search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: 2-வது நாளாக கிரிவலம் சென்றனர்
    X

    சாமி தரிசனம் செய்வதற்காக கோவில் வெளியே நீண்ட வரிசையில் நிற்கும் பக்தர்கள்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது: 2-வது நாளாக கிரிவலம் சென்றனர்

    • பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    • வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலை சுற்றும் பாதையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போதும், சித்ரா பவுர்ணமியன்றும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். சமீப நாட்களாக தினமும் பலர் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் காலை 10.17 மணியளவில் தொடங்கி நேற்று காலை 10.57 மணியளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இரவில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கிரிவலப்பாதையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் கிரிவலப்பாதையில் செங்கம் சாலை சந்திப்பு பகுதியில் இருந்து அண்ணா நுழைவு வாயில் வரையில் பக்தர்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாத வகையில் தரைக்கடைகள், டீக்கடைகள், இளநீர் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. சில டீக்கடைக்காரர்கள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதைகளில் தங்கள் கடை முன்பு இருக்கைகளை போட்டு வைத்து இருந்தனர். இதனால் சாலையில் கூட்டத்துடன் நடக்க முடியாத முதியவர்கள் மற்றும் பக்தர்கள் நடைபாதையிலும் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் ஈசான்ய மைதானத்தில் இருந்து ஈசான்ய லிங்கம் கோவில் வரை நடைபாதையில் பக்தர்கள் நடந்து செல்ல முடியாத வகையில் வரிசையாக கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனை போலீசார் கண்டு கொள்ளவில்லை என்று பக்தர்கள் வேதனையாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து 2-வது நாளாக நேற்று பகலிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பகலில் வெயில் கொளுத்தியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். அதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கோடை வெயில் தொடங்கிய காரணத்தினால் வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மோர் வழங்கப்பட்டது. கோவிலுக்குள் பொது மற்றும் கட்டண தரிசன வழி மட்டுமின்றி கோவிலுக்கு வெளியிலும் சாலை வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்கள் 3 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் எந்தவித இடையூறும் இன்றி சென்று வர போக்குவரத்து துறையின் மூலம் பஸ் வசதி மேற்கொள்ளப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலையில் திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, புதுச்சேரி செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் திடீரென பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பக்தர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்தனர். மேலும் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் ரெயில் வந்ததும் பக்தர்கள் ஒருவரை, ஒருவர் முண்டியடித்து கொண்டு ஏறி சென்றனர்.

    இதனால் ரெயில் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×