என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நன்மைகளும், தீயவழியில் செல்பவர்களுக்கு நரகமும் உள்ளது என்பதை திருக்குர்ஆன் அழுத்தமாக கூறி எச்சரிக்கை செய்கிறது.
    இஸ்லாமியர்களுக்கு, எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட மிகப்பெரிய வெகுமதி புனிதம் நிறைந்த இந்த ரமலான் மாதம். ரமலான் காலத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயல்களுக்கும் பல மடங்கு நன்மைகளை இறைவன் நமக்கு அளிக்கின்றான்.

    மற்ற காலங்களைவிட ரமலான் காலத்தில் செய்யப்படும் வணக்க வழிபாடுகள், தான தர்மங்கள் என அனைத்து நற்செயல்களுக்கும் இறைவன் ஏராளமான வெகுமதிகளை நமக்கு தருகிறான். எனவே அந்த வெகுமதிகளின் மதிப்பை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதை நாமும் மற்றவர்களும் பெற பாடுபட வேண்டும்.

    ரமலானுடைய இந்த நேரம் பொன்னானவை. இந்த நேரத்தில், வழிகெடுக்கும் ஷைத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் ஷைத்தான் நமக்கு கிடைக்க இருக்கும் நன்மைகளை தடுப்பதோடு நம்மை நரகத்திற்கும் அனுப்பிவிடுவான். இதையே திருக்குர்ஆன் (17:18) இவ்வாறு எச்சரித்துக்கூறுகிறது:



    ‘எவர்கள், (மறுமையைப் புறக்கணித்து விட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர் களுக்கு, நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள்‘.

    நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நன்மைகளும், தீயவழியில் செல்பவர்களுக்கு நரகமும் உள்ளது என்பதை திருக்குர்ஆன் அழுத்தமாக கூறி எச்சரிக்கை செய்கிறது. மேலும் ஒருவருடைய பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது என்பதையும் திருக்குர்ஆன் வசனம் 17:15 இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான்‘.

    இந்த உலகம் மாயைகளால் ஆனது. அதன் கவர்ச்சியில் நாம் மயங்கிவிடக்கூடாது. தற்போது இந்த உலக வாழ்வில் வாழ்ந்தாலும், மறுமை உலக வாழ்க்கையில் நாம் கவனம் செலுத்தவேண்டும். நம்மை வழிகெடுக்கும் ஷைத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாப்பு தேடவேண்டும். ஷைத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக, ஆமீன்.

    மவுலவி எம். எம். அப்துல் கனி, திருநெல்வேலி சந்திப்பு.
    எந்தக் காற்றினால் இந்த உலகம் உயிர் வாழ்கிறதோ அதே காற்றினால் உலகத்திற்கு பேரழிவும் ஏற்படுவதுண்டு. புயல், சூறாவளி போன்றவற்றைக் காணும்போது இறைவனின் ஆற்றலை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
    நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையே இந்தப் புவி என்றனர் நம் முன்னோர்கள். இந்தப் பூமியை வளிக்கோளம், நீர்க்கோளம், நிலக்கோளம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

    'வளிக்கோளம்' என்பது வாயு நிலையில் உள்ள பொருள். 'நீர்க்கோளம்' என்பது திரவப்பொருள். 'நிலக்கோளம்' என்பது திடப்பொருள். பொருள்கள் எல்லாவற்றிற்கும் மூன்று நிலைகள் உள்ளன என்பதை நாள்தோறும் நமக்கு உணர்த்தும் உருமாதிரிகள் இந்த மூன்று பிரிவுகள் என்றும் சொல்லலாம்.

    காற்றில் ஒரு சில வாயுக்களின் செறிவு நிலை மாறாமல் இருக்கும். உலகமெங்கும் இவைகளின் அளவு ஒரே விதத்தில் இருக்கும். வளிக்கோளத்தில் அடங்கியுள்ள காற்றுகள் நைட்ரஜன், ஆக்சிஜன், ஆர்கான், கரியமில வாயு, நியான், ஹீலியம், கிரிப்டான், செனான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் முதலியன.

    இவற்றில் நைட்ரஜன் கன அளவில் 78 சதவீதம்; ஆக்சிஜன் 21 சதவீதம். மற்ற காற்றுகள் எல்லாம் சேர்ந்து ஒரு சதவீதம் மட்டுமே உள்ளன. காற்று மண்டலத்தில் அடங்கியுள்ள முக்கியமான காற்று, நைட்ரஜன். இது எந்தவித வினைச்செயல்களிலும் ஈடுபடாமல் தனித்து இயங்கக்கூடியது. இதற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.

    ஆக்சிஜன் எளிதில் தீப்பற்றக் கூடியது. வெடிக்கக் கூடியது. காற்றில் நைட்ரஜன் இல்லாவிட்டால் என்ன ஆகும்? அடுப்புப் பற்ற வைக்க ஒரு தீக்குச்சியைக் கிழித்தாலே ஆக்சிஜன் பற்றி எரியத் தொடங்கும். மிகவும் கடுமையாக வெடித்து பலத்த சேதங்களை ஏற்படுத்தி விடும். ஆக்சிஜனின் அத்தகைய தன்மையை அடக்கி ஒடுக்கி ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நைட்ரஜன் தான்.

    காற்றுகளின் சேர்க்கைதான் வளிக்கோளம். பூமியில் காற்று (வாயு) மண்டலம் எப்படி உண்டானது? பூமி தோன்றிய தொடக்கத்தில் இது ஒரு நெருப்புக் கோளமாய் இருந்தது. பின்னர் சிறிது சிறிதாகக் குளிர்வடையத் தொடங்கியது. மேற்பகுதி குளிர்ந்து திடத்தன்மை பெற்ற போதிலும் உட்புறம் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. அப்போது பூமியின் உட்பகுதியில் இருந்து நெருப்பைக் கக்கியவாறு எரிமலைகள் தோன்றி வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன. இவற்றில் இருந்து ஏராளமான வாயுக்களும் வெளியேறின. இது பல கோடிக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்து வந்ததால் இந்த வாயுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பூமியைச் சூழ்ந்தவாறு வாயு மண்டலத்தை உருவாக்கின.

    வளி, காற்று என்னும் இரண்டு வார்த்தைகளையும் தமிழில் பொது வழக்கில் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம். இருந்தபோதிலும் அறிவியலில் இவை வெவ்வேறான பொருள் கொள்ளப்படுகின்றன. 'வளி' என்றால் 'நிலைத்து நிற்கும் காற்று'. வளி அசையும்போது அது 'காற்று' என்றாகி விடுகிறது. வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுக்குத் தனித் தனியான பெயர்களைச் சூட்டி அழைக்கும் வழக்கம் பண்டைக் காலத்தில் இருந்தே இருந்துள்ளது.

    வடக்கில் இருந்து வீசும் காற்று, வாடை; தெற்கில் இருந்து வீசும் காற்று, தென்றல்;
    கிழக்கில் இருந்து வீசும் காற்று, கொண்டல்; மேற்கில் இருந்து வீசும் காற்று, கோடை.
    காற்று இல்லாத இடமே இல்லை. அது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.



    காற்றை நம்மால் உணர முடிகிறதே தவிர பார்க்க முடியாது. காற்றுக்கு எடையும் உண்டு. காற்றில் எப்போதும் ஈரம் உண்டு. இதற்குக் காரணம் அதில் உள்ள நீராவிதான். நாம் உயிர் வாழ ஆக்சிஜன் ஆதாரமாக உள்ளது. மனிதன், விலங்குகள் சுவாசிப்பது ஆக்சிஜனைத்தான். ஆக்சிஜன் இல்லாவிட்டால் உயிரினங்கள் இருக்காது. மனிதர்கள் ஆக்சிஜனை சுவாசித்து கரியமில வாயுவை வெளியிடுகிறார்கள். இதைத் தாவரங்கள் சுவாசித்து, அதற்குப் பதிலாக ஆக்சிஜனை வெளியிட்டு காற்று மண்டலத்தில் கலக்கச் செய்கின்றன.

    மனிதன் உயிர் வாழ காற்று, நீர், உணவு இம்மூன்றும் மிகவும் அவசியம். ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ கிராம் காற்றைச் சுவாசிக்கிறான். சராசரியாக 2.5 லிட்டர் நீரைப் பருகுகிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் நாள்தோறும் 1.5 கிலோ உணவு தேவை.

    உணவின்றி 5 வாரம் உயிர் வாழ முடியும். நீரில்லாமல் 5 நாள் உயிர் வாழலாம். ஆனால் காற்று இல்லாமல் 5 நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது.
    காற்று -  இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ள துணை புரியும் அற்புத சான்றாகும்.

    நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும் - பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்தபின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் ஒவ்வொரு விதமான உயிரினத்தையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - விளங்கும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.
    (திருக்குர்ஆன் 2:164) என்றும்,

    இரவு - பகல் மாறி மாறி வருவதிலும், வானத்தில் இருந்தும் அருள் மழையை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன (45:5) என்றும் இறைவன் கூறுகின்றான்.

    எந்தக் காற்றினால் இந்த உலகம் உயிர் வாழ்கிறதோ அதே காற்றினால் உலகத்திற்கு பேரழிவும் ஏற்படுவதுண்டு. புயல், சூறாவளி போன்றவற்றைக் காணும்போது இறைவனின் ஆற்றலை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

    - பாத்திமா மைந்தன்
    நமது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமானால், அல்லாஹ் நமது பாவங்களை மன்னிப்பான் என்ற முழு நம்பிக்கை முதலில் வரவேண்டும். நம்பிக்கை இல்லாமல் செய்யப்படும் எந்த செயலும் நிச்சயம் பலனற்றதாகும்.
    இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமாக வருகிறது ரமலான் மாதம். ‘ரமலான்’ என்ற அரபுச் சொல்லிற்கு ‘கரித்தல்’, ‘சுட்டெரித்தல்’, ‘சாம்பலாக்குதல்’ என்று பல பொருள் உண்டு.

    நபிகளார் நவின்றார்கள்: ‘எவர் ரமலானில் முழு நம்பிக்கையுடன், நன்மையை எதிர்பார்த்து நோன்பு நோற்கிறாரோ, அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. எவர் ரமலானில் முழு நம்பிக்கையுடன், நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்குகிறாரோ, அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. எவர் லைலத்துல் கத்ர் இரவில் முழு நம்பிக்கையுடன், நன்மையை எதிர்பார்த்து நின்று வணங்குகிறாரோ, அவருக்கு அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’. (நூல்: புகாரி, முஸ்லிம்)

    நமது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமானால், அல்லாஹ் நமது பாவங்களை மன்னிப்பான் என்ற முழு நம்பிக்கை முதலில் வரவேண்டும். நம்பிக்கை இல்லாமல் செய்யப்படும் எந்த செயலும் நிச்சயம் பலனற்றதாகும்.

    நம்பிக்கை தான் நமது வாழ்க்கை; நம்பிக்கை தான் நம்மை உயர்த்தும்; நம்பிக்கை தான் நம்மை வளமாய், நலமாய் வாழவைக்கும்; அதே நம்பிக்கை தான் நமது பாவங்களையும் நிச்சயம் அழிக்கும் என்பது நோன்பு நமக்கு சொல்லும் செய்தி.

    அடுத்து, ‘நன்மையை நாம் எதிர்பார்க்க வேண்டும்’. இவ்வாறு நாம் எதிர்பார்த்து இருப்பதை அல்லாஹ்  விரும்பு கிறான். புனிதமிகு ரமலானில் மனிதனின் பாவங்கள் அல்லாஹ்வால் முற்றிலும் மன்னிக்கப்படுகிறது என்றால், நாம் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கவேண்டும். அதைத்தான் இந்த ரமலான் நமக்கு கற்றுத்தருகிறது.

    அல்லாஹ் கூறுகிறான்: ‘ரமலான் மாதம் எத்தகையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்’. (திருக்குர்ஆன் 2:185)

    உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்ட வந்த ஒப்பற்ற திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனித மாதம் தான் இந்த ரமலான் மாதம்.

    அல்லாஹ் கூறுகிறான்: ‘எவர் எனது நல்லுபதேச (குர்ஆனிய வசன)த்தை முற்றிலும் புறக்கணிக்கிறாரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கைதான் இருக்கிறது. இறுதித்தீர்ப்பு நாளில் அவனைக் குருடனாகவும் நாம் எழுப்புவோம்’. (திருக்குர்ஆன் 20:124)



    குர்ஆன் மட்டுமல்ல இதர வேதங்களான ஜபூர், தவ்ராத், இன்ஜீல் போன்ற மாபெரும் வேதங்களும் இப்புனித ரமலானிய தினங்களில் தான் அருளப்பெற்றன. இம்மாதம் திருக்குர்ஆன் அருளப்பெற்ற மாதம் என்பதால். புனித குர்ஆனை நாள் தவறாமல் நாம் ஓதி வர வேண்டும். இந்த நாட்களில் நாம் ஓதும் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒன்றுக்கு எழுபது மடங்கு நன்மை எழுதப்படுகிறது.

    புனித ரமலான் மாதத்திற்கு மட்டும் தனிச்சிறப்புகள் இருப்பது போல புனித நோன்பிற்கும் தனிச்சிறப்புகள் பல உண்டு.

    அல்லாஹ் கூறுகிறான்: ‘ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டது. இதன் மூலம் நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய் ஆவீர்கள்’. (திருக்குர்ஆன் 2:183)

    ‘தக்வா’ எனும் பயபக்தியையும், இறையச்சத்தையும் புனித நோன்பு நமக்கு பரிபூரணமாய் பெற்றுத்தருகிறது. ஒரு மனிதனுக்கு கட்டாயம் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் இறையச்சமும் ஒன்றாகும். இதுதான் அனைத்து நற்செயல்களுக்கும் அடிப்படையாகும். இது இல்லாமல் நமது எந்த நற்           செயல்களும் ஏற்கப்படுவதில்லை. அத்தகைய இறையச்சத்தை நோன்பு நமக்கு தருகிறது என்பதால் அதை கடைப்பிடித்து நன்மைகள் பெற முன்வரவேண்டும்.

    அடுத்து இப்புனிதமிகு ரமலானில் இவற்றிற்கெல்லாம் ஆணிவேராக இருப்பது ‘லைலத்துல் கத்ர்’ எனும் புனித இரவாகும். நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்களின்அறிவிப்புப்படி, ரமலான் முழுவதும் (ஏதோவொரு இரவில்) இப்புனித இரவு இருக்கிறது என்று நபிகளார் நவின்றார்கள். (நூல்: அபூதாவூது)

    இந்த நபிமொழி நமக்கு சொல்லும் செய்தி, ‘புனித ரமலானில் இறுதிப்பத்துநாட்கள் மட்டும்தான் மிகமிக முக்கியமானது என்றெண்ணி முதல் இருபது நாட்களை வீணாக்கிவிடாதீர்கள்’.

    நபிகளார் நவின்றார்கள்: ‘உங்களில் பலர் நோன்பு பிடிக்கின்றனர். ஆனால் பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவும் அவர்களுக்கு கிடைப்பதில்லை’. (நூல்: பைஹகீ)

    ‘ஸவ்ம்’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘நோன்பு’ என்று பொருள். அதற்கு மூலப்பொருள் ‘தடுத்துக் கொள்ளுதல்’ என்பதாகும். அதாவது– உணவு, குடிநீர், உடல் இச்சை மட்டுமின்றி வீண் பேச்சு, வீண் பார்வை, வீண் கேட்பு என வீணான அனைத்தையும் தடுத்துக்கொள்வதற்குத்தான் உண்மையில் நோன்பு என்று பெயர்.

    இதனால் தான் நபிகளார் கூறினார்கள்: ‘நோன்பு ஒரு கேடயம்’ என்று. நாம் அந்தக்கேடயத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. நமது இதயத்தில் இறையச்சம் வந்துவிட்டால் எந்த ஒன்றும் நமக்கு இலகுவான ஒன்றாகி விடும். புனித நோன்பின் மாண்புகளை பேணி நடந்தால் நிச்சயம் நாம் நமது வாழ்வில் மேம்பாடு அடைவோம் என்பது மட்டும் உறுதி.

    புனித நோன்பை கடைப்பிடித்து, மனித மாண்பை போற்றுவோம்.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.

    அரபு மாதங்களில் ரமலான் மாதம் ஒன்பதாவது மாதம். ‘ரமலான்’ என்பதற்கு கரித்தல், பொசுக்குதல், சாம்பலாக்குதல் என்று பொருள். திருக்குர்ஆனில் ரமலான் மாதத்தின் சிறப்பு குறித்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
    தமிழ், ஆங்கில மாதங்களைப் போல இஸ்லாமிய மாதங்களும் 12 தான். அரபு மாதங்களில் ரமலான் மாதம் ஒன்பதாவது மாதம். ‘ரமலான்’ என்பதற்கு கரித்தல், பொசுக்குதல், சாம்பலாக்குதல் என்று பொருள். அதாவது நமது குற்றங்குறைகளை, பாவங்களை இந்நோன்பு போக்கி விடுவதால் இதற்கு ரமலான் என்ற பெயர் மிகப்பொருத்தமே.

    இந்த மாதத்தில்தான் உலகப்பொது மறையாம் திருக்குர்ஆன் அருளப்பெற்றது. திருக்குர்ஆனில் ரமலான் மாதத்தின் சிறப்பு குறித்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

    ‘ரமலான் மாதம் எத்தகையதென்றால், அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன்மூலம் நாடுகிறான்)’. (திருக்குர்ஆன் 2:185)

    இந்த வசனத்தின் மூலம் ரமலான் நோன்பின் மதிப்பை, அதன் சட்ட திட்டத்தை, திருக்குர்ஆனின் மகத்துவத்தை, நமது நன்றியின் வெளிப்பாட்டை நாம் நன்கு தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

    திருக்குர்ஆன் இறங்கிய மாதம் இது என்பதால் இந்த மாதத்தில் நாம் இயன்றவரை குர்ஆன் முழுவதையும் முழுமையாக ஓதி முடிக்க வேண்டும். திருக்குர்ஆன் முப்பது சிறிய பகுதிகளைக் கொண்டது. எனவே, தினமும் நாம் தவறாமல் நாள் ஒன்றுக்கு ஒருபகுதி என்று ஓதினால் கூட ரமலானின் முப்பது நாட்களில் அதன் முப்பது பகுதிகளை மிக இலகுவாக, உறுதியாக ஓதி முடித்து விட முடியும்.

    இப்புனித மாதத்தில் நாம் உச்சரிக்கும் ஒவ்வொரு குர்ஆனியச் சொற்களுக்கும் ஒன்றுக்கு எழுபது நன்மைகள் வழங்கப்படுகின்றன. அப்படியானால் நாம் திருக்குர்ஆனை ஒரு முறை முழுமையாக ஓதி முடித்தால் அது எழுபது முறை குர்ஆன் ஓதி முடித்ததற்குச் சமம் என்று பொருள்.

    இன்னொரு இறைவசனம் நோன்பு நமக்குத் தரும் பயன்கள் குறித்துப்பேசுகிறது இப்படி:



    ‘ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டது. இதன் மூலம் நீங்கள் இறை அச்சமுள்ளவர்களாய் ஆவீர்கள். (திருக்குர்ஆன் 2:183)

    நோன்பு கடமையாக்கப்பட்டதற்கு உண்மையான காரணம் என்ன என்பதை இந்த வசனம் மிகஅழகாகத் தெளிவுபடுத்துகிறது. ‘தக்வா’ எனும் இறையச்சத்தை நம் உள்ளத்தில் ஏற்படுத்துகிறது என்பது தான் அது.

    நோன்பு நோற்கும் ஒருவன் நிச்சயம் இறையச்சத்தைப் பெற்றுக்கொள்வான் என்பதில் எவ்வித சந்தேகமும் அறவே இல்லை. ஆம்! அல்லாஹ்விற்காக நோன்பு வைக்கும் ஒருவன், தன் வீடு அல்லது வீட்டுக்கு வெளியில் தனித்திருக்கும் போது, அவன் நினைத்தால் எதையும் சாப்பிடலாம். ஆனால் அவன் அப்படிச் செய்வதில்லை. காரணம்- ‘அல்லாஹ் நம்மைப்பார்க்கிறான்’ என்ற ஒரே இறையச்சம் தான்.

    இப்படிப்பட்ட இறைபயம் அவனுக்குள் வருவதற்கு மூலகாரணமாக இருப்பது இந்த ரமலான் நோன்பு தானே!

    அல்லாஹ்வை அஞ்சி வாழ எதுவெல்லாம் உதவுகிறதோ அதுவெல்லாம் இம்மனித குலத்திற்கு அவசியமான ஒன்றுதான். அதில் இந்த நோன்பு முதலிடம் வகிக்கிறது என்றால் அது மிகையல்ல. இதனால் தான் ‘இறையச்சம் உள்ளவர்களுக்குத் தான் இக்குர்ஆன் நேர்வழிகாட்டும்’ (2:2) என்று இறைமறைக் குர்ஆன் அதன் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறது.

    அடுத்து, இரவில் தொழுகை, பகலில் தான, தர்மம், சொல்லில் உண்மை, செயலில் நேர்மை என நம்மை நாமே மாற்றிக்கொள்வதற்கு அருமையானதொரு பயிற்சிக்காலம் தான் இந்த இனிய ரமலான். நோன்பு வெறுமனே பசியும், பட்டினியுமாய் கிடப்பதல்ல.

    நம்மைச் சுற்றியுள்ள ஏழை, எளியவர்களின் பசியை உணர்ந்து இதர நாட்களில் அவர்களையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று உணர்வது தான் நோன்பின் அசல் தத்துவம்.

    ‘எத்தனையோ பேர் நோன்பு நோற்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பசி, பட்டினியைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை’ என்று நபிகளார் எச்சரித்துக்கூறினார்கள். (புகாரி)

    இம்மாதத்தின் ஆரம்ப பத்து நாட்கள் ‘ரஹ்மத்’ எனும் இறையருள் நிறைந்தநாட்கள். எனவே, இந்நாட்களில் அதிகமதிகம் இறையருளை அல்லாஹ்விடம் கேட்டு நாம் பிரார்த்தனை செய்யவேண்டும். அடுத்த நடுப்பத்து நாட்கள் ‘மஃபிரத்’ எனும் பாவ மன்னிப்பிற்குரிய நாட்கள். எனவே, இந்நாட்களில் அதிகமதிகம் நாம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேட வேண்டும். இறுதி பத்துநாட்கள் ‘இத்க்’ எனும் நரக விடுதலைக்குரிய நாட்கள். எனவே, இந்நாட்களில் நரக வேதனைகளை விட்டும் அதிகமதிகம் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும்.

    இந்த புனித ரமலானில் இறைவன் வகுத்த வழியில் நோன்பு நோற்று, இறையருளைப்பெற நாம் அனைவரும் முயற்சிசெய்வோம்.

    மவுலவி எஸ். என். ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
    இரவில் தூங்கும்போது கிடைக்கும் சுகமும், இனிமையும், பகலில் உறங்கும் போது நமக்கு கிடைப்பதில்லை. எவ்வளவு தான் பகல் நேரத்தில் தூங்கினாலும் அந்த தூக்கம் இரவு நேர தூக்கத்திற்கு ஈடாக முடியாது.
    இரவில் தூங்கும்போது கிடைக்கும் சுகமும், இனிமையும், பகலில் உறங்கும் போது நமக்கு கிடைப்பதில்லை. எவ்வளவு தான் பகல் நேரத்தில் தூங்கினாலும் அந்த தூக்கம் இரவு நேர தூக்கத்திற்கு ஈடாக முடியாது.

    ஏனென்றால், இரவை இறைவன் ஓய்வுக்கு உகந்த ஆடையாக ஆக்கியுள்ளான். இதை அருள்மறை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

    ‘உங்களுடைய தூக்கத்தை சுகம் தருவதாகவும் நாம் ஆக்கினோம். இன்னும் இரவை (உங்களை பொதிந்து கொள்ளும்) ஆடையாக ஆக்கினோம். பகலை வாழ்க்கைக்குரிய (தேவைகளை தேடிக்கொள்ளும்) நேரமாக்கினோம்’. (78:9-11)

    அமைதியான தூக்கம் மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் அருமருந்து என்பதையும், இரவின் குளுமையும், அமைதியும் நம்மை ஒரு ஆடையாக பொதிந்து கொள்ளும் போது - கிடைக்கின்ற தூக்கத்தின் சுகம் அலாதியானது என்பதையும், பகல் என்பது உழைப்பதற்கான நேரம் என்பதையும் இந்த வசனம் வலியுறுத்தும் கருத்தாகும்.

    இரவு நேரம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், மனிதர்கள் தங்களது பேராசையின் காரணமாக நாள்முழுவதும் ஓயாது உழைத்து உருக்குலைந்து போயிருப்பார்கள். இரவு-பகல் மாறி மாறி வருவதால் தான் பூமியின் ஒரு பகுதி பகலில் வெப்பமாக இருக்கும்போது மறு பகுதி இரவினால் குளிர்ச்சியாகி விடுகின்றது. இது இறைவன் அருளால் மாறி மாறி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இது அவனது மிகப்பெரிய அருட்கொடையாகும்.

    இரவு நேரம் என்பது, உறங்கி ஓய்வெடுக்கத்தான் என்றாலும், அதில் சில இரவுகளில் நின்று வணங்குவதன் மூலம் சிறப்பானதாக மாற்ற வேண்டும் என்று இறைவன் நமக்கு கட்டளையிட்டுள்ளான். அதில் மிக முக்கியமான இரவாக ‘லைலத்துல் கத்ர்’ என்ற மகிமை பொருந்திய இரவை இறைவன் அமைத்து தந்துள்ளான். இந்த இரவில் தான் இறுதி மறையான திருக்குர்ஆனை இறைவன் இறக்கி அருளினான்.

    அந்த மேன்மைமிக்க கண்ணியம் பொருந்திய இரவு குறித்து அண்ணலார் இவ்வாறு கூறுகிறார்கள்:

    ‘(நீங்கள்) ரமலானின் கடைசி பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்’. அறிவிப்பவர் ஆயிஷா (ரலி), (நூல்: புகாரி-2017)

    எந்த ஒன்றை சிரமத்துடன், நம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் பெறுகின்றபோது தான் அதனுடைய பெருமைகளையும் மேன்மை யையும் நம்மால் உணரமுடியும். அதனாலேதான் அண்ணலார் நம்மை கடைசி பத்து இரவு களில் ஒற்றைப்படை இரவில் லைலத்துல் கத்ரை தேடச்சொல்லுகிறார்கள்.

    ரமலான் நோன்பை கடைப்பிடிப்பதாலும், இத்தகை சிறந்த இரவுகளில் இறைவணக்கம் செய்வதாலும் கிடைக்கின்ற வெகுமதி குறித்தும் நபி (ஸல்) அவர்கள் கூறும் நற்செய்தி இது:

    ‘யார் லைலத்துல் கத்ரின் (இரவில்) நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து வணங்குகிறாரோ, அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது. (இன்னும்) யார் ரமலானில் நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து நோன்பு நோற்கிறாரோ - அவர்களது முந்தைய பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றன’. அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), (நூல்-புகாரி:1901).

    எப்படியாவது தனது அடியார்கள் உயர்வடைய வேண்டும் என்பதற்காக இறைவன் இத்தகைய நல்ல வாய்ப்புகளை நமக்கு ஏற் படுத்தி தந்துள்ளான். அதனை பயன்படுத்த தவறுபவர்கள், தங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை வீணடித்து நன்மைகளை சீரழித்தவராகி விடுகிறார்கள்.

    ‘முன்காலத்தில் வாழ்ந்த பனூ இஸ்ரவேல் சமூகத்தவரில் ஒருவர் ஆயிரம் வருடங்கள் இறைவனை வணங்குவதிலேயே ஈடுபட்டிருந்தார்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் கூறினார்.

    அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! வயது குறைவாக (வாழ வாய்ப்பளிக்கப்பட்டு) உள்ள நாங்கள் ஆயிரம் வருடங்களின் வணக்கத்தின் நன்மையை எவ்வாறு அடையமுடியும்’ என வருந்தி கேட்டார்கள்.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் லைலத்துல் கத்ர் இரவை (நமக்கு) வழங்கியுள்ளான். எவர் அந்த இரவை அடைந்து அதில் வணக்க வழிபாடு செய்வாரோ, அவர் ஆயிரம் மாதங்களுக்கு மேலாக வணங்கிய நன்மையை பெறுவார்’ என்றார்கள்.

    இது குறித்து அருள்மறை குர்ஆனும் இவ்வாறு கூறுகின்றது:

    ‘(நபியே) மகிமை பொருந்திய இரவு என்னவென்று உமக்கு தெரியுமா? கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் (அந்த இரவில்) வானவர்களும், பரிசுத்த ஆவியுமான (ஜிப்ரீலும்) தங்களுடைய ரப்பின் (இறைவனின்) கட்டளை கொண்டு (நடைபெற வேண்டிய) எல்லாக் காரியங்களுடன் இறங்குகின்றனர். (அந்த இரவில்) அமைதி நிலவியிருக்கும், அது அதிகாலை உதயமாகும் வரை (நீடித்து) இருக்கும்’ (திருக்குர்ஆன் 97:2).

    ஒருவரது வாழ்வில் ஒரு முறை லைலத்துல் கத்ர் இரவின் பாக்கியம் கிடைத்தால், அவர் 83 வருடமும், 4 மாதமும் (1000 மாதம்) இறைவனை வணங்கிய சிறப்பை அடையப்பெறுவார். அதுவே பல முறை கிடைக்குமானால் அந்த பாக்கியம் பல்கி பெருகிக் கொண்டே போகும். அதனால் லைலத்துல் கத்ர் என்பது இறைவனின் மாபெரும் கருணையாகவே உள்ளது.

    இறைவனின் அளப்பரிய கருணை குறித்து அண்ணலார் இவ்வாறு பேசினார்கள்:

    ‘அல்லாஹ் தன் வசம் வைத்துள்ள 100 மடங்கு கருணையிலிருந்து ஒரு மடங்கு கருணையை தான் ஜின்கள், மனிதர்கள், மிருகங்கள் என அனைத்து படைப்பினங்கள் மீதும் பரத்தி போட்டுள்ளான் - அதனால் தான் கொடிய (குணமுடைய) மிருகங்கள் கூட தனது குட்டிகளுடன் சாந்தமாக (அன்புடன்) நடந்து கொள்கின்றன. மீதமுள்ள 99 மடங்கு கருணையினை இறைவன் தன் வசமே வைத்துள்ளான். அக்கருணையை கொண்டு மீள உயிர்ப்பிக்கும் மறுமை நாளில் இறைவன் தனது அடியார்கள் மீது பெருங்கருணை புரிவான்’ என்றார்கள்.

    இறைவனின் ஒரு மடங்கு கருணையை கொண்டே இப்பிரபஞ்சம் எங்கும் கருணையின் மாண்பு செயல்படுவதே நமக்கு பிரமிப்பு ஊட்டுகிறது என்றால், மீதமுள்ள 99 மடங்கு கருணையின் அளவை யூகிக்கவே முடியாது. அத்தகைய கருணையுடைய அல்லாஹ் தனது அடியார்கள் மறுமை நாளில் நற்பேறு பெறவேண்டும் என்பதற்காகவும் தனது கருணையை பொழிவதற்காகவும் தயாராக இருக்கின்றான்.

    அதன் முன்னோட்டமாகத்தான் இது போன்ற லைலத்துல் கத்ர் இரவை ரமலானின் கடைசி பத்து இரவுகளில் ஒற்றைப்படை இரவில் பொதிந்து வைத்துள்ளான்.

    அதனை அடையப் பெறும் நற்பாக்கியத்தை இறைவிசுவாசிகளான நம்மனைவருக்கும் இறைவன் வழங்கி பேரருள் புரிவானாக! ஆமீன்.

    மு.முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டம்.
    அல்லாஹ் நம்பிக்கை கொண்ட தன் அடியானை உயிருடன் இருக்கும் போது பாதுகாத்தது போன்று அவரின் மரணத்திற்குப் பின்னும் பாதுகாக்கிறான்.
    உஹுத் போரில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பின்னடைவால் பிரச்சனைகள் அதிகரித்தன அனைத்து திசைகளிலிருந்தும் மதீனாவை ஆபத்துகள் சூழ்ந்தன. வெவ்வேறு பிரச்சனைகளையும் நபி முஹம்மது(ஸல்) மிகச் சிறப்பாகக் கையாண்டு எல்லாவற்றையும் முறியடித்தார்கள்.

    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்துப் பேர்கள் கொண்ட ஒரு குழுவினரை உளவுப்படையாக அனுப்பி வைத்தார்கள். ஆஸிம் இப்னு ஸாபித் அல் அன்சாரியை உளவுப் படைக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் புறப்பட்டு, உஸ்ஃபானுக்கும் மக்காவுக்கும் இடையிலுள்ள 'ஹத்ஆ' என்னுமிடத்திற்கு வந்தபோது வேறொரு கிளையினருக்கு இந்த உளவுப் படையினர் வரும் விவரம் தெரிந்துவிட்டது. உடனே அக்கிளையினர் அவர்களைப் பிடிப்பதற்காக அம்பெய்வதில் தேர்ச்சி பெற்ற வீரர்களைத் திரட்டிக் கொண்டு இந்த உளவுப் படையினரின் சுவடுகளைப் பின்பற்றி, மதீனாவிலிருந்து பயண உணவாகக் கொண்டு வந்திருந்த பேரீச்சம் பழங்களைத் தின்று அவற்றின் கொட்டைகளைப் போட்டுவிட்டுச் சென்ற இடத்தைக் கண்டு, அவர்களின் கால் சுவடுகளைப் பின்பற்றி ஆஸிம்(ரலி) மற்றும் குழுவினரைச் சூழ்ந்தனர்.

    அக்கிளையினர், உளவுப் படையினரிடம், 'நீங்கள் இறங்கி வந்து எங்களிடம் சரணடைந்து விடுங்கள். உங்களில் எவரையும் நாங்கள் கொல்லமாட்டோம் என்று உறுதிமொழியும் வாக்கும் அளிக்கிறோம்' என்று கூறினர். அப்போது ஆஸிம் இப்னு ஸாபித் அவர்கள், தம் சகாக்களை நோக்கி, 'என் சமூகத்தாரே! நான் ஓர் இறை மறுப்பாளனின் வாக்குறுதியை நம்பி அவனுடைய பொறுப்பில் இறங்கிச் செல்ல மாட்டேன்' என்று கூறிவிட்டு, 'இறைவா! எங்கள் நிலை பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்து விடு' என்று பிரார்த்தித்தார்கள். ஆஸிம் நினைத்ததுபோலவே இறைநிராகரிப்பாளர்கள் வாக்குறுதியைக் காப்பாற்றாமல் முஸ்லிம்களின் மீது அம்பெய்து ஆஸிம் உட்பட ஏழு பேரைக் கொன்றனர்.

    உளவுப் படையினரில் எஞ்சியிருந்த மூன்று பேரை அதாவது குபைப் அவர்களையும், இப்னு தசினா அவர்களையும் மற்றொருவரையும் அவர்கள் கைது செய்து தம் விற்களின் நாண்களை அவிழ்த்து அவர்களைக் கட்டினார்கள். அந்த மூன்றாமவர் அந்த இறைமறுப்பாளர்களை நோக்கி, 'இது முதலாவது நம்பிக்கை துரோகம். நான் உங்களுடன் வர மாட்டேன். கொல்லப்பட்ட இவர்கள் எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளனர்' என்று கூறினார். உடனே, அவர்கள் அவரை இழுத்துச் செல்ல நிர்பந்தித்தார்கள். அதற்கு அவர் மறுத்து விடவே அவரைக் கொலை செய்தனர். பிறகு குபைப் அவர்களையும் இப்னு தசினா அவர்களையும் பிடித்துச் சென்று மக்காவில் விற்றுவிட்டனர்.

    பனூஹாரிஸ் என்னும் குலத்தின் தலைவர் ஹாரிஸ் இப்னு ஆமிர் என்பவரை குபைப் அவர்கள் பத்ருப் போரில் கொன்று விட்டிருந்ததால், அதற்குப் பழிவாங்குவதற்காகக் குபைப் அவர்களைப் பனூ ஹாரிஸ் குலத்தார் வாங்கிக் கைது செய்து வைத்திருந்தனர். குபைப் அவர்களைக் கொல்வதற்காக ஹாரிஸ் குடும்பத்தார் ஒன்று கூடியபோது, குபைபின் தேவையற்ற முடிகளைக் களைவதற்காக ஒரு சவரக் கத்தி அவரிடம் தரப்பட்டது. அப்போது ஹாரிஸின் மகளின் குழந்தை குபைப்பின் பக்கம் சென்றது.



    அவர் கையில் சவரக் கத்தி இருக்க, தம் மடியின் மீது அவனை உட்கார வைத்திருப்பதைக் கண்டு ஹாரிஸின் மகள் பீதியடையவே, உடனே குபைப் 'நான் இவனைக் கொன்று விடுவேன் என்று நீ பயப்படுகிறாயா? நான் அப்படிச் செய்யமாட்டேன்' என்று கூறினார். குபைப் மிகச் சிறந்த கைதி என்று சொல்லும் அளவுக்கு நடந்து கொண்டார். குபைப்பை ஹாரிஸ் குலத்தார் கொல்வதற்காக அழைத்துச் சென்றபோது குபைப் அவர்களிடம், 'என்னை இரண்டு ரக்அத்துகள் தொழ விடுங்கள்' என்று கூறினார்கள்.

    தொழுது முடித்த பிறகு, 'நான் முஸ்லிமாகக் கொல்லப்படுவதால் நான் வேறு எதையும் பொருட்படுத்தப் போவதில்லை. எந்த இடத்தில் நான் இறந்தாலும் நான் இறைவனுக்காகவே கொல்லப்படுகிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத்தான் எனும்போது, அவன் நாடினால் என்னுடைய துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்புகளின் மீது கூட,தன் அருள் வளத்தைப் பொழிவான்' என்று கவி பாடினார்கள். பின்னர், குபைப் அவர்களை ஹாரிஸின் மகன் உக்பா கொன்றுவிட்டார். அன்றிலிருந்து அடைத்து வைத்து அல்லது கட்டி வைத்துக் கொல்லப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கொல்லப்படுவதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் குபைப் அவர்களே என்றாயிற்று.

    ஆஸிம் இப்னு ஸாபித் அவர்கள் கொல்லப்பட்டபோது, அவர்கள் செய்த பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவர்களின் நிலைகுறித்துத் தன் தூதருக்குத் தெரிவித்துவிட்டான். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களுக்கு உளவுப் படையினரின் செய்தியையும், அவர்களுக்குக் குறைஷி குல நிராகரிப்பாளர்களில் சிலருக்கு ஆஸிம் அவர்கள் கொல்லப்பட்டது குறித்துத் தெரிவிக்கப்பட்டவுடன் கொல்லப்பட்டது அவர்தான் என்று அவரை அடையாளம் தெரிந்து கொள்ள அவரின் அங்கம் எதையாவது தமக்குக் கொடுத்தனுப்பும் படி கேட்டு அவர்கள் ஆளனுப்பினார்கள்.

    அப்போது ஆஸிம் அவர்களுக்காக அவர்களின் உடலுக்குப் பாதுகாப்பாக ஆண் தேனீக்களின் கூட்டம் ஒன்று நிழல் தரும் மேகத்தைப் போன்று அவரைச் சுற்றிலும் அரணாகப் படர்ந்திருக்கும் படி அனுப்பப்பட்டது. அது அவர்களைக் குறைஷிகளின் தூதுவரிடமிருந்து காப்பாற்றியது. எனவே, அவர்களின் சதையிலிருந்து அவர்களால் எதையும் துண்டித்து எடுத்துச் செல்ல முடியவில்லை.

    அல்லாஹ் நம்பிக்கை கொண்ட தன் அடியானை உயிருடன் இருக்கும் போது பாதுகாத்தது போன்று அவரின் மரணத்திற்குப் பின்னும் பாதுகாக்கிறான்.

    ஸஹீஹ் புகாரி 3:56:3045, 4:64:3989, 4:64:4086

    - ஜெஸிலா பானு.
    பெரும்பாலான உயிரினங்கள் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தண்ணீரையே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பது அறிவியல் அறிவிக்கும் உண்மையாகும்.
    மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது, தண்ணீர். மனிதன் மட்டுமல்ல, நீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. நாம் பல நாட்கள் உணவு உண்ணாமல் உயிர் வாழ முடியும். ஆனால் ஒரே ஒருநாள் முழுவதும் தண்ணீர் குடிக்காவிட்டால் உடல் ‘செல்கள்’ வற்றி உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகக்கூடும்.

    தாவரங்கள் உள்பட எல்லா உயிரினங்களின் உடல் எடையில் முக்கால் பங்கிற்கு மேல் இருப்பது தண்ணீரே. இந்தப் பூமியில் தண்ணீர் இல்லாத இடமே இல்லை. நம்மைச் சுற்றி உள்ள காற்றிலும், நம்மைச் சுமந்து நிற்கும் மண்ணிலும் தண்ணீர் உள்ளது. இந்தப் பூமி, ‘நீர்க்கோளம்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு, இதன் ஒட்டு மொத்தப் பரப்பளவில் 70 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பி இருப்பதுதான் காரணமாகும். அந்த நீரில் 70.7 சதவீதம் உப்பு கரிக்கிற கடல் நீராகும். மீதம் இருக்கிற 29.3 சதவீத நீரை நாம் நிலப்பரப்பில் பெற்றாக வேண்டும்.

    சூரிய வெப்பத்தால் கடல் நீர், ஆவியாக மாறி, காற்றில் கலந்து மேல் சென்று மேகங்களாகத் திரண்டு தூய்மையான மழைநீரைப் பொழிகிறது. அதோடு நின்று விடாமல் அந்த நீர் திரும்பவும் நீராவியாகி மழையையும், தண்ணீரையும் சுழற்சி முறையில் பெறுகிறோம். கரிக்கும் கடல் தந்த மேகத் துளிகளில், ஒரு துளி நீரிலும் உப்பில்லை என்பது இறைவனின் பேரதிசயமே.

    உணவை உற்பத்தி செய்வதற்கு தண்ணீர் உதவுகிறது. அதே நேரத்தில் அந்தத் தண்ணீர் உணவாகவும் இருக்கிறது. தண்ணீருக்கென்று தனியாக நிறம் கிடையாது; சுவை கிடையாது; மணம் கிடையாது. அது சேரும் பொருளுக்கேற்ப நிறத்தையும், சுவையையும், மணத்தையும் கொடுக்கும். நீரும் நீரும் கலந்தால் நீராக ஒன்றுமே அன்றி தனித்தனியே நில்லாது. உடலுக்குத் தேவையான ஆறு சத்துப் பொருட்களில் தண்ணீரும் ஒன்று. தண்ணீர் மட்டும்தான் திட, திரவ, வாயு நிலையில் இருக்கக் கூடியது. அதாவது ஐஸ் கட்டியாக, தண்ணீராக, ஆவியாக மூன்று நிலைகளை எடுக்கக் கூடியது.

    தண்ணீர் என்பது இயற்கையின் அரிய பொக்கி‌ஷம்; இறைவனிடம் இருந்து வருகிற அருட்கொடையாகும். இறைவனைத் தவிர வேறு யாராலும் ஒரு சொட்டு நீரைக்கூட உற்பத்தி செய்ய முடியாது.

    இது பற்றி திருக்குர்ஆனில், ‘‘மேகத்தில் இருந்து அதனை நீங்கள் பொழிய வைக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா? நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக ஆக்கி இருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?’’ (திருக்குர்ஆன்–56:68) என்றும்,

    ‘‘நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மழையின் மேகத்தை ஓட்டி (பொழியச் செய்து) அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய (ஆடு, மாடு, ஒட்டகம்) ஆகிய கால்நடைகளும் புசிக்கக் கூடிய பயிர்களையும் வெளிப்படுத்துகிறோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? (இதனைக்கூட) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?’’ (திருக்குர்ஆன்–32:27) என்றும்,

    ‘‘உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய் விட்டால், அப்போது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்?’’ (திருக்குர்ஆன்–67:30) என்றும் இறைவன் கூறுகின்றான்.

    நிலத்தடி நீர் என்பது பெய்யும் மழையால் பெறப்படுவதே ஆகும். நிலத்தின் மேற்பரப்பில் பெய்யும் மழைநீர், மண்ணுக்குள் ஊடுருவி அடியில் இருக்கும் பாறைகளுக்கு மேல் சேர்ந்து நிலத்தடி நீராகிறது.



    ஆனால் இதற்கு மாறாக முற்காலத்தில் நிலத்தடி நீர் குறித்து பல விசித்திரமான விளக்கங்கள் தரப்பட்டன. கி.மு. 7–வது நூற்றாண்டில் வாழ்ந்த தேல்ஸ் என்பவர், ‘‘சுழலும் காற்றின் வேகத்தால் கடலில் இருக்கும் தண்ணீர் நிலத்தை நோக்கிப் பாய்ச்சப்படுகிறது. இதனால்தான் நாம் நிலத்தின் அடியில் நீரைக் காண்கிறோம்’’ என்றார்.

    ‘‘மண்ணில் உள்ள நீராவி, குளிர்ந்த மலைப் பொதும்புகளில் நீர்த்தேக்கங்களாக மாறுகின்றன. இந்த நீர்த்தேக்கங்கள்தான், நிலத்தில் உள்ள நீரூற்றுகளுக்குத் தண்ணீரைத் தருகின்றன’’ என்றார், அரிஸ்டாட்டில். 18–ம் நூற்றாண்டு வரை நிலத்தடி நீர் குறித்து இதே கருத்தே நிலைத்து நின்றது.

    நிலத்தடி நீர் பற்றிய சரியான விளக்கம் கி.பி.1580–ம் ஆண்டு பெர்னார்ட் பாலிசி என்பவரால் அளிக்கப்பட்டது. அவர், ‘நிலத்தடி நீர் என்பது மழை நீரில் இருந்து பெறப்படுவதே’ என்றார்.

    ஆனால் 1,400 ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தடி நீர் குறித்து குர்ஆன் கூறுகிறது இப்படி: ‘‘(நபியே!) நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்தில் இருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கிறான். அதன் பின் அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களுடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான்’’ (39:21).

    ‘‘வானத்தில் இருந்து நாம் அளவோடு (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனை பூமியில் தங்க வைக்கிறோம். நிச்சயமாக அதனைப் போக்கி விடவும் நாம் சக்தியுடையோம்’’ (23:18).

    உயிரினங்களுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது என்பது மட்டுமல்ல; தண்ணீர் இல்லாவிட்டால் இந்த பூமியில் உயிரினங்களே தோன்றி இருக்க முடியாது.

    ஒவ்வொரு உயிரினமும் நீரால் படைக்கப்பட்டுள்ளது என்பதைத் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது:

    ‘‘நிச்சயமாக வானங்களும் பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரில் இருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?’’ (21:30).

    விலங்குகளை நீரில் இருந்து படைத்ததாகக் கீழ்க்கண்ட வசனம் கூறுகிறது:

    ‘‘எல்லா உயிரினங்களையும் அல்லாஹ் நீரில் இருந்து படைத்துள்ளான். அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு. அவற்றில் நான்கு (கால்)களைக் கொண்டும் நடப்பவையும் உண்டு. தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்’’ (24:45).

    நமது உடலில் 80 சதவீதம் நீர்ச்சத்து இருக்கிறது. ரத்தத்தின் நீர்மப் பகுதியில் 92 சதவீதம் அளவில் தண்ணீர் உள்ளது. மேலும் பெரும்பாலான உயிரினங்கள் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தண்ணீரையே அடிப்படையாகக் கொண்டுள்ளன என்பது அறிவியல் அறிவிக்கும் உண்மையாகும்.

    ஒவ்வொரு உயிரினமும் நீரால் படைக்கப்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல; அந்த உயிரினங்கள் பெருமளவு நீரால் நிரப்பப்பட்டுள்ளன.

    - பாத்திமா மைந்தன்.
    நபி முஹம்மது(ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் “கடனுக்குப் பகரமாக ஜாபிர் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களைச் சிறிது ஏற்றுக் கொண்டு மீதிக் கடனைத் தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள்.
    ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களின் தந்தையார் உஹுத் போரின்போது கொல்லப்பட்டுவிட்டார்கள். அவர்கள் மீது கடன் சுமை இருந்தது. ஜாபிர் மட்டுமின்றி வேறு ஆறு பெண் மக்களும் அவர்களுக்கு இருந்தனர்.

    ஜாபிர்(ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஹராம்(ரலி)தான் கடன்பட்ட நிலையில் மரணித்துவிட்டதால் கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டு ஜாபிரை நெருக்கடிக்குள்ளாக்கினர், கடுமை காட்டினர். ஜாபிர்(ரலி) உடனே நபி முஹம்மது(ஸல்) அவர்களிடம் சென்று விஷயத்தைக் கூறினார்.

    ஜாபிர்(ரலி) அவர்களிடம் “கடனை திருப்பிச் செலுத்த உன்னிடம் என்ன உள்ளது?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, அதற்கு ஜாபிர்(ரலி), கொஞ்சம் பேரீச்சம் பழங்கள் மட்டுமே என்று பதில் அளித்தார்கள்.

    நபி முஹம்மது(ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் “கடனுக்குப் பகரமாக ஜாபிர் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களைச் சிறிது ஏற்றுக் கொண்டு மீதிக் கடனைத் தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். ஆனால் கடன் தந்தவர்கள் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டனர். பாதித் தொகைக்கு ஈடாகப் பேரீச்சம்பழங்களை வாங்காமல், முழுக் கடன் தொகைக்கு ஈடாகப் பேசீச்சம்பழங்களைக் கேட்டனர். அவர்களின் கடனை விரைவில் அடைப்பதாகச் சொல்லி கடன்காரர்களை அனுப்பி வைத்தார்கள் நபி (ஸல்).



    மறுநாள் காலை வருவதாக ஜாபிர்(ரலி) அவர்களிடம் சொல்லிவிட்டுச் சென்றார்கள் நபி(ஸல்). கொடுத்த வாக்கின்படி மறுநாள் காலையில் ஜாபிரிடம் சென்று, பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக அதாவது அருள் வளத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு, ஜாபிர்(ரலி) அவர்களிடம் ‘கடன்காரர்களுக்குப் பறித்துக் கொடு.

    அவர்களுக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடு’ என்றார்கள். ஜாபிர(ரலி) அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜாபிர்(ரலி) அவர்களிடம் “உங்கள் பேரீச்சங்கனிகளின் ஒவ்வொரு வகையையும் தனித் தனியாகப் பிரித்து வையுங்கள். 'இத்க் இப்னு ஸைத்' என்னும் உயர் ரகப் பேரீச்சம் பழத்தை ஒரு பக்கமும் 'லீன்' என்னும் மற்றொரு ரகப் பேரீச்சம் பழத்தை ஒரு பக்கமும் 'அஜ்வா' என்னும் சிறப்பு ரகப் பேரீச்சம் பழத்தை இன்னொரு பக்கமும் தனித்தனியாக எடுத்து வையுங்கள். பின்னர் கடன் காரர்களை வரவழையுங்கள்” என்றார்கள்.

    ஜாபிர்(ரலி) அவர்களும் நபிகளார் கூறியபடியே செய்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் வந்து பேரீச்ச குவியல்களின் அருகே அமர்ந்து கொண்டு கடன்காரர் ஒவ்வொருவருக்கும் அளந்து கொடுக்கலானார்கள். நிறைவாக அனைவருக்கும் கொடுத்து முடித்தார்கள். பேரீச்சம் பழக்குவியல் யாருடைய கரமும் படாததைப் போன்று முன்பிருந்ததைப் போன்றே சற்றும் குறையாமல் அப்படியே இருந்தது.

    இவ்விஷயத்தைப் பற்றி ஜாபிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் ஆச்சர்யத்தோடு தெரிவிக்க, அதற்கு உமர்(ரலி), 'இறைத்தூதர் அந்தப் பேரீச்ச மரங்களுக்கிடையே நடந்து சென்றபோதே, அவற்றில் பரக்கத்து (அருள் வளம்) வழங்கப்படும் என்று அறிந்து கொண்டேன்' என்று கூறினார்கள்

    ஸஹீஹ் புகாரி 2:34:2127, 2:43:2395-2396, 2:43:2405, 3:55:2781

    - ஜெஸிலா பானு.
    ஒரு பெண்ணுடன் அவளுடைய சகோதரியையோ, அவளுடைய தாயின் சகோதரியையோ, அவளுடைய தந்தையின் சகோதரியையோ ஒரு சேர மணமுடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
    திருமணத்தை வெளிப்படையாகவும், எளிமையாகவும் நடத்த வேண்டும். திருமணத்தை பகிரங்கப்படுத்தல் என்பது ‘ஷரீயத்’ ரீதியாக வலியுறுத்தப்பட்ட ஒன்று. தடை செய்யப்பட்ட ரகசிய திருமணங்களில் இருந்து வேறுபடுவதற்காகவும், இறைவன் ஆகுமாக்கி இருக்கும் உத்தம செயல்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறது.

    நிச்சயமாக, சாதாரண பொதுமக்களும் நெருக்கமானவர்களும், நெருங்கிய உறவினர்களும் தூரத்து உறவினர்களும் அறிந்து கொள்வதற்காக, பகிரங்க அறிவிப்பு செய்வதற்கு அதிக தகுதி உடைய ஒன்றுதான் திருமணம்.

    ‘திருமணத்தை வெளிப்படையாக (பலர் அறியச்) செய்யுங்கள். மேலும் அதை பள்ளிவாசல்களில் நடத்துங்கள்’ என்பது நபிமொழியாகும்.

    ‘குறைந்த செலவில், குறைந்த சிரமங்களுடன் செய்யப்படும் திருமணமே சிறந்ததாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    இதன்படி திருமணத்தின்போது பெண் வீட்டாருக்கு எந்த வகையிலும் சிரமத்தைக் கொடுக்கக்கூடாது. இதற்காக திருமண விருந்தை மணமகனே ஏற்க வேண்டும். இதற்கு ‘வலிமா’ என்று பெயர்.

    ‘எந்த ‘வலிமா’வில் செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு, ஏழை எளியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களோ அந்த வலிமாவின் உணவே மிக மோசமான உணவாகும். எவர் ‘வலிமா’ விருந்திற்கான அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லையோ அவர், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்தவராவார்’ என்று நபிகளார் நவின்றுள்ளார்கள்.

    ஒழுக்கமான–தூய்மையான சமூக அமைப்பு உருவாக, குடும்ப அமைப்பு அதிக வலுவுடையதாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது. கணவன்–மனைவி இருவரும் திருமண வாழ்வின் ஒழுங்கு முறையையும், கடமைகளையும் நன்கு உணர்ந்திருக்க வேண்டும். மணம் புரிந்து கொண்ட ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் அன்பைப் பொழிய வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க வேண்டும்.

    இல்வாழ்க்கை இருசக்கர வாகனம் போன்றது. அந்த வாகனம் சீராகச்செல்ல அதில் உள்ள இரு சக்கரங்களும் சமமாக இருக்க வேண்டும்.

    கணவன்–மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை அழகிய உவமை மூலம் திருக்குர்ஆன் இவ்வாறு எடுத்துக் கூறுகிறது:

    ‘அவர்கள் (பெண்கள்) உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் (ஆண்கள்) அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்.’ (2:187)

    இந்தத் திருவசனத்தில் பல்வேறு பொருள் நிறைந்த கருத்துகள் பொதிந்து கிடக்கின்றன. ஆடை, மனிதனின் மானத்தைப் பாதுகாக்கிறது; மனிதனுக்கு அழகைக்கொடுக்கிறது; மனிதனுக்கு மரியாதையை அளிக்கின்றது. இதனால்தான், ‘அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள்’ என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

    ஆண்–பெண் இருவருக்கிடையே உருவாகும் அன்பையும், பாசத்தையும் அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் ஏற்ற வழி திருமணத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.

    யாரையெல்லாம் திருமணம் செய்யக் கூடாது என்பதை திருக்குர்ஆன் கண்டிப்புடன் கூறுகிறது.

    ‘‘(பின்வரும் பெண்களை மணம் புரிவது) உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. உங்கள் தாய்மார்கள், உங்கள் புதல்விகள், உங்கள் சகோதரிகள், மற்றும் உங்கள் தந்தையின் உடன்பிறந்த சகோதரிகள், உங்கள் அன்னையின் உடன்பிறந்த சகோதரிகள் மேலும் சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள் மேலும் உங்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய்மார்கள், உங்கள் பால்குடி சகோதரிகள், உங்கள் மனைவியரின் தாய்மார்கள், நீங்கள் உடலுறவு கொண்ட மனைவியர் (தம் முன்னாள் கணவர் மூலம்) பெற்றெடுத்து உங்கள் மடிகளில் வளர்ந்துள்ள புதல்வி கள், ஆனால் (திருமணம் ஆகி) நீங்கள் அம்மனைவியருடன் உடலுறவு கொள்ளவில்லையாயின் (அவர்களை விடுத்து, அவர்களின் புதல்விகளை மணமுடித்துக் கொள்வதில்) உங்கள் மீது எத்தகைய குற்றமும் இல்லை. மேலும் உங்கள் முதுகுத்தண்டுகளில் இருந்து பிறந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரை மணம் புரிவதும், இரு சகோதரிகளை நீங்கள் ஒருசேர மனைவியராக்குவதும் (தடை செய்யப்பட்டுள்ளன.)’’ (3:23)

    1. தாய் 2. மகள்கள் 3. சகோதரிகள் 4. தந்தையின் சகோதரிகள் 5. தாயின் சகோதரிகள் 6. சகோதரனின் புதல்விகள் 7. சகோதரியின் புதல்விகள்–இவர்கள் ரத்த பந்த உறவின் மூலம் தடை செய்யப்பட்ட 7 பிரிவினர் ஆவர்.

    இதைபோல 1. மனைவியின் தாய் 2. மனைவியின் பிறிதொரு கணவனுக்கு (முன்னாள் கணவனுக்கு) பிறந்த மகள் 3. மகனின் மனைவி (மருமகள்) 4. தந்தையின் மனைவி– இவர்கள் திருமண உறவின் மூலம் தடுக்கப்பட்ட 4 பிரிவினர் ஆவர்.

    மேலும் பாலூட்டிய அன்னியப்பெண்ணும், பெற்றெடுத்த தாயும் ஒரே தரத்தைப் பெறுகின்றனர். ரத்தபந்த உறவின் மூலம் தாயின் வழித்தோன்றலில் யாரெல்லாம் திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்களாக ஆவார்களோ அவர்கள் அனைவரும் பால்குடி உறவின் மூலம் தடுக்கப்பட்டவர்களாக மாறுவர். எனவே அந்த 7 தரப்பினர் பால்குடி உறவின் மூலமும் திருமணம் புரிய தடை செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் ஒருவர் ஒரு பெண்ணுடன் அவளுடைய சகோதரியையோ, அவளுடைய தாயின் சகோதரியையோ, அவளுடைய தந்தையின் சகோதரியையோ ஒரு சேர மணமுடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
    போலித்தனம் போக்கி உண்மையான இறைவிசுவாசியாக நாம் மாறும்போது, அல்லாஹ் மக்கள் மனங்களில் மதி மயக்கமில்லாத அன்பை நம் மனதில் ஏற்படுத்துகின்றான்.
    நாவால் இனிக்க இனிக்க பேசுகின்ற நம்மில் பலர் இதயத்தால் இறைவனின் அச்சத்தைவிட்டு விலகியே நிற்கிறார்கள். இத்தகைய நாவன்மை மிக்க போலிகள் தானும்கெட்டு பிறரையும் கெடுத்திடவே முனைந்து நிற்கின்றார்கள். இவர்களை அடையாளம் கண்டு விலகி இருப்பதே நமக்கு நன்மை பயப்பதாகும்.

    சிறிய மண் துகளைக்கூட நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. ஏனென்றால் இன்று நமது காலில் மிதிபடும் மண்ணில் தான் மரணத்திற்கு பின் நாளை நாம் கிடத்தப்பட இருக்கின்றோம் என்பதை எண்ணும்போது, எதையும் துச்சமாக கருதும் மனநிலை நமக்கு ஏற்படாது.

    வாழ்க்கை என்பது கணப்பொழுதை மையமாக கொண்டே சுழன்று வருகின்றது. எல்லா மாற்றங்களும் கணப்பொழுதில் ஏற்பட்டு விடுகின்றது. அது காதலாக இருந்தாலும் சரி, சாதலாக இருந்தாலும் சரி, ஒரு கணப்பொழுதில் இயல்பாகவே நடந்து முடிந்து விடுகின்றது.

    நம் இதயத்தை கடினமாக்கி, நம்மை கஷ்டத்திற்கும், துன்பத்திற்கும் தள்ளிவிடுகின்றது காமம். எல்லாவற்றையும் நுகர்ந்து விட வேண்டும் என ஆசையை தூண்டி நம்மை துயரத்தில் ஆழ்த்துவதும் அந்த காமமே.

    காமத்தை நம் மார்க்கம் காட்டித்தரும் நெறி முறைகளின் படியே தணித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அது பாவ விதைகளை நம் இதயத்தில் ஊன்றிவிடும், அதன் பயனோ மிக கசப்பானதாகவே இருக்கும்.

    காமத்தை வெற்றிகொள்ள வேண்டுமானால், உலக பொருட்களின் மயக்கத்தில் இருந்தும், இச்சையில் இருந்தும் நாம் வெளியே வந்தாக வேண்டும். வாழும் போதே இதயச்சுத்தம் அடைந்து இறைவனின் பக்கம் நம்மை திருப்பியாக வேண்டும். இல்லை என்றால் மனோஇச்சை நம்மை ஆட்டிப்படைத்துவிடும்.

    அந்த மனோஇச்சைக்கு அடிமையானவர்களிடம், சைத்தான் நட்புறவு கொண்டு விடுகின்றான். அதன் விளைவாக துன்பங்களும், தொடர் கவலைகளும் நம்மைத்தேடி வரும். இதுபோன்றவர்களின் நிலை குறித்தும், செயல்பாடுகள் குறித்தும், திருக்குர்ஆன் (107:1-7) கூறுவதை பார்ப்போம்:

    ‘நியாயத்தீர்ப்பை பொய்யாக்குகின்ற ஒருவனை (நபியே) நீர் பார்த்தீரா? அவன் அனாதைகளை விரட்டுகின்றான். இன்னும் ஏழைகளுக்கு உணவளிக்க (அவன்) தூண்டுவதில்லை. அத்தகைய (குணம் கொண்டு) தொழுபவர்களுக்கு கேடுதான். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால் தங்களது தொழுகையின் (மீது கவனம் வைப்பதை) விட்டும் பாராமுகமானவர்களாக இருப்பார்கள். இவர்கள் பிறருக்கு காண்பிக்(கத்தான் தொழு)கிறார்கள் இவர்கள் அற்பமான பொருட்களை (பிறருக்கு கொடுத்து வாங்குவதை கூட) தடுப்பவர்களாக இருப்பார்கள்’.

    இத்தகையோர், தானும் நன்மை செய்வது இல்லை, பிறரை நன்மை செய்ய தூண்டுவதுமில்லை. நன்மைகள் பிறருக்கு சென்றடைவதை தடுப்பவர்களாக இருப்பார்கள். என்பதை இந்த அத்தியாயம் தெளிவுபடுத்துகிறது.



    இவர்கள் தான் மறுமையை மறுப்பவர்கள். அதன் அடையாளம் தான் ஏழைகளை புறம் தள்ளுவதும், அனாதைகளை விரட்டுவதும் ஆகும். இவர்களின் தொழுகை என்பது மேலோட்டமானதாகவும், பிறர் மெச்சவேண்டும் என்பதற்காகவுமே இருக்கும் என்பதையும் இந்த அத்தியாயம் வலியுறுத்திக் காட்டுகின்றது.

    எவ்வளவு வேண்டுமானாலும் இறைவனை வணங்குகின்றேன். இஸ்லாம் மார்க்கம் குறித்தும் பேசுகின்றேன். ஆனால் மனதாலும், செயலாலும், பொருளாலும் பிறருக்கு உதவி செய்வதில் எனக்கு கடினத்தன்மை உண்டாக்குகின்றது எனக்கருதுபவர்கள் இந்த அத்தியாயத்தை மீண்டும் மீண்டும் படித்து பார்த்து அக்கடினத் தன்மையை இலகுவாக்கி கொள்ளவேண்டும். இல்லையென்றால் அவர்களின் வணக்கம் எல்லாம் வீணாகப்போய்விடும்.

    நபிகளாருக்கு உலகின் சகல பொக்கிஷங்களும் இறைவனால் கொடுக்கப்பட்டிருந்தது. செல்வங்களும் ஆட்சி அதிகாரமும், தன்னிடமிருந்த போதிலும் நபிகளார் அதில் லயித்து இரண்டறக்கலந்து விடவில்லை. உலக சுகபோகங்களால் அவர்களின் இறைப்பணியையோ, இறை நேசத்தையோ தடுக்க முடியவில்லை. தனக்கு கிடைத்த செல்வத்தையும், செல்வாக்கையும் இறைவழியிலேயே முழுமையாக அர்ப்பணம் செய்து வாழ்ந்து காட்டினார்கள்.

    அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஆயிஷாவே, மறுமையின் பேரின்பத்திற்காக, இவ்வுலகின் கஷ்டங்களின் மீது பொறுமை கொள்வாயாக’.

    சுகத்தையும், சந்தோஷத்தையும் வரவேற்பதை போலவே, துன்பத்தையும் ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும் என்பதை நமக்கு நினைவுபடுத்தி தருவதாகவே இது அமைந்துள்ளது.

    ஏழையாக, பணக்காரனாக, ஆசை உள்ளவராக, ஆசையை துறந்தவராக... என எந்த நிலையில் ஒருவர் வாழ்ந்தாலும் சரி, உலகில் நமக்கு கிடைக்கவேண்டிய பங்கு எதுவோ அது நம்மை வந்து அடைந்தே தீரும். அதனை இறைவழியில் மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றே இஸ்லாம் மார்க்கம் நமக்கு கற்றுத்தருகிறது.

    பிறரின் கவனத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்காகவே செய்யப்படும் வணக்கங்கள் யாவும் போலித்தனமானது என்பதை புரிந்து கொண்டு, இறைவனின் பொருத்தத்திற்காகவே வணக்க வழிபாடுகளில் ஈடுபடும்போது, போலித்தனம் என்பது இடம் தெரியாமல் போய்விடும்.

    போலித்தனம் போக்கி உண்மையான இறைவிசுவாசியாக நாம் மாறும்போது, அல்லாஹ் மக்கள் மனங்களில் அழிவில்லாத ஆட்சியை நமக்கு ஏற்படுத்தி தருகின்றான், மதி மயக்கமில்லாத அன்பை நம் மனதில் ஏற்படுத்துகின்றான். கசப்பில்லாத இனிப்பை உணரச் செய்து தன் அருட்கொடைகளை என்றும் பூரணமாக தருகின்றான். அத்தகைய பாக்கியம் பெற்றவர் களாக நம் அனைவரையும் ஆக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக, ஆமீன்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.
    கொளுத்தும் கோடை வெயிலிலும், கொதிக்கும் பாலை மணலிலும் நீர் இல்லாமலும், உணவில்லாமலும் பல நாட்கள் வாழக்கூடிய சக்தி கொண்டவை, ஒட்டகங்கள்.
    ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவரம் உண்ணும் வகையைச் சேர்ந்த, பாலூட்டக்கூடிய, அசைபோடும் பெருவிலங்கு ஆகும். இவை 30 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன. சராசரியாக 250 கிலோ முதல் 700 கிலோ எடை கொண்டது. உயரம் 7 முதல் 8 அடி வரை!

    பரம சாதுவாகக் காட்சி அளிக்கும் ஒட்டகங்கள், சாதாரணமாக மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் படைத்தவை. சிறுதொலைவு ஓட்டப்பந்தயம் வைத்தால் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடவும் செய்யும். ஒட்டகம் ஒன்று 200 கிலோ எடையைச் சுமந்து கொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தூரம் நடக்கக் கூடியது. பெரும்பாலான நாடுகளில் ஒட்டகங்கள் பொதி சுமக்கும் விலங்குகளாகவும், வண்டி இழுக்கவும் பயன்படுகின்றன. பாலைவனப் பகுதிகளில் ஒட்டகங்களை ராணுவத்தினர் அதிக அளவு பயன்படுத்துகின்றனர்.

    கொளுத்தும் கோடை வெயிலிலும், கொதிக்கும் பாலை மணலிலும் நீர் இல்லாமலும், உணவில்லாமலும் பல நாட்கள் வாழக்கூடிய சக்தி கொண்டவை, ஒட்டகங்கள். மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் தண்ணீர் குடிக்காமல் ஒட்டகத்தால் இருக்க முடியும்.

    சில மாதங்கள் நீர் அருந்தாமல் உலர் நிலையில் இருந்து மீண்டும் நீர் அருந்தும்போது ஒரே மூச்சில் 100 லிட்டர் தண்ணீரைக் குடித்து விடும். இவ்வாறு நீரைக் குடித்தவுடன் 10 நிமிடங்களில் அதன் உடலில் நீர்ச்சத்து ஏறி விடும். பிற விலங்குகள், நீர் இல்லாத உலர் நிலையில் இருந்து இவ்வளவு விரைவாக நீர்ப்பதம் அடைய முடியாது. ஏனெனில் ரத்தத்தில் திடீரென்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் அந்த விலங்குகளின் சிவப்பணுக்கள் வெடித்து விடும். ஆனால் ஒட்டகங்கள் நீரை அருந்தியவுடன் அதன் இரைப்பையில் உள்ள நீர் அறைகளில் நீரைத் தற்காலிகமாக ஏற்றிக் கொள்கிறது. அங்கிருந்து உறிஞ்சப்பட்டு ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் ஏற்றி சேமித்துக் கொள்கிறது. அப்போது சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் 240 சதவீதம் விரிந்து இடமளிக்கிறது.

    குட்டி போட்டுப் பாலூட்டும் ஏனைய விலங்குகள் அனைத்திற்கும் ரத்தத்தின் சிவப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும். ஒட்டகத்தின் உடலில் 40 சதவீதம் நீர் குறைந்தாலும்கூட எந்தவித பாதிப்பும் இல்லாமல் வாழும் சிறப்பு அம்சம் கொண்டது. பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்து விடாமல் இருப்பதற்காக அதிகமான நீரைச் சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது, அதன் சுரப்பிகள். ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விட்டால் தனது மூக்கால் மோப்பமிட்டு நீர்நிலையைக் கண்டறிதல் அதன் சிறப்பம்சமாகும்.

    பாலைவனத்தின் கடும் குளிரையும், கொடும் வெப்பத்தையும் தாங்கிக் கொள்ளும் வகையில் அதன் முடியும், தோலும் அமைந்துள்ளன. கடும் குளிருக்கும், வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்ப நிலையை 34 செல்சியசில் இருந்து 41.7 செல்சியஸ் வரை (93 டிகிரி பாரன்ஹீட் முதல் 107 டிகிரி பாரன்ஹீட்வரை) தாமாக மாற்றிக் கொள்ளும். இப்படி உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34 செல்சியஸ் வரை குறைத்துக் கொள்வதால் கடுங்குளிர் அடித்தாலும் தாக்குப்பிடிக்கிறது. அதே நேரம் கடும் வெயில் கொளுத்தும்போதும் வெப்பத்தைக் கடத்தாத தனது தடிமனான தோலினாலும், தன் உடல் வெப்ப நிலையை 41 செல்சியஸ் வரை அதிகரித்துக் கொண்டும் கோடையின் சவாலைச் சமாளிக்கிறது.

    மேலும் ஒட்டகங்களின் உடல் பொதுவாக வியர்வையை வெளியிடுவதில்லை. இதனால் உடல் நீர் வெளியாவது குறைகின்றது. நீர் இல்லாதபோது தனது சிறுநீரையும் ஒட்டகங்கள் பெருமளவு குறைக்க வல்லவை. ஆனால் அதே நேரத்தில் மனிதர்களின் உடல் வெப்ப நிலை 2 முதல் 3 செல்சியஸ் வேறுபாடுகளைத்தான் தாங்கும் சக்தி கொண்டது.

    ஒட்டகத்தின் முதுகுப் பகுதியில் அமைந்துள்ள ‘திமில்’ போன்ற மேட்டுப் பகுதியில் கொழுப்புப் பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. இங்கு சேமிக்கப்படும் கொழுப்பு, வளர் சிதை மாற்றம் அடைந்து அதன் துணை வினைப்பொருளாக நீர் உற்பத்தி ஆகிறது. இதன் மூலம் ஒட்டகம் தானாகவே பசியையும், தாகத்தையும் தீர்த்துக் கொள்கிறது.

    ஒட்டகத்தின் இரைப்பையில் 3 அறைகள் உள்ளன. முதல் இரு அறைகளின் சுவர்களில் தனித்தன்மை வாய்ந்த நீர் செல்கள் உள்ளன. இதில்தான் ஒட்டகம் நீரைச் சேமித்து வைக்கிறது. அதோடு ஒட்டகத்தின் தசைகளிலும் இணைப்புத் திசுக்களிலும் நீரைச் சேமித்து வைக்கும் அமைப்பு உள்ளது.

    பாலைவனம் என்றாலே புழுதிக் காற்றும், மணல் துகளும் வாரி இறைக்கும். அப்போது ஒட்டகத்தின் மூக்கில் அமைந்துள்ள விசேஷ மூடிகள் தானாகவே மூடிக் கொள்ளும். காதுகளின் உள்ளேயும் வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள், மணலோ தூசியோ காதுகளுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகின்றன. அதன் இரண்டடுக்கு கண் இமையில் உள்ள நீண்ட சீப்பு போன்ற தடித்த நெருக்கமான முடிகள் ஒன்றனுள் ஒன்றாகக் கோர்த்துக் கொண்டு மணல் புயலில் இருந்து கண்ணுக்கு முழு பாதுகாப்பை அளிக்கிறது. பாலைவனப் புயலின்போது ஒட்டகங்கள் இமைகளை இறுக மூடிக் கொள்கின்றன. இருந்தபோதிலும் இமைகளின் தோல்கள் கண்ணாடி போன்று ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது. அதனால் இமைகள் மூடினாலும் பார்வை மறைவதில்லை.

    ஒட்டகத்தின் பாத அமைப்பு வித்தியாசமானது. பிளவுபட்ட இரு குளம்புகளையும் சேர்த்து மிக அகண்ட வட்ட வடிவிலான தட்டையான பாதத்தைக் கொண்டது. இதனால் பாலை மணலில் கால்கள் புதைந்து நிலைதடுமாறி விடாமல் சுடும் மணலிலும் அதனால் ஓட முடிகிறது.

    இப்படிப்பட்ட விநோத உடல் அமைப்பைக் கொண்ட அதிசயப் பிராணி ஒட்டகம்.

    அதனால்தான் திருக்குர்ஆனில், “ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?” (88:17) என்று ஒற்றை சொற்றொடரில் ஒட்டகத்தை ஒப்புமை காட்டி இறைவன் கூறுகின்றான். ஒட்டகத்தைத் தொடர்ந்து, அதே வசனத்தில் ‘வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? பூமி எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது?’ என்று தனது வல்லமையை சொல்லிக் காட்டுகிறான்.

    வானம், பூமி, சூரியன், சந்திரன், கோள்கள், நட்சத்திரங்கள், கடல், மலை போன்றவைகளை எப்படி இறைவன் படைத்தானோ அதே அளவுக்கு ஒட்டகத்தையும் அவன் ஒப்பற்ற அதிசயமாகவே படைத்திருக்கின்றான் என்றால், அது மிகையல்ல.

    - பாத்திமா மைந்தன்.
    இறைவன் நிச்சயம் என்னையும், என் பாவங்களை மன்னிப்பான் என்ற மன உறுதியுடன் நாம் பாவமன்னிப்பு கேட்கிற போதுதான் அல்லாஹ் நமது சிறிய, பெரிய பாவங்களை முற்றிலுமாக மன்னிப்பான்.
    நாம் அறிந்தோ அறியாமலோ அன்றாடம் பாவமான காரியங்களை செய்து விடுகிறோம். இது நம்மைப்போன்ற சாதாரண மனிதர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றுதான். இருந்தாலும் பாவம், விலக்க முடியாத ஒன்றல்ல.

    ரமலான் நோன்பில் இன்று முதல் ‘மஅஃபிரத்’ எனும் மன்னிப்பிற்குரிய நாட்கள் ஆரம்பமாகின்றன. எனவே, இந்த நடுப்பத்து நாட்களில் அல்லாஹ்விடம் நமது பாவச்செயல்களுக்காக, பரிபூரணமான மன்னிப்பை நாம் கேட்க வேண்டும்.

    அதற்கான ஒரு எளியவழி, நம்மைப்படைத்த அல்லாஹ்விடம் சரணடைந்து, ‘இறைவா, நான் தெரிந்தும் தெரியாமலும் பாவமான செயல்களைச் செய்துவிட்டேன்; எனவே, என் பாவங்களை மன்னித்து அருள்புரிவாயாக. நீயே எனக்கு பரிபூரண மன்னிப்பு வழங்குவாயாக’ என்று மனப்பூர்வமாக பாவமன்னிப்பு கேட்கவேண்டும்.

    அல்லாஹ் கூறுகிறான்: ‘இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக, நீங்கள் அனைவரும் பாவமன்னிப்புக்கோரி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள்’ (திருக்குர்ஆன் 24:31)

    நபிகளார் நவின்றார்கள்: ‘ஆதமின் மக்கள் அனைவருமே தவறு செய்பவர்கள் தான். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு கேட்பவர்களே’ (நூல்: இப்னு மாஜா)



    ரமலான் மாதம் புனிதமான ஒரு மாதம். இம்மாதத்தில் தான் நமது பாவங்களை நினைத்து இறைவனிடம் அதிகமாக பாவமன்னிப்பு தேட வேண்டும். செய்துவிட்ட பாவச் செயல்களுக்காக தினம்தினம் வருத்தப்பட வேண்டும். ஏனெனில், ‘பாவங்களை நினைத்து வருத்தப்படுவதும் பாவமன்னிப்பு தான்’ என நபிகளார் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

    நிச்சயமாக அல்லாஹ் அனைவரின் பாவங்களையும் முழுமையாக மன்னிப்பவனாக இருக்கிறான். இறைவன் நிச்சயம் என்னையும், என் பாவங்களை மன்னிப்பான் என்ற மன உறுதியுடன் நாம் பாவமன்னிப்பு கேட்கிற போதுதான் அல்லாஹ் நமது சிறிய, பெரிய பாவங்களை முற்றிலுமாக மன்னிப்பான்.

    ‘எவர் இஸ்திஃபார் எனும் பாவமன்னிப்புத் தேடலை கட்டாயமாக்கிக் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் அனைத்து விதமானநெருக்கடிகளிலிருந்து மீண்டுவரும் வழியையும், அனைத்துவிதமான கவலைகளிலிருந்து விடுதலையையும் தருகிறான். மேலும் அவர் நினைத்துப் பார்க்காத வகையில் அவருக்கு சகலவிதமான வசதி வாய்ப்புகளையும் அல்லாஹ் வாரி வழங்குகிறான்’ என்பது நபிமொழியாகும். (நூல்:அஹ்மது)

    நபிகளார் நாள் ஒன்றுக்கு எழுபது முதல் நூறு முறை பாவமன்னிப்பு கேட்பார்களாம். அப்படியானால், தினம் தினம் பாவக்கடலில் நீந்தும் நாம் எத்தனைமுறை பாவமன்னிப்பு கேட்க வேண்டும்? இது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்தாகும்.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.
    ×