search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    வெளிநாட்டில் கல்வி கற்க ஆசையா..?
    X

    வெளிநாட்டில் கல்வி கற்க ஆசையா..?

    • இந்தத் தேர்வை எழுதுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
    • கேட்கும் பகுதிக்கு 30 நிமிடங்கள் தரப்படும்.

    ரஷியா, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஆங்கிலப் புலமை ஒரு பொருட்டல்ல. கல்விக்கும் தொழிலுக்கும் தாய்மொழியே அவர்களுக்குப் போதுமானதாக உள்ளது. இந்திய நிலைமை அப்படியல்ல. இங்கே ஆங்கிலம் தவிர்க்க முடியாத மொழி. பல மொழி பேசும் மக்களை கொண்ட நாடாக இந்தியா இருப்பதால், ஆங்கிலமே வெவ்வேறு மொழி பேசும் மக்களை இணைக்கிறது.

    அத்துடன், இந்தியாவில் இருந்து படிப்புக்காகவோ வேலைக்காகவோ வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகம் உள்ளது. அதற்குக் கல்வி அறிவும் தொழில் அறிவும் மட்டும் போதாது. ஆங்கில மொழிப் புலமையை நிரூபிக்கும் வண்ணம் ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) போன்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். அதனால்தான், ஓராண்டுக்குச் சுமார் 30 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுகிறார்கள்.

    சர்வதேச அளவில் ஒருவரின் ஆங்கில மொழிப் புலமையைப் பரிசோதித்து மதிப்பீடு செய்யும் அமைப்பே இந்த ஐ.இ.எல்.டி.எஸ். இந்த மதிப்பீடின்றி மேலை நாட்டுக் கல்லூரிகளில் நுழையவே முடியாது. இந்தத் தேர்வை எழுதுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

    கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேசுதல் என்று இந்தத் தேர்வு நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். பேசுதல் தவிர்த்து மற்ற மூன்று பகுதி களுக்கான தேர்வுகள் ஒரே நாளில் நடைபெறும்.

    கேட்கும் பகுதிக்கு 30 நிமிடங்கள் தரப்படும். அந்தப் பகுதியில் நான்கு ஒலிப்பதிவுகள் ஒலிபரப்பப்படும். அந்த ஒலிப்பதிவுகளில் நடைபெறும் உரையாடல்களை சார்ந்து கேள்விகள் கேட்கப்படும்.

    வாசிப்புப் பகுதிக்கு 60 நிமிடங்கள் தரப்படும். நீண்ட கட்டுரையும் குறுகிய கட்டுரையும் வாசிப்பதற்கு கொடுக்கப்படும். பின்பு அதிலிருந்து 40 கேள்விகள் கேட்கப்படும். உங்கள் கிரகிக்கும் திறனையும் வாசிக்கும் தன்மையையும் அந்தக் கட்டுரையில் பொதிந்திருக்கும் கருத்துகளை நீங்கள் புரிந்துகொள்ளும் பாங்கையும் பரிசோதிக்கும் வண்ணம் அந்தக் கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    எழுதுதல் பகுதியில் உங்கள் இலக்கணத்திறனும் நீங்கள் பயன்படுத்தும் சொற்களின் செறிவும் மதிப்பீடு செய்யப்படும். இந்தப் பகுதிக்கு 60 நிமிடங்கள் தரப்படும்.

    பேச்சுப் பகுதிக்கு அதிகபட்சம் 15 நிமிடங்கள் தரப்படும். இந்தத் தேர்வில் மட்டும்தான் நீங்கள் தேர்வாளரை எதிர்கொள்வீர்கள்.

    இந்த நான்கு பகுதிகளுக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்படும். அந்த நான்கு பகுதிகளில் நீங்கள் பெற்ற மதிப்பெண்களின் சராசரியே உங்கள் ஒட்டுமொத்த மதிப்பெண். அந்தச் சராசரி ஏழுக்கு மேல் இருந்தால்தான், நல்ல பல்கலைக்கழகத்தில் உங்களால் சேர முடியும்.

    கூச்சம் வேண்டாம்

    ஆங்கிலத்தில் பேசும்போது, சொல்ல வரும் கருத்தில்தான் நமது கவனம் இருக்க வேண்டும். தொடக்கத்தில் மொழியின் இலக்கணத்திலோ உச்சரிப்பிலோ கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆங்கிலத்தில் பேசும்போது எழும் கூச்சத்தை/அச்சத்தைக் கடப்பதற்கு இதை முயன்றாலே போதும். மொழி என்பது வெறும் ஊடகமே. அறிவுக்கும் மொழியின் புலமைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இந்த அடிப்படை புரிதல் இருக்குமேயானால், ஆங்கிலப் புலமை நமக்கு எளிதில் கைகூடிவிடும்.

    Next Story
    ×