search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    எந்த யோகாசனம் என்ன பலனைத்தரும்...
    X

    எந்த யோகாசனம் என்ன பலனைத்தரும்...

    • ஆசனங்களை எந்த ஒரு கருவியும் இல்லாமல் வீட்டிலேயே எளிதில் செய்யலாம்.
    • ஒவ்வொரு யோகாசனமும் எந்த மாதிரியான நன்மைகளை வழங்கும் என்று பார்க்கலாம்.

    ஆசனங்கள் ஒருவரது உடல் எடையைக் குறைக்கவும், இதய ஆரோக்கியம் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுவதாக நிரூபிக்கின்றன. முக்கியமாக ஆசனங்களை எந்த ஒரு கருவியும் இல்லாமல் வீட்டிலேயே எளிதில் செய்யலாம். எந்த யோகாசனம் எந்த மாதிரியான நன்மைகளை வழங்கும் என்பதை தெளிவாக படித்து தெரிந்து நீங்களும் தினமும் யோகா பயிற்சியை செய்ய முயலுங்கள்.

    சுகாசனம் (Sukhasana) : இது முதன்முதலில் ஆசனம் செய்வோருக்கான ஒரு அற்புதமான ஆசனமாகும். இந்த ஆசனமானது மனதிற்கு ஆறுதலைத் தருகிறது. இந்த ஆசனத்தை செய்தால், மனக் கவலை மற்றும் மன அழுத்தம் குறைவதோடு, மனச் சோர்வும் குறையும். மேலும் இந்த ஆசனம் உடல் தோரணையை சரிசெய்து, மார்பு மற்றும் முதுகெலும்புகளை நீட்டுகிறது.

    நவுகாசனம் (Naukasana) : படகு போன்ற நிலையிலான இந்த ஆசனம் எளிதான ஆசனங்களில் ஒன்றாகும். இந்த ஆசனம் வயிற்று தசைகளை நீட்டுகிறது மற்றும் இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, வயிற்றுக் கொழுப்பைக் குறைத்து தொப்பையை குறைக்க உதவுகிறது. மொத்தத்தில் இது வயிற்று தசைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு நல்லது.

    தனுராசனம் (Dhanurasana) : இது ஒட்டுமொத்த உடலையும் நீட்டுகிறது. அதோடு இது எடையை இழக்க உதவுகிறது மற்றும் செரிமானம், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது முதுகு பகுதியை நெகிழ வைப்பதில் பயனுள்ளதாக உள்ளது.

    வக்ராசனம் (Vakrasana) : வக்ராசனம் உடலை நெகிழ வைக்கிறது மற்றும் வயிற்றில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கிறது. அதோடு இந்த ஆசனம் செரிமான அமிலங்களை ஒழுங்குப்படுத்தி, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

    ககாசனம் (Kakasana) : மனதை ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கவும், மந்த நிலையைப் போக்கவும், மன மற்றும் உடல் சமநிலையை அதிகரிக்கவும் விரும்புவோருக்கு ககாசனம் மிகவும் சிறந்த ஆசனமாகும். இந்த ஆசனம் கைகள், மணிக்கட்டு மற்றும் முன்கைகளின் தசைகளை நீட்டுகிறது. இந்த ஆசனத்தின் தோரணை உடலையும் மனதையும் லேசாக உணர வைக்கிறது. மேலும் சிதறியுள்ள மனதை ஒன்றிணைக்கிறது. இந்த ஆசனத்தை செய்வது கடினம் மற்றும் இதற்கு நிறைய ப்ராக்டிஸ் தேவைப்படும்.

    புஜங்காசனம் (Bhujangasana) : இந்த ஆசனம் முதுகெலும்பை நெகிழ வைக்கிறது. இந்த ஆசனத்தின் வளைவான அமைப்பு ஆழமான முதுகு தசைகள், முதுகெலும்பு மற்றும் நரம்புகளை மசாஜ் செய்கிறது. இந்த ஆசனம் கீழ் முதுகு வலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. மேலும் இது மாதவிடாய் கால பிரச்சனைகளை நீக்குகிறது மற்றும் மன அழுத்தத்தை போக்குகிறது.

    கோமுகாசனம் (Gomukhasana) : இது இடுப்பை விரிவடையச் செய்யும் அடிப்படை ஆசனங்களில் ஒன்றாகும். இந்த ஆசனத்தில் இடுப்பு, கைகள், தொடைகள் மற்றும் முதுகு பகுதியை நீட்டும் போது, உடல் தசைகளை தளர்த்துவதற்கு உதவுகிறது.

    ஹலாசனம் (Halasana) : ஹலாசனம் முதுகெலும்பு தசையை நீட்டும் போது, முதுகெலும்பு வட்டுக்களைத் திறந்து, முதுகெலும்பு அமைப்பை இளமையாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஆசனம் தோள்பட்டை, கைகள் மற்றும் முதுகெலும்புகளில் உள்ள டென்சனை வெளியிடுகிறது. இந்த ஆசனமானது உடல்பருமனால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த ஆசனமாகும். உள்ளுறுப்புகளுக்கு புத்துயிர் அளிப்பதன் மூலம், இது அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் கழுத்து விறைப்பு வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

    சர்வாங்காசனம் (Sarvangasana) : சர்வாங்காசனத்திற்கு "அனைத்து பகுதிகளும்" என்று பொருள். இந்த ஆசனம் உடலின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி, புத்துயிர் அளிக்கிறது. முக்கியமாக இது தைராய்டு சுரப்பியை உள்ளடக்குவதோடு, உடலின் மெட்டபாலிசம், புரோட்டீன் தொகுப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. இந்த ஆசனமானது தசைகளை வலுப்படுத்துகிறது மற்றும் சிறுநீரகம் மற்றும் எலும்பு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. அதோடு இந்த ஆசனம் தூக்கமிந்மை, மனச்சோர்வு மற்றும் மன பதட்டத்தைக் குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

    சிரசாசனம் (Shirsasana) :'ஆசனங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் சிரசாசனம் மிகவும் கடினமான ஆசனங்களில் ஒன்றாகும். ஆனால் இது குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டுள்ளது. அதில் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, சுவாச அமைப்பை வலுப்படுத்துகிறது, செறிவு மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது. மேலும் இந்த ஆசனம் மூளை, முதுகெலும்பு மற்றும் ஒட்டுமொத்த நரம்பு மண்டலத்தையும் ஈடுபடுத்துகிறது மற்றும் பிட்யூட்டரி மற்றும் பினியல் சுரப்பிகளை தூண்டுகிறது. மொத்தத்தில் இந்த தலைகீழான நிலை மலச்சிக்கலைக் குறைக்க உதவுகிறது மற்றும் நரம்பு கோளாறுகள் மற்றும் பதட்டத்தை நீக்குகிறது.

    Next Story
    ×