூடியப் பயிற்சிகளில் இதுவும் ஒன்று. தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வந்தால் உடல் தசைகளை வலுவடையும். நீச்சல் என்பது பண்டைய காலம் முதலே ஒரு தற்காப்பு முறையாகவே இருந்து வருகிறது. மற்ற உடற்பயிற்சிகளை நாம் ஒப்பிடுகையில் நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது.

    நீச்சல் பயிற்சி நம் உடலில் உள்ள பெரும்பாலான பகுதிகளை வலிமைப்படுத்தும் நல்ல உடற்பயிற்சியாக அமைகின்றது. தற்போது உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. சராசரி ஆண் (ஆ) மற்றும் (பெ) ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளுவதன் மூலம் எரிக்கபடும் கலோரிகள். நீச்சல் சுற்றுக்களை, /ப்ரீஸ்டைல், வேகமாக, தீவிரமான முயற்சி மேற்கொள்ளும் போது அ=862. கி.கலோரிகள் , பெ=739. கி.கலோரிகள் எரிக்கப்படும். நீச்சல் சுற்றுக்களை, /ப்ரீஸ்டைல், மிதமாக பயிற்சி மேற்கொள்ளும் போது அ=603. கி.கலோரிகள், பெ=518. கி.கலோரிகள் எரிக்கப்படும்.

    குழந்தைகளுக்கு ஐந்து வயதில் நீச்சல் கற்றுத்தர ஆரம்பிக்கலாம். பதினெட்டு வயதுக்குள் நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உடலின் எடை கூடிவிடும். மூட்டுகளில் அசையும் தன்மையும் நெகிழ்வுத் தன்மையும் குறைந்துவிடும். இந்தக் காரணங்களால், நீச்சல் கற்றுக்கொள்வது கடினம். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் நீச்சல் பலனளிக்கும். உடல் தசைகள் வலிமையாகும். இதனால் அழகும் கூடும். கணினியில் வேலை பார்ப்பவர்கள் முதுகு வலியால் அவதிப்படுவார்கள். நீச்சல் அடிப்பதால் முதுகு தண்டுவடம் வலிமை பெற்று முதுகு வலி ஏற்படாது. தோள் வலி, கழுத்து வலியும் நீங்கும்.

    நீச்சல் இடிப்பதால் பெண்களுக்கு உடலில் ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகள் வராது. நீச்சல் பயிற்சி என்பது ஒரு காற்றலைப் பயிற்சி. நுரையீரல் வலுப்பெறுவதற்கும் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கும் நீச்சல் பயிற்சி நன்கு உதவுகிறது. தொடர்ந்து நீச்சல் பயிற்சி செய்து வருபவர்களுக்கு எலும்பு மூட்டு தொடர்பான நோய்கள் வருவது குறைகிறது. நீச்சல் தெரியாதவர்கள் முறைப்படி கற்றுக் கொள்வது அவசியம். அதன் பின்னரே இந்த வகை பயிற்சி செய்ய வேண்டும். சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் நல்ல வலுவுடன் இருக்கும். ஆரோக்கியம் கைகூடும்.

    • கைகளை வலுவாக்க இந்த 2 ஆசனங்கள் உதவும்.
    • கைகளில் உள்ள சதையை குறைக்க இந்த யோகாசனத்தை செய்யலாம்.

    அர்த்த பிஞ்ச மயூராசனம்

    அர்த்த பிஞ்ச மயூராசனம், 'டால்பின் போஸ்', 'அரை மயில் தோகை வடிவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு அதிகம் பரிந்துரைக்கப்படும் யோகாசனங்களில் இதுவும் ஒன்று.

    செய்முறை: யோகா விரிப்பில் முழங்காலிட்டு கைகளை முன்னோக்கி வைத்து குனியவும். இப்போது உள்ளங்கைகளை தலைக்கு நேர் திசையில் தரையில் பதித்து, முழங்கையில் சிறிது அழுத்தம் கொடுக்கவும். பின்னர், கால்களை தரையில் பதித்தபடி, இடுப்பு மற்றும் உடலை மேல் நோக்கி உயர்த்தவும். முழங்கையில் அழுத்தம் கொடுத்தவாறு, கால்கள் இரண்டையும் பின்னோக்கி முடிந்தவரை நேராக நீட்டவும். இப்போது கால்களை சற்று அகற்றி வைத்து, முழு உடலின் எடையும் முழங்கைகளில் தாங்கி இருக்குமாறு செய்யவும். இந்த நிலையில் நெற்றி, தரையைப் பார்த்தபடி இருக்க வேண்டும். இந்த அமைப்பில் 20 வினாடிகள் வரை இருக்கலாம். பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வந்து, சில வினாடிகள் ஓய்வெடுத்த பின்னர் தொடர்ந்து இந்தப் பயிற்சியை 5 முறை செய்யவும். சீரான சுவாச முறையை இப்பயிற்சியின்போது பின்பற்றலாம்.

    முதுகுத்தண்டு, கை, கால், தோள்பட்டை போன்ற பகுதிகளில் காயங்கள் மற்றும் தீவிர வலி உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் பார்வைக்கோளாறு பிரச்சினை உள்ளவர்கள் இந்தப் பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

    பலன்கள்: தோள்பட்டை, முழங்கை மற்றும் கைகளின் எலும்புகள் வலுப்பெறும். நுரையீரல் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாடு மேம்படும். முதுகுத்தண்டு பலப்படும். தோள்பட்டைப் பகுதி மற்றும் முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்புகள் இருப்பின் குணமாகும்.

    ஊர்த்துவ முக ஸ்வனாசனம்

    'ஊர்த்து' என்றால் 'மேல் நோக்கி', முக என்றால் 'முகம்', ஸ்வனா என்றால் 'நாய்' என்று அர்த்தமாகும். முதுகையும், தலையையும் பின்னோக்கி வளைத்து செய்யப்படும் ஆசனம் என்பதால், இதற்கு 'ஊர்த்துவ முக ஸ்வனாசனம்' என்று பெயர்.

    செய்முறை: யோகா விரிப்பில், குப்புறப்படுக்கவும். இப்போது கைகளை மார்புப் பகுதியின் பக்கவாட்டில் கொண்டு வந்து, உள்ளங்கைகளை தரையில் பதிக்கவும். கைகளில் முழு அழுத்தத்தையும் கொடுத்து, உடலை உயர்த்தி, முடிந்தவரை முதுகையும், தலையையும் பின்னோக்கி வளைக்கவும். இந்த நிலையில், பாதங்கள் மேல் நோக்கி பார்த்தபடி இருக்க வேண்டும். காலில் அழுத்தம் கொடுத்து, தொடை மற்றும் முழங்கால் தரையில் பதியாதபடி சற்று உயர்த்தவும். இந்த நிலையில் 10 வினாடிகள் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு வரலாம். தொடர்ந்து இந்தப் பயிற்சியை 5 முறை செய்யலாம். தீவிர முதுகு வலி, எலும்பு முறிவு, காயம் உள்ளவர்கள் இந்த பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.

    பலன்கள்: மணிக்கட்டுகள், தோள்பட்டை, கணுக்கால் பகுதிகளை வலுப்படுத்தும். உடல் தசைகள் விரிவடைய உதவும். இடுப்புப்பகுதி மற்றும் கால் தசைகள் தளர்வடையும். உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் கட்டுப்படுத்தும். முதுகு மற்றும் இடுப்பு வலியை குணப்படுத்தும். உடலின் தோற்றத்தை மேம்படுத்தும்.

    • நடைப்பயிற்சி பல்வேறு பலன்களைத் தரும்.
    • மணல், பாதங்களில் உள்ள இறந்த சரும அணுக்களை நீக்க உதவுகிறது.

    இன்றைய மோசமான வாழ்வியல் சூழலில் நமது உடல் நலமானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நாம் எடுத்து கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான். இதற்கு அடுத்தாக நமது அன்றாட செயல்பாடுகளை சொல்லலாம். தினமும் ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது, மோசமான உணவு பழக்கம், உடற்பயிற்சி இன்மை போன்றவற்றால் தான் பெரிய பாதிப்புகள் உடலுக்கு ஏற்படுகிறது. இதை சரி செய்வதற்கு பலர் தேர்ந்தெடுக்கும் வழி தான் நடைப்பயிற்சி.

    வேகமான நடைப்பயிற்சி உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. வயதானவர்களுக்கு வேகமான நடைபயிற்சி நல்லது என்றாலும், அதை படிப்படியாக அதிகரிக்கலாம். அதிக ஒருவேளை உங்களுக்கு வேகமாக நடப்பதில் சிக்கல் இருந்தால், மெதுவாக நடக்க முயற்சி செய்யுங்கள்.நீங்கள் எவ்வளவு ஸ்டெப்ஸ் நடந்தீர்கள் என்பதுடன், நீங்கள் நடந்ததற்கான நேரத்தின் கால அளவைக் குறித்து கொள்ளுங்கள். இந்த வேகமான நடைபயிற்சியானது அடிவயிற்றின் ஆழமான கொழுப்புகளை குறைக்க உதவுகிறது என்று பல வல்லுநர்கள் கூறுகிறார்கள். இன்று வெறும் கால்களில் மணலில், தரையில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

    காலணி அணியாமல் வெறும் கால்களில் தரையில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்

    காலணி அணியாமல் வெறும் கால்களால் நடக்கும் போது ஏற்படும் நன்மைகள் பல. அவற்றில் முக்கியமான சில நன்மைகள்:

    காலணி போடுவதால் பெருமளவில் பயன்படுத்தப்படாத பாத தசைகள் வெறும் கால்களில் நடக்கும் போது நன்கு இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக பாதம், கணுக்கால் மற்றும் ஆடுசதைகளும் பலம் பெறுகின்றன.

    வெறும் கால்களால் நடக்கும் போது தூக்கம் சார்ந்த பிரச்சினைகள் நீங்குவதாக ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன.

    மேலே குறிப்பிட்டிருக்கும் ஆய்வின் மூலம் வெறும் கால்களில் நடக்கும் போது மூட்டு வலி குறைவதாகவும் தெரிய வந்துள்ளது.

    காலணி அணியாமல் வெறும் கால்களில் நடக்கும் போது இரத்த அழுத்த அளவு சீராகிறது.

    வெறும் கால்களில் நடக்கும் போது நோய் எதிர்க்கும் திறன் அதிகரிக்கிறது.

    வெறும் கால்களில் மணலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்

    பொதுவாகவே நடைப்பயிற்சி பல்வேறு பலன்களைத் தரும் என்றாலும் குறிப்பிட்ட வகை மேற்பரப்புகளில் நடப்பது சில சிறப்பு நன்மைகளைத் தரும். வெற்றுக் கால்களில் மணலில் நடப்பதும் அத்தகைய சிறப்புப் பலன்களைத் தருகிறது.

    1) கால் தசைகள் வலுவாகின்றன

    காலணிகளைப் போட்டு நடப்பதை விட வெறும் கால்களில் மணலில் நடக்க கூடுதலான ஆற்றல் தேவை. மண்ணில் கால் பதிக்கும் போது பாதங்கள் புதைவதால், கால் தசைகளின் கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. இவ்வாறு நடக்கும் போது கணுக்கால்களும் பாதங்களும் அதிக பலம் பெறுகின்றன.

    2) உடல் எடை குறைகிறது

    சாதாரண தரையில் நடப்பதை விட மணலில் நடக்கும் போது, குறிப்பாக, வெற்றுக் கால்களில் மணலில் நடக்கும் போது, அதிக அளவு கலோரிக்கள் எரிகின்றன. இதனால் கூடுதலான திறனுடன் உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.

    3) பாதங்களின் நலன் மேம்படுகிறது

    மணல், பாதங்களில் உள்ள இறந்த சரும அணுக்களை நீக்க உதவுகிறது. பாதங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாதங்களில் உள்ள சொரசொரப்பைப் போக்கவும் உதவுகிறது.

    4) பாதங்களில் உள்ள அக்குபங்க்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன

    வெறும் கால்களில் மணலில் நடப்பதால், பாதங்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதன் விளைவாக, உடலில் உள்ள சுரப்புகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

    5) இடுப்புப் பகுதியின் பலம் அதிகரிக்கிறது

    நாம் நடக்கும், ஓடும் முறையில் இருக்கும் தவறு (wrong posture) வெறும் கால்களில் மணலில் நடக்கும் போது சரி செய்யப்படுகிறது. இதன் காரணமாக இடுப்புத் தசைகள் பலம் பெறுகின்றன.

    6) மன அழுத்தம் நீங்குகிறது

    மணலில் வெறும் கால்களில் நடக்கும் போது மன அழுத்தம் நீங்கி மனம் அமைதி பெறுகிறது. வெறும் கால்களில் நடக்கும் போது பூமியோடு நமக்குள்ள தொடர்பு பலமாகிறது. அது நம் உடல், மன நலத்தில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

    கடற்கரையில் நடக்கும் போது கடல் அலைகளின் ஆர்ப்பரிப்போ அமைதியான கடல் அலையின் ஓசையோ நம் மனதை கொள்ளை கொள்ளும். அத்தகைய சூழலே மன அழுத்தத்தைப் போக்கவும் மன அமைதியை உண்டாக்கவும் உதவும்.

    • யோகா பயிற்சி உடலை அமைதிப்படுத்துகிறது.
    • உடற்பயிற்சிகளை முழு உடலையும் உற்சாகப்படுத்துகிறது.

    யோகா ஆசனம் அல்லது உடற்பயிற்சி இரண்டும் வேறுபட்டவை மற்றும் ஒவ்வொன்றும் தனித்துவமான நன்மைகளை கொண்டு உள்ளன. ஆனால், இவை அடிக்கடி பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்துகின்றன! இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    ஒரு ஆசனம் நிலையானதாகவும் வசதியாகவும் இருக்க வேண்டும். அதேசமயம், உடற்பயிற்சி என்பது தசை வலிமை, உடல் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வகையான செயல்பாடு ஆகும்.

    இரண்டுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், யோகாவிற்கும் உடற்பயிற்சிக்கும் இடையே பத்து முக்கிய வேறுபாடுகள் உள்ளன:-

    * யோகா ஆசனம் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது. மேலும், இது மிகவும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது. உடற்பயிற்சி நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது.

    * யோகா ஆசனம் என்பது அதிக செயல்முறை சார்ந்த பயிற்சி. உடற்பயிற்சி என்பது மிகவும் இலக்கு சார்ந்த பயிற்சி.

    * யோகா ஆசன வகையானது, மெதுவான டைனமிக் அசைவுகளை உள்ளடக்கிய அனபோலிக் ஆகும். இது போஸ்களை வைத்திருப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது மற்றும் இது ஆற்றலைச் சேமிக்கும் மற்றும் உருவாக்கும் திறன் கொண்டது. உடற்பயிற்சி வகையானது வேகமான இயக்கங்களை உள்ளடக்கியது மற்றும் ஆற்றலை உடைக்கும் திறன் கொண்டது.

    * யோகா ஆசனப் பயிற்சியானது சிகிச்சைமுறை குணப்படுத்தும் பலன்களைக் கொண்டுள்ளது மற்றும் நோயுற்றவர்கள் அல்லது ஆரோக்கியமற்றவர்களாலும் முறையான அணுகுமுறையுடன் பயிற்சி செய்யலாம். பொதுவாக, ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், அவர்கள் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அவர்களால் உடற்பயிற்சி செய்ய முடியாது.

    * யோகா ஆசனத்தின் பயிற்சி வளர்சிதை மாற்றத்தை குறைக்கிறது மற்றும் கூடுதல் உணவு சேர்க்கை தேவையில்லை. உண்மையில், உடல் எடையை பராமரிக்க தேவையற்ற உணவை உட்கொள்வதை ஒருவர் குறைக்கலாம். உடற்பயிற்சியில் அதிக அளவு வலிமை தேவைப்படுகிறது. எனவே நபரின் பசி அதிகரிக்கிறது. இதன் விளைவாக அதிக அளவு உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.

    * யோகா ஆசனத்தின் நோக்கம், அதிக விழிப்புணர்வு மற்றும் மனதை அமைதிப்படுத்தும் செயல்முறையாகும். உடற்பயிற்சியின் நோக்கம் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பராமரிப்பதாகும்.

    * ஆசன பயிற்சியின் போது, சுவாசம் மென்மையாகவும், நீளமாகவும், ஆழமாகவும் மாறும். மேலும் ஆக்ஸிஜனின் நுகர்வு குறைகிறது. உடற்பயிற்சியின் போது, மூச்சு வேகமாகவும், குறுகியதாகவும், ஆழமற்றதாகவும் மாறும், இது ஆக்ஸிஜனின் நுகர்வு அதிகரிக்கிறது.

    * யோகா பயிற்சியானது உடலை அமைதிப்படுத்துகிறது மற்றும் குளிர்ச்சிக்கு வழிவகுக்கும். உடற்பயிற்சிகளை மேற்கொள்வது முழு உடலையும் உற்சாகப்படுத்துகிறது. இது உடல் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்து வெப்பத்தை உண்டாக்குகிறது.

    * ஆசனம் உடலின் உடலியலை மாற்றியமைக்கிறது மற்றும் தொடர்ந்து பயிற்சி செய்வதால் சுவாச விகிதம், இதயத் துடிப்பு மற்றும் துடிப்பு விகிதம் குறைகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது உடற்பயிற்சி சுவாசத் துடிப்பு, இதயத் துடிப்பு மற்றும் நாடித் துடிப்பை அதிகரிக்கிறது

    * யோகா ஆசனங்கள் கிழக்கில் தோன்றியவை மற்றும் இயற்கை, விலங்குகள் மற்றும் பறவைகளால் ஈர்க்கப்படுகின்றன. இதில் நாம் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை மாற்றியமைத்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுகிறோம். உடற்பயிற்சி தனிமைப்படுத்தப்பட்ட தசைகள் மீது கவனம் செலுத்துகிறது.

    • உடல் சுத்தம் மனதையும் புத்துணர்ச்சியாக்கும்.
    • பச்சைக் காய்கறிகள், தேங்காய் போன்றவற்றைச் சாப்பிடலாம்.

    தியானம், பிராணாயாமம், யோகா செய்தாலேபோதும்; நோய் எதுவும் நெருங்காது. உடலிலும் மனதிலும் சக்தியைப் பெருக்கி, இரண்டிலும் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும், வெளியில் உள்ள காற்றுக்கும், உடலில் இருக்கும் காற்றுக்கும் பாலமாக உள்ள சுவாசத்தைக் குறிப்பிட்ட வகையில் மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடியதுமான அற்புதக் கலைதான் 'பிராணாயாமம்'.

    குரு: அதிக நேரம் மூச்சை நிறுத்திப் பழகவும், வகை வகையான பிராணாயாமங்களில் திறமை பெறவும் சிறந்த குருவின் நேரடிப் பார்வையில் பயிற்சி செய்வது.

    ஏற்ற இடம்: மூச்சுப்பயிற்சிக்கு என்று தனியாக ஓர் இடம் வைத்துக்கொண்டால் நல்லது. திறந்தவெளி, இயற்கைக் காட்சிகள் நிறைந்த சூழல், கடற்கரை, ஆற்றங்கரை, வீட்டின் மொட்டைமாடி... என நல்ல காற்றும் வெளிச்சமும் வரும் இடமாகத் தேர்வு செய்யவேண்டும்.

    முறையான உணவு: மனதுக்கும் உணவுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. ஆன்மிகம், யோகம் போன்ற பயிற்சிகளைப் பழகுபவர்களுக்கு மன அமைதி அவசியம். மனதை சாந்தமாக வைத்திருக்க, சாத்வீக உணவு உட்கொள்வதே நல்லது. இதனால், உள்ளேயோ, வெளியேயோ மூச்சைக் கும்பகம் செய்யும்போது, விரும்பும் நேரம் வரை நிறுத்த முடியும்.

    எளிதில் ஜீரணமாகக்கூடிய தானிய உணவுகள், சாறுள்ள பழங்கள், பச்சைப் பயறு, காய்கறிகள், எலுமிச்சம்பழச் சாறு, பால், வெண்ணெய், நெய், கைக்குத்தல் அரிசி, சிவப்பரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு மாவால் ஆன உணவுகள் ஆகியவை எடுத்துக்கொள்ளலாம்.

    உப்பு, புளிப்பு, காரம், கசப்பு மிகுந்த உணவுகளை உண்பதைத் தவிர்க்கவேண்டும். சமைத்து வெகுநேரம் ஆன, பழைய, கெட்டுப்போன உணவுகளைச் சாப்பிடக் கூடாது. பச்சைக் காய்கறிகள், தேங்காய் போன்றவற்றைச் சாப்பிடலாம். அதிகம் வெயிலில் அலைவதோ, நெருப்புக்கு அருகில் இருப்பதோ கூடாது.

    அரை வயிறு உணவும், கால் வயிறு காற்றும், கால் வயிறு தண்ணீரும் உட்கொள்ள வேண்டும். அதிகப் பசியுடனோ, சாப்பிட்ட உடனோ பிராணாயாமம் செய்யக்கூடாது.

    தகுந்த காலம்: மார்ச் முதல் ஏப்ரலில் அதாவது வசந்த காலத்தில் பயிற்சியைத் தொடங்கலாம். இலையுதிர் காலமான செப்டம்பர் முதல் அக்டோபர் வரைகூட, பயிற்சியைத் தொடங்க ஏற்ற காலம். பிற்பகலில் காற்றில் சூடு அதிகம் இருப்பதால், பயிற்சிகளை தவிர்த்துவிடலாம். காலை 4 மணியில் இருந்து 6 மணி வரையிலான குளிர்ந்த சமயத்தில் பயிற்சி செய்வது உசிதம்.

    நாடிகள் பற்றிய அறிவும் தூய்மையும்: அதிகாலை வெயில் வருமுன் பழகுதல் நல்லது. மாலை சூரியன் மறையும் நேரம் அதாவது 6 மணிக்குச் செய்யலாம். முதலில் நாடி சுத்தீயில் தொடங்கும்போது, காலை, நண்பகல், மாலை, நள்ளிரவு என நான்கு வேளைகளில் பழகுவார்கள். இப்படி ஒரு மாதம் செய்து, நாடிகளைத் தூய்மை செய்துகொள்ளலாம்.

    உடல் தூய்மை: தினமும் காலையில் எழுந்ததும், பல் துலக்கி, கை, கால்களை நன்றாக கழுவவேண்டும். பிறகு, கடவுளை வணங்கிவிட்டு, பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். உடல் சுத்தம் மனதையும் புத்துணர்ச்சியாக்கும். கோபம், வெறுப்பு, கூடாத உணவு, மாறான நடவடிக்கை, கூடா குணம், நடத்தைக் கோளாறு உள்ளவர்களுக்குப் பிராணாயாமக் கலை கை கூடாது.

    தொடர் பயிற்சி: அன்றாட கடமைகளை செய்வது போல், மூச்சுப்பயிற்சியையும் தொடர்ந்து செய்துவந்தால், ஆர்வம் அதிகரிக்கும். தினமும் ஒருவித புத்துணர்ச்சி கிடைப்பதை உணரமுடியும். கடவுள் மீதான நம்பிக்கை, உணவு, பேச்சு, செயல், உறக்கம்... என எதிலும் மிதமாக இருத்தல், அக்கறையுடனும் விடாமுயற்சியுடனும் ஈடுபடுதல் இதுவே பிராணாயாமத்தில் வெற்றிபெறத் தேவையான தகுதிகள்.

    • நம் உடல் ஆரோக்கியத்திற்கு கீழ்க்கண்ட 10 முத்திரைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
    • ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

    "முத்திரை (முத்ரா)" என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும் முழு உடலை கொண்டும் முத்திரை காட்டப்படும். புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய சிலைகளில் காணலாம்.

    பரத நாட்டியத்தில் 200-க்கும் மேற்பட்ட முத்திரைகளும், மோகினி ஆட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முத்திரைகளும் கையாளப்படுகிறது. தாந்தீரிகத்தில் 108 முத்திரைகள் உள்ளன. அன்றாட நம் உடல் ஆரோக்கியத்திற்கு கீழ்க்கண்ட 10 முத்திரைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

    நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன..

    1. கட்டைவிரல் – தீ

    2. ஆள்காட்டி விரல் – காற்று

    3. நடுவிரல் – ஆகாயம்

    4. மோதிரவிரல் – நிலம்

    5. சுண்டுவிரல் – நீர்

    இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

    1. அறிவு முத்திரை:

    ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.

    2. வாயு முத்திரை:

    ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.

    3. சூன்ய முத்திரை:

    நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும். தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.

    4. பூமி முத்திரை:

    மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.

    நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் – மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும். காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும். பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.

    5. வாழ்வு முத்திரை:

    சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.

    6. ஜீரண முத்திரை:

    நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.

    7. இதய முத்திரை:

    நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.

    8. சூரிய முத்திரை:

    மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.

    9. நீர் முத்திரை:

    சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.

    10. லிங்க சக்தி முத்திரை:

    இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.

    • ஆசனங்களை எந்த ஒரு கருவியும் இல்லாமல் வீட்டிலேயே எளிதில் செய்யலாம்.
    • ஒவ்வொரு யோகாசனமும் எந்த மாதிரியான நன்மைகளை வழங்கும் என்று பார்க்கலாம்.

    ஆசனங்கள் ஒருவரது உடல் எடையைக் குறைக்கவும், இதய ஆரோக்கியம் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுவதாக நிரூபிக்கின்றன. முக்கியமாக ஆசனங்களை எந்த ஒரு கருவியும் இல்லாமல் வீட்டிலேயே எளிதில் செய்யலாம். எந்த யோகாசனம் எந்த மாதிரியான நன்மைகளை வழங்கும் என்பதை தெளிவாக படித்து தெரிந்து நீங்களும் தினமும் யோகா பயிற்சியை செய்ய முயலுங்கள்.

    சுகாசனம் (Sukhasana) : இது முதன்முதலில் ஆசனம் செய்வோருக்கான ஒரு அற்புதமான ஆசனமாகும். இந்த ஆசனமானது மனதிற்கு ஆறுதலைத் தருகிறது. இந்த ஆசனத்தை செய்தால், மனக் கவலை மற்றும் மன அழுத்தம் குறைவதோடு, மனச் சோர்வும் குறையும். மேலும் இந்த ஆசனம் உடல் தோரணையை சரிசெய்து, மார்பு மற்றும் முதுகெலும்புகளை நீட்டுகிறது.

    நவுகாசனம் (Naukasana) : படகு போன்ற நிலையிலான இந்த ஆசனம் எளிதான ஆசனங்களில் ஒன்றாகும். இந்த ஆசனம் வயிற்று தசைகளை நீட்டுகிறது மற்றும் இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, வயிற்றுக் கொழுப்பைக் குறைத்து தொப்பையை குறைக்க உதவுகிறது. மொத்தத்தில் இது வயிற்று தசைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு நல்லது.

    தனுராசனம் (Dhanurasana) : இது ஒட்டுமொத்த உடலையும் நீட்டுகிறது. அதோடு இது எடையை இழக்க உதவுகிறது மற்றும் செரிமானம், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது முதுகு பகுதியை நெகிழ வைப்பதில் பயனுள்ளதாக உள்ளது.

    வக்ராசனம் (Vakrasana) : வக்ராசனம் உடலை நெகிழ வைக்கிறது மற்றும் வயிற்றில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கிறது. அதோடு இந்த ஆசனம் செரிமான அமிலங்களை ஒழுங்குப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

    ககாசனம் (Kakasana) : மனதை ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கவும், மந்த நிலையைப் போக்கவும், மன மற்றும் உடல் சமநிலையை அதிகரிக்கவும் விரும்புவோருக்கு ககாசனம் மிகவும் சிறந்த ஆசனமாகும். இந்த ஆசனம் கைகள், மணிக்கட்டு மற்றும் முன்கைகளின் தசைகளை நீட்டுகிறது. இந்த ஆசனத்தின் தோரணை உடலையும் மனதையும் லேசாக உணர வைக்கிறது. மேலும் சிதறியுள்ள மனதை ஒன்றிணைக்கிறது. இந்த ஆசனத்தை செய்வது கடினம் மற்றும் இதற்கு நிறைய ப்ராக்டிஸ் தேவைப்படும்.

    புஜங்காசனம் (Bhujangasana) : இந்த ஆசனம் முதுகெலும்பை நெகிழ வைக்கிறது. இந்த ஆசனத்தின் வளைவான அமைப்பு ஆழமான முதுகு தசைகள், முதுகெலும்பு மற்றும் நரம்புகளை மசாஜ் செய்கிறது. இந்த ஆசனம் கீழ் முதுகு வலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. மேலும் இது மாதவிடாய் கால பிரச்சனைகளை நீக்குகிறது மற்றும் மன அழுத்தத்தை போக்குகிறது.

    கோமுகாசனம் (Gomukhasana) : இது இடுப்பை விரிவடையச் செய்யும் அடிப்படை ஆசனங்களில் ஒன்றாகும். இந்த ஆசனத்தில் இடுப்பு, கைகள், தொடைகள் மற்றும் முதுகு பகுதியை நீட்டும் போது, உடல் தசைகளை தளர்த்துவதற்கு உதவுகிறது.

    ஹலாசனம் (Halasana) : ஹலாசனம் முதுகெலும்பு தசையை நீட்டும் போது, முதுகெலும்பு வட்டுக்களைத் திறந்து, முதுகெலும்பு அமைப்பை இளமையாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஆசனம் தோள்பட்டை, கைகள் மற்றும் முதுகெலும்புகளில் உள்ள டென்சனை வெளியிடுகிறது. இந்த ஆசனமானது உடல்பருமனால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த ஆசனமாகும். உள்ளுறுப்புகளுக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம், இது அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் கழுத்து விறைப்பு வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

    சர்வாங்காசனம் (Sarvangasana) : சர்வாங்காசனத்திற்கு "அனைத்து பகுதிகளும்" என்று பொருள். இந்த ஆசனம் உடலின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி, புத்துயிர் அளிக்கிறது. முக்கியமாக இது தைராய்டு சுரப்பியை உள்ளடக்குவதோடு, உடலின் மெட்டபாலிசம், புரோட்டீன் தொகுப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. இந்த ஆசனமானது தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் சிறுநீரகம் மற்றும் எலும்பு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. அதோடு இந்த ஆசனம் தூக்கமிந்மை, மனச்சோர்வு மற்றும் மன பதட்டத்தைக் குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

    சிரசாசனம் (Shirsasana) :'ஆசனங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் சிரசாசனம் மிகவும் கடினமான ஆசனங்களில் ஒன்றாகும். ஆனால் இது குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டுள்ளது. அதில் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, சுவாச அமைப்பை வலுப்படுத்துகிறது, செறிவு மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது. மேலும் இந்த ஆசனம் மூளை, முதுகெலும்பு மற்றும் ஒட்டுமொத்த நரம்பு மண்டலத்தையும் ஈடுபடுத்துகிறது மற்றும் பிட்யூட்டரி மற்றும் பினியல் சுரப்பிகளை தூண்டுகிறது. மொத்தத்தில் இந்த தலைகீழான நிலை மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது மற்றும் நரம்பு கோளாறுகள் மற்றும் பதட்டத்தை நீக்குகிறது.

    • நடைபயிற்சியினால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.
    • எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைப்பயிற்சியாகும்.

    நடக்கும் பயிற்சியில் ஈடுபடும் போது நமது கால்கள் நல்ல உருவம் பெற்று மேலும் வலிமையடைகின்றன. இதை பெறுவதற்கு நாம் நாள்தோறும் நடந்து பயிற்சி செய்ய வேண்டும். நடுத்தர வேகத்திலிருந்து, விரைவான வேகம் வரை என மாறி, பின்னர் மெதுவாக நடப்பது என வாரத்திற்கு 5-6 நாட்கள் செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் குறைந்து கால்கள் பலப்படுகின்றன. இது வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படும் மிக முக்கியமான பயிற்சிகளில் ஒன்றாகும். ஓடுவது போன்ற கடுமையான பயிற்சிகள் நாளடைவில் சதைகளை காயப்படுத்தி எலும்பு சம்மந்தமான பிரச்சனைகளை உருவாக்கிவிடுவதால், நடைப்பயிற்சி, ஓடுவதை விட சிறந்ததாக கருதப்படுகிறது.

    நடைப்பயிற்சி தசைகளை இதமாக்கி உடம்பை ஓய்வு நிலையில் வைக்கிறது. இதனால்இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க முடியும். கால் மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்பை நடைப்பயிற்சி கரைய வைக்கிறது. தினமும் நடக்கும் போது கால்கள் மிகவும் வலிமையடைந்து எந்த வகையிலும் மடக்கவோ ஓடவோ ஏற்றவாறு அமைகிறது. பெரும்பாலும் நாம் நடக்காமல் இருக்க முடியாது. ஆனால் முன்பு இருந்தது போல் இந்த காலத்தில் யாரும் நடப்பது கிடையாது. ஆகையால், நடப்பதற்கு என நாம் நிச்சயம் சில நிமிடங்களை ஒதுக்குவது இன்றியமையாத விஷயமாக உள்ளது. எனவே தான் உறுதியுடன் நடக்கத் தொடங்குவது உறுதியான கால்களைத் தரும் என சொல்லப்படுகிறது.

    நடைப்பயிற்சி தான் நமக்கு மிகச் சிறந்த, எளிமையான மற்றும் உடல் திசுக்களை காயப்படுத்தாத இயற்கையான உடற்பயிற்சியாக உள்ளது. இது மிகவும் பாதுகாப்பான, எல்லா மக்களும் செய்யக் கூடிய, மிகுந்த நன்மைகள் கொடுக்கக் கூடிய மற்றும் செலவில்லாத பயிற்சியாக உள்ளது. தினசரி செய்யும் நடைப்பயிற்சியால் நமது இதயம் சீராகிறது. நுரையீரல் மற்றும் உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள தசைகளின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. ஒரு சராசரி இளைஞர் 30 நிமிடங்களாவது தினசரி நடப்பது உகந்ததாக கருதப்படுகின்றது.

    தினசரி விடியற்காலையில் நாம் நடைப்பயிற்சியில் ஈடுபட்டால், அது நாம் நினைப்பதை விட அதிக அளவில் பலன்களை தருகின்றது. நமது தசைகளில் உள்ள பிடிப்புகளை நீக்கி இதயத்திற்கு புதிய ஆக்சிஜனை கொண்டு செல்ல இந்த பயிற்சி உதவுகிறது. தசைகளை சீர்படுத்தி நடக்கையிலேயே புதுப்பிக்கின்றது. நீங்கள் நடக்கும் போது எரிக்கப்படும் புரதச்சத்து நடக்கும் கால்களுக்கு வலுவூட்டுவதாக அமைகின்றது.

    தினசரி விடியற்காலையில் நாம் நடைப்பயிற்சியில் ஈடுபடும் போது உங்கள் உடம்பில் ஆக்சிஜனின் தேவை அதிகமாகிறது. இதனால் நாம் வழக்கத்தைவிட அதிக அளவில் கொட்டாவி விடுகின்றோம். நீங்கள் நடக்க துவங்கும் போது உங்கள் உடம்பு அதிக ஆக்சிஜன் உள்ளிழுத்து உடல் முழுதும் பரப்புகின்றது. நடப்பதால் கால்களில் அதிக அளவில் ஆக்சிஜனும் சென்றடைகின்றது. இதனால் கால்கள் வலுவடைகின்றன.

    தினமும் நடப்பதன் மூலம் தசைகள் உறுதியடைவதுடன், தேவையற்ற கொழுப்புக்களும் வெளியேற்றப் படுகிறது. கெண்டைக் கால் மற்றும் தொடைகளில் உள்ள அதிகபட்ச கொழுப்பை கரைத்து தசைகளை உறுதிப்படுத்துகின்றது. இதனால் தளர்வாக இருக்கும் தசைகள் இறுகி உறுதிப்படுகின்றன. இதனால் கால் தசைகள் வலுவடைகின்றன. இது கால் முழுவதையும் சீர் செய்து உறுதிப்படுத்துகிறது.

    எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைப்பயிற்சியாகும். ஓடுவதன் மூலம் உருவாகும் காயங்களை நடைப்பயிற்சியில் தவிர்க்க முடியும். நாம் நடக்கும் போது ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம். இதனால் நமக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. வேகமாக நடைப்பயிற்சி செய்வதால் முழங்காலும், கணுக்காலும் எந்த பாதிப்பிற்கும் உள்ளாவதில்லை. சரியான அளவு இடைவெளி விட்டு நடப்பதால், இதன் மூலம் கிடைக்கும் நற்பயன்கள் நீண்ட காலத்திற்கு நன்மை தருபவையாகவும் இருக்கும். இத்தகைய பயிற்சிகளில் காயங்கள் ஏற்பட்டாலும் குறைவாவே இருக்கும். அப்படி ஏற்பட்டாலும் அது கணுக்கால் பிடிப்பு, சுளுக்கு மற்றும் கெண்டை தசை கிழிவு ஆகிய காயங்கள் ஏற்படக்கூடும்.

    நடைப்பயிற்சி மூலம் தசைகள் வலிமை பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் இந்த குறிப்பு முழு உடம்பிற்கும் பொருந்துவதில்லை. நடைப்பயிற்சி செய்யும் போது காலின் பின் பகுதியில் உள்ள தசைகள், கெண்டைக் கால் தசைகள்,பின் தொடை தசைகள் மற்றும், கீழ் இடுப்பு தசைகள் போன்றவை வலுவடைகின்றன. கைகளை சுற்றும் போது தோள் பட்டையின் பின்புறம் உள்ள தசைகள் உபயோகப்படுகின்றன. நடைபயிற்சியினால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். மற்ற உடற்பயிற்சிகளால் ஏற்படும் காயங்களை நடைப்பயிற்சி முழுமையாக தவிர்த்து விடுகிறது. நடைபயிற்சி குறைந்த அழுத்தத்தை எலும்புகளுக்கும் தசைகளுக்கும் கொடுப்பதால், சிறந்த ஆரோக்கியத்தை தரும் உடற்பயிற்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது.

    ×