search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மதுரை கள்ளழகர் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம்
    X

    மதுரை கள்ளழகர் கோவில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம்

    • யாகசாலை பணிகள் இரண்டு நாட்களாக தொடங்கி நடைபெற்றது.
    • புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பதினெட்டாம்படி ராஜகோபுரத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    12 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக 40 வேத விற்பன்னர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் 8 யாக குண்டங்களில் வேத மந்திரங்களுடன் யாக பூஜைகள் நடத்தினர்.

    இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு `கோவிந்தா' கோவிந்தா என்று கோஷம் எழுப்பினர். முன்னதாக நேற்று இரவு கள்ளழகர் கோவில் பதினெட்டாம்படி 7 நிலை கொண்ட ராஜகோபுரம், முழுக்க முழுக்க வண்ண விளக்குகளால், அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    பக்தர்கள் பாதுகாப்புடன் நின்று கும்பாபிஷேக விழாவை காண, தனித்தனியாக, இரும்பு கம்பிகளான தடுப்புகள் மாவட்ட காவல் துறை மூலம் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு மிகப் பழமையான திருப்பவுத்திர புஷ்கரணி தெப்பக்குளத்திற்கு அழகர் மலையில் இருந்து வழிந்து நூபுர கங்கை தீர்த்த தண்ணீர், மற்றும் தற்போது பெய்யும்மழை நீர் சேர்ந்து தெப்பக்குளம் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.

    இந்த கும்பாபிஷேக நேரத்தில் இந்த தெப்பக்குளம் நிரம்பி உள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க நூபுர கங்கை புனித தீர்த்தக் குடங்களிலுருந்து, கும்ப கலசங்களில் குடம் குடமாக ஊற்றி பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட கும்பாபிஷேக விழா நடை பெற்றது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்து பூ மழை தூவியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் அறங்காவலர் குழுவினர், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×