search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஓணம் பண்டிகையின் பாரம்பரியம், வரலாறு
    X

    ஓணம் பண்டிகையின் பாரம்பரியம், வரலாறு

    • கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
    • திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.

    கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும், வாமணன் அவதரித்த நாளும் அன்றுதான் எனவும் குறிப்புகள் கூறுகின்றன.

    மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமணனாக (குள்ளமான உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.

    தன் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி. அதன்படி, ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

    ஓணம் ஸ்பெஷல் உணவுகள்

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பை கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா"என்ற உணவு தயாரிக்கப்படுகிறது.

    புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும்.

    ஓணம் ஸ்பெஷல் அத்தப்பூக்கோலம்

    ஓணம் பண்டிகையின் சிறப்பு அம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாக கொண்டாடுவர்.

    புத்தாடை

    கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும், பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள். 10 நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும். முக்கியமாக களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப்போட்டிகள் போன்றவைகள் நடைபெறும்.

    திருவிழா பத்து நாட்கள் நீடிக்கும், முதல் நாள் அத்தம் என்றும் மற்றவை சித்திரை, சோதி, விசாகம், அனிசம், திருக்கேடா, மூலம், பூராடம், உத்ராடம் மற்றும் திருவோணம் என்றும் வரிசையாக முத்திரை குத்தப்பட்டு, திருவோணம் மிக முக்கியமானது. இந்த ஆண்டு ஓணம் ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 31 வரை கொண்டாடப்படும்.

    Next Story
    ×