search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தனவரவை பெருக்கும் தமிழர் திருநாள்
    X

    தனவரவை பெருக்கும் தமிழர் திருநாள்

    • புதுப்பானை வாங்கி, புது அரிசியில் பொங்கல் வைப்பது வழக்கம்.
    • சங்க காலத்தில் தை நீராடுதல், பாவை நோன்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழர் திருநாள் என்று பெருமையோடு அழைக்கப்படும், `பொங்கல்' விழா, தைப் பொங்கலுக்கு முன்தினமான போகி பண்டிகையில் இருந்து தொடங்குகிறது. 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) போகிப்பண்டிகை, 15-ந்தேதி (திங்கட்கிழமை) தைப்பொங்கல், 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி (புதன்கிழமை) காணும் பொங்கல் என்று 4 நாட்கள் பெரு விழாவாக இந்த பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

    தைப் பொங்கல்

    நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆறு மாதம் பகல், ஆறு மாதம் இரவு. உத்தராயனம் என சொல்லப்படும் தை மாதம் முதல் தேதியில் இருந்து ஆனி மாதம் வரையான 6 மாத காலம், தேவர்களுக்கு பகல் நேரமாகும். ஆடி முதல் மார்கழி மாதம் வரை, தேவர்களுக்கு இரவு நேரம் ஆகும். `உத்தரம்' என்றால் `வடக்கு', `அயனம்' என்றால் `வழி'. சூரியன் சிறிது வடக்கு நோக்கி பயணிப்பதை உத்தராயனம் என்றும், தெற்கு நோக்கி சிறிது நகர்வதை தட்சிணாயனம் என்றும் அழைக்கிறோம்.

    புதுப்பானை வாங்கி, புது அரிசியில் பால் பொங்கல் வைப்பது வழக்கம். பொங்கல் பண்டிகையை பற்றி, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இந்த பொங்கல் விழாவை, `இந்திர விழா' என்று நம் முன்னோர்கள் சிறப்பித்துள்ளனா்.

    சங்க காலத்தில் தை நீராடுதல், பாவை நோன்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பொங்கல் அன்று கரும்பு, இஞ்சிக்கொத்து, மஞ்சள் கொத்து வாங்கி, மஞ்சளை சிறுசிறு துண்டாக நறுக்கி, மஞ்சள் கயிற்றில் கோர்த்து, புதுப்பானையில் கட்டி, அந்தப் பானையை அலங்கரிப்பார்கள்.

    பொங்கல் பொங்கும் பொழுது, கிழக்கு முகமாக முதலில் பொங்கினால், சுப காரியங்கள் நடக்கும் என்பார்கள். அதேபோல் மேற்கு பக்கம் பொங்கினால் குடும்ப விருத்தி உண்டாகும். தெற்கு பக்கம் பொங்கினால் செலவு அதிகரிக்கும். வடக்கு பக்கம் பொங்கினால் பொருள் வரவு ஏற்படும் என்றும் சொல்வார்கள். பொங்கல் பொங்கும் பொழுது 'பொங்கலோ பொங்கல்...' என்று கூறி மகிழ்வார்கள்.

    இந்த வருடம் பொங்கல் வைக்க உகந்த நேரம்:

    காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள், மதியம் 12.40 மணி முதல் 1.40 மணிக்குள்.

    Next Story
    ×