என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    விருட்சம் என்றால் மரம். மரம்போல நிற்கும் நிலை என்பதால் விருட்சாசனம் என்ற பெயர். இன்று இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
    உடலை சமநிலைப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்துகிற வகையில் நவுகாசனம், விருட்சாசனம், தனுராசனம், தாடாசனம், சிரசாசனம், விபரீதகரணி முதலியவை மிக முக்கியமானவை. அதேபோல, பிராணாயாமத்தில், நாடி சுத்தி பிராணாயாமம், பிரம்மரி பிராணாயாமம், உஜ்ஜயி பிராணாயாமம் மிகவும் நல்லது. இதில் மிகவும் விசேஷமான விருட்சாசனம் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

    விருட்சம் என்றால் மரம். மரம்போல நிற்கும் நிலை என்பதால் விருட்சாசனம் என்ற பெயர். முதலில் கால்களை நேராக வைத்து, நன்கு நிமிர்ந்த நிலையில் நிற்க வேண்டும். பின்னர் இடது காலை மடக்கி வலது தொடையில் பதிய வைக்க வேண்டும். மடித்து வைக்கப்பட்ட கால் 90 டிகிரி அளவில் பக்கவாட்டில் விரிந்திருக்க வேண்டும். பின்னர், மெதுவாக கைகளை இணைத்து நமஸ்காரம் செய்வதுபோல, மார்புக்கு மத்தியில் வைக்க வேண்டும். இதற்கு ‘நமஸ்கார முத்ரா’ என்று பெயர். இது முதல் நிலை.

    பிறகு, கைகளை நமஸ்கார முத்ரா நிலையிலேயே உயர்த்தி, தலைக்கு மத்தியில், அதாவது உச்சந்தலையில் வைக்க வேண்டும். இதற்கு ‘கயிலாய முத்ரா’ என்று பெயர். இது 2-வது நிலை.

    பிறகு, காதுகளை ஒட்டினாற்போல கைகளை நேராக மேலே உயர்த்தி, நமஸ்காரம் செய்வதுபோல வைக்க வேண்டும். இது ‘அஞ்சலி முத்ரா’ எனப்படும். இது 3-வது நிலை. ஒவ்வொரு நிலையிலும் 3 முறை மூச்சை இழுத்து விட வேண்டும். பின்னர் கால்களை கீழே இறக்கிவிட வேண்டும், அடுத்து, வலது காலை மடக்கி இதேபோல செய்ய வேண்டும். இப்பயிற்சியின்போது, சாதாரணமாக மூச்சுவிட வேண்டும்.

    தொடர்ந்து இந்த ஆசனம் செய்தால் கால்கள் நன்கு வலுப்பெறும். புஜங்கள் விரிவடையும். முக்கியமாக, மனதை ஒருநிலைப்படுத்த முடியும். விருட்சாசனம் உடலின் சமநிலையைக் கூட்டி, மன தடுமாற்றத்தைப் போக்கும். கவனக் குவிப்புத் திறன் வளரும் என்பதால் படிக்கும் மாணவர்களுக்கு இது மிகவும் நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். துருதுருவென்று ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் மனதை ஒருநிலைப்படுத்த இந்த ஆசனம் உதவும்.
    முதுகுவலிக்கான எளிமையான ஆசனம் மர்ஜரி ஆசனம். இப்பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்துவர முதுகுவலி நன்கு குணமாகும்.
    செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால், நம் உடலையும், மனதையும் எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க வேண்டும்.33 வகையான எலும்புகளின் கோர்வைதான் நமது முதுகெலும்பு. இவை ஒரே எலும்பாக இல்லாமல் நடுவே ஒரு வட்டைச் சுற்றி சின்னச் சின்ன எலும்புகளாக கோர்க்கப்பட்டுள்ளது. இதனால் தான் நம்மால் சிரமம் இல்லாமல் வளையவோ, நிமிரவோ, குனியவோ முடிகிறது.

    ல்லாவிதமான முதுகு வலிகளுக்கும் யோகாசனம் மூலம் தீர்வு காணலாம். பவன முக்தாசனம், சுத்த வஜ்ராசனம், மர்ஜரி ஆசனம், புஜங்காசனம், வியாகராசனம், தாடாசனம், கட்டி சக்ராசனம், மகராசனம், தனுராசனம் இவை அனைத்தும் முதுகுவலியை சரிசெய்யக்கூடிய ஆசனங்கள். இதில் அனைவரும் எளிதில் செய்யக்கூடிய இரண்டு முக்கியமான ஆசனங்களைப் பார்க்கலாம்.

    முதுகுவலிக்கான எளிமையான ஆசனம் மர்ஜரி ஆசனம். ‘மர்ஜரி’ என்றால் பூனை. பூனைபோல உடலை வளைத்து செய்வதால் இந்தப் பெயர்.

    இரு கால்களையும் மடித்து, குதிகால் பகுதியில் நமது பிட்டப் பகுதி நன்கு பதிந்திருக்குமாறு அமர்வதுதான் வஜ்ராசனம். முதலில் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். முட்டி போட்டு நின்றபடி, பூனைபோல கைகளை முன்னால் ஊன்றிய நிலையில் இருக்க வேண்டும்.

    கால் முட்டியை சற்று அகல மாக வைத்து, கைகள் அதற்கு நேராக இருக்குமாறு சரிசெய்துகொள்ள வேண்டும். மூச்சை உள் இழுக்கும்போது தலையை நன்றாக மேலே தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த நிலையில் முதுகுப் பகுதி நன்கு வளைந்து, ஒரு பள்ளம்போல ஏற்படும். பிறகு மூச்சை விட்டவாறு பொறுமை யாக குனிந்து நம்முடைய தாடை மார்பைத் தொடுவதுபோல நன்றாக குனிய வேண்டும்.

    இந்த நிலையில், முதுகுப் பகுதி வளைந்து, ஒரு குன்று போல காணப்படும். இவ்வாறு மாற்றி மாற்றி 3-5 முறை செய்ய வேண்டும். பிறகு, மீண்டும் வஜ்ராசனத்தில் அமரலாம். அல்லது, அப்படியே குப்புறப் படுத்து ரிலாக்ஸ் செய்துவிட்டு, பிறகு, ஒருக்களித்து ஒருபுறமாகத் திரும்பி, மல்லாக்க படுத்து சாந்தி அல்லது சவாசனத்தில் 10-15 விநாடிகள் இருந்துவிட்டு எழலாம். இப்பயிற்சியை தினமும் செய்துவர முதுகுவலி நன்கு குணமாகும்.
    யோகாவை யார் செய்யலாம், எந்த நேரத்தில், எவ்வளவு நேரம் செய்யலாம், எந்த வயதினர் செய்யலாம், யோகாசனத்துக்கு உடலைத் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    உடலை இறுக்கமாக வைத்துக்கொள்ளாமல், இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும். உடலை இறுக்கிப் பிடிக்காத, தளர்வான பருத்தி ஆடை அணிவது நலம். மேலும், யோகா செய்யும்போது, நம் உடலை உறுத்துகிற பெல்ட், கைக்கடிகாரம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக, ஆசனங்கள் செய்யும்போது நமக்கும் தரைக்கும் இடையே ஒரு விரிப்போ, பாயோ இருப்பது அவசியம். யோகப் பயிற்சிகள் செய்யும்போது நம்மில் இருந்து வெளிப்படும் நேர்மறை அலைகளை நமக்குள்ளேயே தக்கவைத்துக் கொள்ளவே இந்த ஏற்பாடு. இதைத் தவிர யோகா செய்ய வேறு எந்த உபகரணங்களும் தேவையில்லை. ஏனெனில் நம் உடலே ஒரு சிறந்த உபகரணம்!

    சிலருக்கு காலையில் எழுந்ததும் காபி குடித்தால்தான் அந்த நாள் விடியும். அவர்கள் யோகா செய்வதற்கு முன்பு காபி குடிக்கலாமா, அல்லது பயிற்சி முடித்தபிறகுதான் குடிக்கவேண்டுமா, அல்லது பயிற்சிக்கு நடுவே சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு காபி குடிக்கலாமா? இப்படி ஒரு சந்தேகமும் பலருக்கு எழலாம்.

    காலை எழுந்தவுடன் வழக்கம்போல பல் துலக்கி, காலைக் கடன்களை முடிக்க பத்து நிமிடம் நம் வயிற்றுக்கு நேரம் கொடுத்தால், வயிற்றில் இருக்கும் கழிவு கள் தானே வெளியேறி, யோகா செய்வதற்கு உடல் தயாராகிவிடும். காலையில் பல் துலக்கிவிட்டு,வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது, மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவும். ஒவ்வொருவர் உடல், வயிறு ஒவ்வொரு விதமாக இருக்கும். எனவே, எல்லோருக்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வெந்நீரே காலையில் சிறந்தது. இவ்வாறு கடைபிடித்தும் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்காதவர்களுக்கு ஏற்ற ஆசனங்களை, பின்வரும் அத்தியாயங்களில் தெரிந்து கொள்ளலாம்.

    காலைக்கடன் கழித்தவுடன், நல்ல காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து யோகப்பயிற்சியைத் தொடங்கலாம். நல்ல வெளிச்சமான ஜன்னலோரம், வீட்டின் பால்கனி, அல்லது மொட்டை மாடி என நமக்கு வசதியான இடத்தில், கை, கால்களை சிரமமின்றி உயர்த்தி, நீட்டி, திருப்பி, பயிற்சி செய்ய ஏற்ற இடத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.

    தேர்வு செய்த இடத்தில் ஒரு விரிப்பை போட்டு படுத்துக்கொண்டு, ஆரம்பத்தில் சவாசனம் அல்லது சாந்தி ஆசனத்தில் ஆரம்பிக்கலாம். கை, கால்களை நீட்டிய நிலையில் தரைவிரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும். ஒன்று அல்லது ஒன்றரை அடி இடைவெளி விட்டு கால்களை அகன்ற நிலையில் வைத்துக் கொள்ளவும்.

    கைகளை உடம்பைவிட்டு சற்று தள்ளி வைத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் வானத்தை நோக்கி, அதாவது கூரையைப் பார்த்தவாறு இருக்கட்டும். தலையை நேராக வைத்துக் கொள்ளவும். தலையில் கிளிப், பேண்ட் போன்றவை இல்லாமல், முடியை தளர்வாக விடவும். உடம்பிலும் எந்தவித உறுத்தலும் இல்லாமல் நேராக படுத்துக்கொண்டு, 9 - 15 முறை பொறுமையாக மூச்சை இழுத்து விட வேண்டும். இதன்மூலம் நம் உடலையும் மனதையும் யோகப் பயிற்சிக்கு தயார் செய்கிறோம்.
    நல்ல உடல் ஆரோக்கியம் பெற தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது மற்றும் உடற்பயிற்சியின் மூலமாக நாம் பல்வேறு நன்மைகளை அடையலாம்.
    தினசரி நாம் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது சோம்பேறித்தனம், சோர்வு போன்றவற்றை முறித்து புத்துணர்வு பெற இயலும். நல்ல உடல் ஆரோக்கியம் பெற தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது மற்றும் உடற்பயிற்சியின் மூலமாக நாம் பல்வேறு நன்மைகளை அடையலாம்.

    தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக கட்டுக்கோப்பான உடல் அமைப்பு பெறலாம். அதனால் தினசரி 30 நிமிடமாவது உடற்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் சோர்வு குறைவதினால் நாம் தினசரி செய்யும் வேளைகளில் அதிகளவில் ஈடுபட முடியும்.
    உடற்பயிற்சி தினசரி செய்வதன் மூலம் நமது வாழ்நாளை அதிகரிக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கிறது. உடலும் மனமும் வலுப்பெறுவதினால் நமது வாழ்நாள் தானாகவே அதிகரிக்கிறது. அதனால் தினமும் கட்டாயம் தவறாது உடற்பயிற்சி செய்யுங்கள்.

    உடற்பயிற்சி செய்வதன் மூலம் தேவையற்ற கொழுப்பு கரைந்து நமது தசைகள் வலுப்பெறுகின்றன. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளை சீரமைக்கிறது மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்துக்களையும் சரி செய்கிறது. உடற்பயிற்சி செய்வதன் காரணமாக மூளையில் புதிய செல்கள் வளர தூண்டுகிறது.

    இதன் மூலம் நமது ஞாபக சக்தி அதிகரிக்கிறது. உடற்பயிற்சி மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது. பல்வேறு காரணங்களால் அலுவலகத்திலும், வீட்டிலும் நமக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது ஓர் நல்ல வழியாகும்.

    உடலில் தங்கி கொழுப்பாக மாறும் தேவையற்ற கலோரிகளை உடற்பயிற்சி செய்வதின் மூலம் எரிக்க இயலும். இதனால் உடல்நலம் ஆரோக்கியமடையும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். இதன் மூலம் நமது உடல் பன்மடங்கு ஆரோக்கியம் அடையும்.
    ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். உடற்பயிற்சி பற்றி சில தவறாக கருத்துக்கள் உள்ளன. அது குறித்து விரிவாக பார்ககலாம்.
    * உடற்பயிற்சிகளைச் செய்வதால் உடல் வளர்ச்சி நின்றுவிடும் அல்லது உயரம் குறைந்துவிடும் என ஒரு மாயை இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. முறையற்ற பயிற்சிகளால் எலும்புகளில் உட்காயம் ஏற்படலாம். முறையாக செய்யும் பயிற்சிகள் உயரத்தை எந்த வகையிலும் பாதிக்காது. உயரத்தை நிர்ணயிப்பது உங்கள் மரபணுக்கள்தான்.

    * பெண்கள், அனைத்து வகையான பயிற்சிகளையும் செய்தால் ஆண்களைப்போல தசை வளர்ச்சி பெறுவார்கள் என்பது தவறு. இன்னும் சொல்லப்போனால், முறையான பயிற்சியாளர் இருந்தால் பெண்கள் கருவுற்ற நிலையிலும் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

    * உடற்பயிற்சி செய்தால் ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படும் என்பது மிகவும் தவறான ஒரு கண்ணோட்டம். ஆணுறுப்பும் ஒரு தசைதான். முறையான உடற்பயிற்சிகளால் ஆணுறுப்பிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து வலுப்பெறுமே தவிர, பிரச்னைகள் வர வாய்ப்பே இல்லை. மருத்துவரின் அனுமதி இன்றி வரம்புமீறி ஹார்மோன் மருந்துகள் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.

    * பயிற்சிகள் செய்யும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது என சிலர் நினைப்பார்கள். அது தவறு. பயிற்சிகள் செய்யும்போது நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலில் உஷ்ணம் அதிகரிக்கும். அதைச் சமன்படுத்த போதுமான அளவில் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும். குளிர்ந்த நீர் மட்டும் குடிக்கக் கூடாது. இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும்.

    * ‘வியர்த்தால்தான் கொழுப்பு குறையும், ஃபேன், ஏ.சி எல்லாம் வேணாம்ப்பா’ என சிலர் வியர்க்க வியர்க்கப் பயிற்சிகளைச் செய்வார்கள். அது தவறு. பயிற்சிகளை மேற்கொள்ளும் இடம் நல்ல காற்றோட்ட வசதியுடன்கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம் பிடரிப் பகுதியில் வியர்வை சேராமல் ஒரு துணிகொண்டு அடிக்கடி துடைத்துக்கொள்வது நல்லது.

    பயிற்சிகள் அனைத்தும் முடிந்ததும் அப்படியே ஓய்வெடுக்கக்கூடாது. உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வு நிலைக்குக் கொண்டுவந்த பிறகே ஓய்வெடுக்க வேண்டும். அப்படி இல்லாமல், உடனடியாகவே பிற வேலைகளைச் செய்யத் தொடங்குவது தவறு.
    உடற்பயிற்சி என்பது வேகமாக ஓடுவது, கை கால்களை ஆட்டுவது மட்டுமே அல்ல. நடைபயிற்சியும் சிறந்த உடற்பயிற்சி தான்.
    இயற்கையான உணவு, நல்ல உடற்பயிற்சி, நல்ல தூக்கம் இம்மூன்றும் இருந்தால் நோயின்றி நூறாண்டு வாழலாம். ஓடி ஆடி வேலை செய்வதே நல்ல உடற்பயிற்சி தான். ஆனால் அவை மனதிற்கும் உடலுக்கும் சிறந்த பயிற்சி ஆகாது. தினமும் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் உடற்பயிற்சி செய்வது நல்லது. நேரம் கிடைக்காதவர்கள் மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி என்பது வேகமாக ஓடுவது, கை கால்களை ஆட்டுவது மட்டுமே அல்ல. நடைபயிற்சியும் சிறந்த உடற்பயிற்சி தான்.

    நடைப்பயிற்சி :

    * நடை ஒரு நல்ல உடற்பயிற்சி. கடின உழைப்பாளிகளுக்கும் தினமும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும், நடைப்பயிற்சி தேவையில்லை.

    * சிலர் அருகில் உள்ள தெருக்கள் மற்றும் கடைகளுக்கு செல்ல மோட்டர் வாகனங்களை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் நடை என்பது இன்று அரிதாகிப்போன விஷயமாகிவிட்டது.

    * தினமும் காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

    * 40 வயதை கடந்தவர்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

    * காலைக் காற்றில் ஓசோன் மண்டலத்தில் ஆக்ஸிஜன் அதிகமாக நிறைந்திருக்கும். இந்த நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது நல்லது.

    * வேகமாக நடக்கக் கூடாது. மெதுவாக நடந்தால் போதும்.

    * அவரவர் உடல் நிலைக்குத் தக்கபடி அரை மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நடக்கலாம்.

    * நடக்கும் போது பேசிக்கொண்டோ, பாடல் கேட்டுக்கொண்டோ நடக்கக்கூடாது.

    * கைகள் இரண்டையும் வீசிக்கொண்டு நடப்பது நல்லது.

    * இறுக்கமான உடைகள் அணியக் கூடாது.



    * தினமும் 3 கி.மீ தூரமாவது நடக்க வேண்டும்.

    * இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள் அதிக மூச்சு வாங்கும்போது சிறிது நேரம் அமர்ந்து பின் எழுந்து நடக்கலாம்.

    * இரவில் தூக்கமில்லாதவர்கள் மறுநாள் காலையில் நடக்கக்கூடாது.

    * புதிதாய் நடைப்பயிற்சி செய்பவர்கள் ஆரம்பத்தில் 1 கி.மீ தூரம் நடந்தால் போதும்.

    * கடற்கரைக்கோ, மலைப் பிரதேசங்களுக்கோ செல்லத் தேவையில்லை. வீட்டிற்கு அருகே குறுநடை போட்டால் போதும்.

    * சிறிது நேரம் அமைதியாக காற்றோட்ட முள்ள இடத்தில் அமர்ந்து தியானம் செய்வது போல் சுவாசிக்க வேண்டும்.

    நடைப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்:

    * நடைப்பயிற்சி செய்யும்போது உடம்பில் உள்ள அசுத்த நீரானது வியர்வை மூலம் வெளியேறும்.

    * சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் நெருங்காது.

    * உடம்பின் எல்லா பாகங்களுக்கும் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும்.

    * அமைதியாக நடக்கும்போது மனம் ஒருநிலைப்பட்டு சிந்தனை சக்தியைத் தூண்டும்.

    * மூளைக்கு ரத்தம் செல்வதால் எப்போதும் புத்துணர்ச்சி பெறச் செய்யும். இனியும் கால தாமதம் செய்யாமல் உடனே நடக்கச் செல்லுங்கள், சோம்பேறித்தனத்தை விரட்டி எளிய நடைப்பயிற்சி மூலம் நோயின்றி வாழலாம்
    வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமில்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களும் ஜிம்முக்கு வந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
    ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதோடு இந்த டயட் சார்ட்டையும் பின்பற்றும்போது உடனடியாக நல்ல பலன் கிடைக்கும். எண்ணெய் பொருட்களை தவிர்த்து பழங்கள் காய்கறிகளை சாப்பிடுவதனால் வயிறு தொடர்பான பிரச்னைகளும் சரியாகும்.

    ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்யும்போது கலோரியைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி, வயிற்றுத்தசை, கைகளின் தசை, கால்களின் தசை என ஒவ்வொரு தசைக்குமான உடற்பயிற்சி கிடைக்கும். அதற்கேற்ற கருவிகளும் ஜிம்மில் தனித்தனியே இருக்கும்.

    இத்துடன் வாரத்தில் ஒருநாள் ஜிம்மிலேயே யோகா கற்றுக் கொள்ளலாம். அதனால் மனமும் ரிலாக்ஸ் ஆகும். மசாஜ் வசதிகளும் உள்ள ஜிம்மாக இருந்தால் உடல்வலியின் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இன்றைய தினசரி வாழ்வில் பெண்களும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமில்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களும் ஜிம்முக்கு வந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.



    பெண்களுக்கு இளவயதில் உடல் மேல் இருக்கும் அக்கறை பெரும்பாலும் திருமணத்துக்குப் பின்னர் இருப்பதில்லை. குழந்தைகள், கணவர் என குடும்பத்தின் மேல் காட்டும் அக்கறையில் சிறுபகுதியையும் தன் உடலின் மேல் காண்பிப்பதில்லை. பெண்கள் வேலைக்குச் செல்வதும் இன்றைய தேதியில் அத்தியாவசியமாகிவிட்டது. வீடு, அலுவலகம் என எந்நேரமும் பிஸியாக இருப்பதால் உடலின் மீதான கவனம் குறைந்துவிடுகிறது.

    தற்போது பெரும்பாலும் அலுவலக வேலைகளும் கணினி முன் உட்கார்ந்து செய்வதாகவே இருக்கிறது. மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்ற நவீன சாதனங்கள் வந்த பிறகு உடலுக்கான பயிற்சி பெண்களுக்குக் குறைந்துவிட்டது. வாகன வசதியும் பெண்களின் நடையைப் பெருமளவு குறைத்துவிட்டது. நிலைமை இப்படி இருப்பதால் பெண்களின் உடல் எடை கூடுவதில் அதிசயம் இல்லை. அதனால்தான் இன்றைய பெண்கள் உடல்ரீதியான பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.

    குடும்பத்தையே பார்த்துக்கொள்ளும் பெண்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது அவசியம். அதற்காக குறைந்தபட்சம் தினமும் ஒரு மணி நேரமாவது செலவிடுதல் நல்லது. கார்டியோ உடற்பயிற்சிகள் கலோரியைக் குறைக்க உதவும்.

    உடற்பயிற்சிகளையும் கால மாற்றத்துக்கேற்ப புதிய முறைகளில் மாற்றி நவீனமாக வடிவமைத்து வருகிறார்கள் நிபுணர்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    உடற்பயிற்சிகளையும் கால மாற்றத்துக்கேற்ப புதிய முறைகளில் மாற்றி நவீனமாக வடிவமைத்து வருகிறார்கள் நிபுணர்கள். ஸ்குவாட்ஸ், புஷ்-அப்ஸ் போன்ற வீட்டிலேயே செய்யும் பயிற்சிகளுக்கு மாற்றாக விலங்குகளின் அசைவுகளை மையமாக வைத்து வேடிக்கையாக செய்யும் Animal Workout என்ற பயிற்சி தற்போது பிரபலமாகி வருகிறது. Animal workout-ன் வகைகளையும் அதன் பலன்களையும் இங்கே பார்க்கலாம்.

    Crow push up

    இரண்டு கால்கள் மற்றும் கைகளை தரையில் ஊன்றி, மேலெழும்பிய நிலையில் இருக்க வேண்டும். மெதுவாக வலது முழங்காலை மடக்கியவாறு மேலே தூக்கி வலது கை முட்டிக்கு நேராக கொண்டு வரவும். இப்போது மீண்டும் வலதுகாலை பின்பக்கமாக நீட்டி பழைய நிலைக்கு கொண்டு வரவும். இதேபோல மறுபக்கம் இடது காலை மடக்கி செய்ய வேண்டும். முன்னோக்கி நகர்ந்து கொண்டே செய்ய வேண்டும். வழக்கமாக செய்யும்
    புஷ் அப் பயிற்சியினை காகத்தைப் போல செய்யும் முறை இது.

    பலன்கள்

    அடிவயிறு, வயிறின் பக்கவாட்டு தசைகள், மார்பு மற்றும் முன்தொடை தசைகள் விரிவடைவதால் நல்ல வலிமை கிடைக்கிறது. மணிக்கட்டு எலும்புகள், இடுப்பின் மேல்பகுதி எலும்புகள் மற்றும் கால் எலும்புகள் வலுவடைகின்றன. செரிமான மண்டல உறுப்புகளின் இயக்கம் தூண்டப்படுவதால் நெஞ்செரிச்சல், அல்சர் நோய்கள் நீங்குகின்றன. மேலும் முதுகுத்தண்டுவடத்திற்கு நெகிழ்வு கிடைக்கிறது.



    Crane Excercise

    கொக்கு போல தரையில் ஒருகாலை மட்டும் ஊன்றி, மற்றொரு கால் முட்டியை மடக்கி கைகள் இரண்டையும் கூப்பியவாறு நிற்க வேண்டும். இப்போது பறவை பறப்பதற்கு தயாராவதுபோல் இரண்டு கைகள் மற்றும் இடதுகாலை பின்புறமாக நீட்டி, உடல் முழுவதையும் முன்பக்கமாக கொண்டுவர வேண்டும். வலது காலை மட்டும் தரையில் ஊன்றி நிற்க வேண்டும். இதேபோல் மறுபக்கம் மாற்றி செய்யலாம்.

    பலன்கள்

    பின்புறம், இடுப்பு தசைகள் வலுவடைகின்றன. இந்த பகுதிகளுக்கு அதிகப்படியான இயக்கம் கிடைப்பதில்லை என்பதால் இறுக்க மடைந்து நடு மற்றும் கீழ் முதுகு வலியைக் கொடுக்கும். ஒற்றைக்கால் பறவை பயிற்சியால் அடிவயிறு மற்றும் பின்புறத்தில் உள்ள அதிகப் படியான கொழுப்பு தசைகளை கரைக்க முடியும். மார்பு விரிவடைவதால் மூச்சுப் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வாகிறது.



    Pigeon Pose

    தரையில் கைகள் மற்றும் கால்களை ஊன்றி, தலையை நிமிர்ந்தவாறு நிற்க வேண்டும். இப்போது வலது முழங்காலை முன்பக்கமாக மடக்கி தரையில் படுக்கபோட்டவாறு வைக்க வேண்டும். இடதுகால் பின் பக்கம் நேராக நீட்டியபடி இருக்க வேண்டும். இரண்டு கைகளும் தோளுக்கு நேராகவும், தலை நேராக நிமிர்ந்தபடியும் வைத்துக் கொள்ள வேண்டும். இதே நிலையில் ஆழ்ந்த மூச்சு விடவேண்டும். இதேபோல் மறுபக்கம் செய்ய வேண்டும். இது புறாவைப் போல் தோற்றமளிக்கும் என்பதால் Pigeon pose என்கிறார்கள்.

    பலன்கள்

    இடுப்பு, பின்முதுகு மற்றும் கால்களில் நெகிழ்வு அதிகரிக்கிறது. குருத்தெலும்பு மற்றும் மூட்டு இணைப்புகளின் முறிவு குறைகிறது. இடுப்பு மூட்டு நரம்புகளில் இருக்கும் இறுக்கம், அழுத்தம் குறைகிறது. குறிப்பாக, முதுகுத் தண்டுவடத்திலிருந்து கீழ் முதுகுவழியாக பின் தொடையை இணைக்கும் நரம்பான சியாட்டிக் நரம்பின் இறுக்கத்தை குறைக்கிறது. இடுப்பு, கெண்டைக்கால் நரம்புகள் நீட்சி அடைகின்றன. நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் கீழ் இடுப்பு வலியிலிருந்து விடுபடலாம்.
    மலங்கள் சரியாக வெளியேறாமல் உடலில் தங்குவதால், உடல், மன உபாதைகள் மட்டுமின்றி, உணர்வு ரீதியிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சூசி முத்திரை மலச்சிக்கலைத் தீர்க்கும்.
    முத்திரைகள் மருத்துவ ரீதியாகவும் பயன் அளிக்கிறது. உடலில் தேங்கும் கழிவுகளை நீக்க இயற்கை தந்த அமைப்பு வியர்வை, சிறுநீர், மலம் கழித்தல். கழிவுகளை நீக்கினாலே உடல் உபாதைகள் குறையும். இன்று அதிகமாக உள்ள உபாதை மலச்சிக்கல்.

    இதன் விளைவாக வாயுக் கோளாறுகள், அல்சர், மூட்டுவலிகள், வாத நோய்கள், வலிப்பு போன்றவை ஏற்படுகின்றன. மன அழுத்தம் இருக்கும்போது மலங்கள் சரியாக வெளியேறாமல் உடலில் தங்குவதால், உடல், மன உபாதைகள் மட்டுமின்றி, உணர்வு ரீதியிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சூசி முத்திரை மலச்சிக்கலைத் தீர்க்கும்.

    செய்முறை :

    சூசி முத்திரையைத் தலைக்கு மேல் பிடித்து வட்டமாகச் சுழற்றினால், அது அண்ட சராசரத்தையும், நெஞ்சிற்கு நேராகப் பிடித்தால் அது பரமேஸ்வரனான சிவனையும் குறிக்கும். கை விரல்களை மடக்கி வைத்து, ஆள்காட்டி விரல் மட்டும் நேராக, வானை நோக்கி இருக்கும்படி வைத்துக் கொள்வது சூசி முத்திரை. தினமும் இம்முத்திரையை 10 முதல் 15 நிமிடம் செய்வதால் நாள்பட்ட மலச்சிக்கலும் நீங்கும்.
    உடல் உழைப்புக்கு வாய்ப்பே இல்லாதவர்கள், தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்.
    உடலை நோயில்லாமல் வைத்துக்கொள்ள, ஃபிட்டான உடல்வாகுக்கு என ஆரம்பத்திலிருந்தே நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையோ மிக மிகக் குறைவு. உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் அத்தியாவசியம்.

    உடல் உழைப்புக்கு வாய்ப்பே இல்லாதவர்கள், தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம். நடைப்பயிற்சி, உள் உறுப்புகளுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயு செறிவையும் ஏற்படுத்தி, சிறப்பாகச் செயல்படவைக்கும்.

    நோய்கள் வராமல் பாதுகாப்பதற்கு நம்மிடையே இருக்கும் மிக முக்கியச் சாதனம் நடைப்பயிற்சி. ஆனால், அந்த சாதனத்தை பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைத்துவிடுவதுதான் நோய்களுக்குக் கொண்டாட்டமாகப் போய்விடுகிறது. நடைப்பயிற்சியின் முக்கியத்துவம், நோயின்றி நம்மை பாதுகாக்க இது எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதையெல்லாம் பார்ப்போம்.

    சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்.  உடல் பருமனைக் குறைக்க நடைப்பயிற்சியோடு, யோகப் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்ய்யலாம்.

    உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி, ரத்தக்குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்புத் திட்டுகளை நீக்கப் பயன்படும்.

    வாரத்துக்குக் குறைந்தது மூன்று மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் குறைகின்றன.  தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் போதும், ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். தொடர்ந்து ஐந்து நாள்கள் தவறாமல் நடைப்பயிற்சி செய்துவிட்டு, உங்கள் மனநிலையை ஆராய்ந்து பாருங்கள்...

    நடக்க சில வழிமுறைகள்...

    நடைப்பயிற்சி செய்யும்போது, அதற்குத் தோதான காலுறைகளையும் காலணிகளையும் பயன்படுத்துவது முக்கியம். நடைப்பயிற்சிக்கு உகந்த உடைகளை அணிந்துகொள்ள வேண்டும். நாலைந்து பேர் சேர்ந்து ஒரு குழுவாக நடைப்பயிற்சி செல்வது நல்லதுதான். ஆனால் அதிகமாகப் பேசிக்கொண்டே நடப்பது நல்லதல்ல.

    உலக அரசியல் அனைத்தையும் `வாக்கிங்’ செல்லும்போது பேசிக்கொண்டே இருந்தால், முழுப் பலன்களும் கிடைக்காது. பேசிக்கொண்டே நடப்பதால், நடைப்பயிற்சியின் மூலம் நுரையீரலுக்கு அதிகளவில் செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறையலாம். நடக்கும்போதுகூட, வாட்ஸ்அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி செல்போனை தடவிக்கொண்டிருந்தால், விபத்து நடக்கலாம். மேடு, பள்ளம் இல்லாத சமதரையில் நடக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

    குறிப்பாக, முதியவர்கள் சமதரையில் நடப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மைதானத்திலோ அல்லது வாகனப் போக்குவரத்து இல்லாத இடங்களிலோதான் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். வாய்ப்பிருந்தால், அருகிலிருக்கும் இயற்கை சூழ்ந்த இடங்களில் நடப்பது மிகவும் நல்லது. பறவைகளின் குரல் ஒலிகளும், தாவரங்களின் வாசனையும் துணை நிற்க நடைப்பயிற்சி செய்வது கூடுதல் பலன்களைக் கொடுக்கும்.
    உடற்பயிற்சியில் அனைவருக்கும் ஏற்றது. உறுதியூட்டக்கூடிய உடற்பயிற்சிகளால் தசைகளும், நரம்புகளும் முறுக்கேறி, உடல் கட்டுக்கோப்புடன் விளங்கும்.
    உடற்பயிற்சி இல்லாத உடல் சதை உறுதியாக இருக்காது. இந்தச் சதையில் திரவம் சேர்ந்திருக்கும். அத்துடன் கழிவுப்பொருட்கள் நீங்குவது தடைபட்டு, ரத்தஓட்டமும் பாதிக்கப்படும். எப்போதும் உடலை மந்தமாக வைத்திருந்தால் இதயக்கோளாறும் ஏற்பட்டு எல்லாவிதங்களிலும் ஆரோக்கியம் கெட்டுவிடும். ஆனால் உறுதியூட்டக்கூடிய உடற்பயிற்சிகளால் தசைகளும், நரம்புகளும் முறுக்கேறி, உடல் கட்டுக்கோப்புடன் விளங்கும்.

    உடற்பயிற்சியில் அனைவருக்கும் ஏற்றது. நடப்பது, சுறுசுறுப்பாக நீண்டதூரம் நடக்கலாம். நடக்கும்போது சுவாசத்தை ஆழமாக இழுத்துவிட வேண்டும். ஆனால் முறையாக நடக்க வேண்டும். எப்படி உடலை அசைத்து நடக்க வேண்டுமோ அப்படி அசைத்து, சமமான அடிகள் வைத்து கடைசி வரையில் ஒரே வேகத்துடன் நடப்பது ஒரு சிறந்த பயிற்சியாகும். மேலும் நடக்கும் பாதை வளைந்து வளைந்து செல்லாமல் ஒரே நேர்கோட்டில் அமைய வேண்டும்.

    வீட்டிற்குள்ளேயே பயிற்சி பெற பல்வேறு உபகரணங்கள் வந்துவிட்டாலும், அவைகள் இல்லாமல் செய்யும் பயிற்சி சீரான பலனைத்தரும். கைகளையும், கால்களையும் வீசுவது, உட்கார்ந்து எழுந்திருப்பது என்பது போன்ற பயிற்சிகள் பலவீனமான மனிதர்களுக்கும் உறுதியளிக்கக்கூடியவை. படிப்படியாக பயிற்சிகளின் தன்மை, காலஅளவு ஆகியவற்றை அதிகரிக்கலாம். அடிவயிற்றை இழுத்து சுவாசத்தை வெளியே விடுவதும் ஒரு சிறந்த பயிற்சியாகும். இது மிகவும் எளிய பயிற்சியாக இருந்தாலும் ஜீரண உறுப்புகளுக்கு நல்ல பயிற்சியாகும். இதன்மூலம் உணவுச்சத்துக்கள் உடலால் நன்கு கிரகிக்கப்பட வாய்ப்பு உண்டு.

    இன்றைக்கு ஏற்படும் அனைத்து நோய்களும் உடல் மற்றும் மனம் தொடர்பானவையே. தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வது மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்யும்.
    உடல்நலத்துக்கு எத்தனையோ உடற்பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால், மன ஆரோக்கியத்துக்கு யோகா போன்ற சில பயிற்சிகள் மட்டுமே உள்ளன. எதிர்மறையான எண்ணங்களால் ஏற்படும் கோபம், வெறுப்பு, கவலை, பயம், தோல்வி மனப்பான்மை போன்றவற்றிலிருந்து தப்பிக்க யோகா பயிற்சி அவசியம். தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்வது மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்யும்.

    இன்றைக்கு ஏற்படும் அனைத்து நோய்களும் உடல் மற்றும் மனம் தொடர்பானவையே. மனதை கவனித்து, தேவையான பயிற்சிகளை அளித்தால் பல நோய்கள் குணமாகிவிடும். மனதை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதே ஒரு கலைதான். நோய் வந்த பிறகு கஷ்டப்படுவதைவிட நோய் வரும்முன் பாதுகாத்துக்கொள்வதே நல்லது.

    மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா பயிற்சிகள், பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி) மற்றும் தியானப் பயிற்சிகள் உதவும். யோகாவைப் பொறுத்தவரை நோய் வந்த பிறகு குணப்படுத்துவதற்கும், வராமல் பாதுகாப்பதற்கும் ஒரே பயிற்சிகள்தாம். இதுதான் யோகாவின் மகிமை, தனித்தன்மை. தினமும் ஒரு மணி நேரம் உடல் பயிற்சிகள் செய்வது, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

    ஒவ்வோர் ஆசனப் பயிற்சியையும் கண்களை மூடி, மூச்சுப்பயிற்சியுடன் சேர்த்துப் பொறுமையாகச் செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரம், தடாசனம், விருக்ஷாசனம், பத்மாசனம், வஜ்ராசனம், பவன்முக்தாசனம், சேதுபந்தாசனம், புஜங்காசனம், சலபாசனம், சவாசனம் போன்ற ஆசனங்களைச் செய்யலாம்.

    தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்படும் நோயாளிகள் படுத்தநிலையில் `ஓம்' என்று உச்சரித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். மனஅழுத்தம் உள்ளவர்கள் இந்தப் பயிற்சியை செய்தால், பிரச்னை குறைந்து மகிழ்ச்சியாக வாழலாம். இவற்றை தினமும் செய்யவேண்டியது அவசியம். இதனால் மனஅழுத்தம் மீண்டும் வராமலிருக்கும்; இது நாம் செய்யும் வேலைகளைச் சுலபமாக்கும். மேலும், யோகா பயிற்சிகளை முறையான யோகா மருத்துவரிடம் கற்றுக்கொண்டு செய்தால் நல்ல பலனளிக்கும். மனஅழுத்தத்துக்கும் மனம் சார்ந்த (Psychosomatic) நோய்களுக்கும் யோகாவைத் தவிர வேறு மருந்து இல்லை.

    ×