search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    போதையால் தடம் மாறும் மாணவர்கள்... தவிக்கும் பெற்றோர்கள்... கடிவாளம் போடுவது எப்போது?
    X

    போதையால் தடம் மாறும் மாணவர்கள்... தவிக்கும் பெற்றோர்கள்... கடிவாளம் போடுவது எப்போது?

    • போதைபொருட்களின் கலாசாரம் தற்போது மாணவர்களிடையே அதிகரித்து இருப்பது வேதனையாக உள்ளது.
    • 40 சதவீதம் மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்து உள்ளது.

    குடியால்... குடிகெடும் என்பார்கள். கள்ளச்சாராயத்தை ஒழித்தாலும், போதை ஒழியவில்லை.... நகர வாலிபர்களிடம் சோசியல் டீரிங்காக தொடங்கிய போதைபழக்கம், அதுவே காலபோக்கில் போதைக்கு முழுமையாக அடிமையாகிவிடும் சூழ்நிலைக்கு கொண்டுபோய் விடுகிறது. சிலர் விளையாட்டாக அதை பயன்படுத்தி, பின்னர் அதற்கு அடிமையாகி அதில் இருந்து விடுபட முடியாமல் தனது வாழ்க்கை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது இன்றைய கால உண்மை. இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாய நிலை உள்ளது.

    போதைப்பொருள், அதை பயன்படுத்தும் நபரை மட்டும் பாதிப்பது இல்லை. அவருடைய குடும்பத்தையே பாதிக்கிறது. மதுவில் தொடங்கி, கஞ்சா, அபின், போதை மாத்திரை, போதை ஸ்டாம்பு, போதை சாக்லெட் என்று போதை பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்த வகையான போதைபொருட்களின் கலாசாரம் தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து இருப்பதுதான் வேதனையாக உள்ளது.

    பாதை மாறும் நிலை

    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் வியாபாரிகள், சில மாணவர்களை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு, அவர்கள் மூலம் மற்ற மாணவர்களுக்கு போதைப்பொருட்களை தாராளமாக சப்ளை செய்து, தங்களின் வருமானத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள். 40 சதவீதம் மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாக அதிர்ச்சி தகவலும் கிடைத்து உள்ளது.

    குறிப்பாக 13 வயது முதல் 19 வயது வரை உள்ள டீன்-ஏஜ் மாணவர்கள், கல்லூரி மாணவிகளும் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதுதான் நம்மை அதிர்ச்சியில் ஆழ வைக்கிறது. எனவே கோவை மாநகர மற்றும் புறநகர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க அரசும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து கடிவாளம்போட வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

    வடமாநில வாலிபர்கள்

    சஞ்சய் (காரமடை):- காரமடை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு முன்பு தாராளமாக போதைப்பொருட்கள் கிடைக்கிறது. குறிப்பாக கடைகளில் பீடி, சிகரெட் போன்ற பொருட்களை பலர் வாங்கி அங்கேயே குடிப்பதை பார்க்கும் மாணவர்கள், அவற்றை ஜாலியாக வாங்கி குடிக்கும்போது, அதற்கு அடிமையாகி வருகிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பீடி, சிகரெட் வழங்கக்கூடாது என்று அறிவித்தாலும் அதை யாரும் கேட்பது இல்லை.

    ராஜா (அன்னூர்):- அன்னூர் பகுதியில் கிராமங்கள் அதிகம். இங்கு வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் ஊருக்கு செல்லும்போது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்கிறார்கள். இதனால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி வருகிறார்கள். எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடும் வடமாநில வாலிபர்களை கண்காணித்து, தடுக்க வேண்டும்.

    சேவியர் (பள்ளி ஆசிரியர்):- சில பள்ளிகளில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதற்கு காரணம், பெற்றோர் பயன்படுத்துவதுதான். அவர்கள் பயன்படுத்தி வைத்திருப்பதை, அவர்களுக்கே தெரியாமல் எடுத்து வந்து, அதை சக மாணவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சில பள்ளிகளுக்கு அருகே இருக்கும் பெட்டிக்கடைகளில் மறைத்து வைத்து போதைப்பொருட்களை விற்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்.

    மாணவர்களை கண்காணிக்க வேண்டும்

    சந்தியா (சிங்காநல்லூர்):- மாணவர்கள், வீடுகளில் இருக்கும் நேரத்தைவிட பள்ளி, கல்லூரிகளில்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். சில மாணவர்கள் வெளியூர்களில் இருந்து வந்து தனியே அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். அவர்கள் ஒழுங்காக படிக்கிறார்களா?, சரியாக கல்லூரிக்கு வருகிறார்களா? என்பது ஆசிரியர்களுக்குதான் தெரியும். அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தால் உடனே அவர்கள் அதை கண்காணித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாணவரின் வாழ்க்கை கெட்டுப்போகாமல் தடுக்க முடியும். எனவே அதை ஒவ்வொரு ஆசிரியர்களும் செய்ய வேண்டும்.

    குரூப் அமைத்து வாங்கும் மாணவர்கள்

    ராமகிருஷ்ணன் (கல்லூரி பேராசிரியர்):- சில மாணவர்கள் வாட்ஸ்-அப், டெலிகிராம் போன்றவற்றில் குரூப் அமைத்து கொள்கிறார்கள். அந்த குரூப்பில் போதைப்பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள், வியாபாரிகள் இருப்பதால், யாருக்கு எவ்வளவு வேண்டும், எங்கு வந்தால் கிடைக்கும் என்று அந்த குரூப்பில் பதிவிடுகிறார்கள். இதனால் போலீசாருக்கு தெரியாமல் போதைப்பொருட்கள் படுஜோராக விற்பனை நடந்து வருகிறது. மாணவர்களின் செல்போனை நாங்கள் வாங்கி பார்க்க முடியாது. எனவே இதை பெற்றோர் கண்காணித்து, அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தால், செல்போனை வாங்கி வாட்ஸ்-அப், டெலிகிராமில் என்னென்ன குரூப்பில் உள்ளார்கள் என்பதை கவனித்து தகவல் தெரிவித்தால் அதை தடுக்கலாம்.

    போதைக்கு அடிமையானவர்களை கண்டுபிடிப்பது எப்படி?மனநல டாக்டர் பவித்ரா விளக்கம்

    தற்போது மாணவர்களிடையே வலிநிவாரண மாத்திரையை சாப்பிட்டு போதையை ஏற்படுத்துவது, அதை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் ஏற்றுக்கொள்ளும் பழக்கம்தான் அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக அவர்களுக்கு மனஅழுத்தம், ஆளுமைதன்மை குறைவது, மன குழப்பம், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தனிமையைதான் அதிகம் விரும்புவார்கள். சரியாக தூக்கமின்மை, அதிகமாக கோபப்படுதல், உணவில் நாட்டம் இல்லாதது, பள்ளி, கல்லூரிக்கு சரியாக செல்லாமல் இருத்தல், சம்பந்தம் இல்லாமல் பணம் கேட்டு வாங்கிச்செல்வது போன்றவை இருந்தால் பெற்றோர் மிகக்கவனமாக கண்காணிக்க வேண்டும்.

    அப்படியே விட்டுவிட்டால் உடல் நடுக்கம், பதட்டம் அதிகமாக ஏற்படும். போதைப்பொருட்களை அதிகம் பயன்படுத்தும்போது கல்லீரல் பாதிக்கும். எனவே அவர்களை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச்சென்று மருந்து கொடுப்பதுடன், போதிய கவுன்சிலிங் வழங்கும்போது இந்த பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வந்துவிடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×