என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    வரதட்சணைக்காகவும், வணிகத்திற்காகவும் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் நாளடைவில் வாழ்வியலைத் தொலைத்த நிகழ்வுகளை அன்றாட வாழ்வில் கண்டு கொண்டு தானே இருக்கிறோம்.
    மனித வாழ்க்கையின் தத்துவம் மிகவும் எளிதானது. வாழும் காலத்தில் உலகில் நன்னெறிகளுடன் வாழ்ந்து, மறுமையில் சொர்க்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே மனித வாழ்வின் இலக்கு. அந்த வாழ்க்கையை எப்படி கடந்து செல்கிறோம் என்பதை வைத்தே நம் மறுமை வாழ்க்கை தீர்மானிக்கப்படும்.

    ஐந்து கடமைகளை நிறைவேற்றுகிறோம், பெரும் பாவங்களை அஞ்சிவாழ்கிறோம். அதோடு நின்றுவிட்டதா நம்பிக்கை. இல்லை, மேலும் பல விஷயங்களில் அதிக கவனம் செலுத்தச்சொல்கிறது இஸ்லாம்.

    நாம் வெகு சாதாரணமாக பிறரைப் பற்றி இன்னொருவரிடம் புறம் பேசுகிறோம். அதை தவறென்றே கருதுவதில்லை. அவரிடம் உள்ள குறைகளைத் தான் சொன்னேன். இல்லாதவற்றை நான் சொல்லவில்லை என்று நமது செயலுக்கு நாமே நியாயம் கற்பித்துக்கொள்கிறோம்.

    இருப்பதை பிறரிடம் சொல்வது தான் புறம், இல்லாததை சொல்வது பெரும் பாவம். அது இட்டுக்கட்டுதல் வகையைச் சாரும். எத்தனையோ பாவங்களுக்கான தண்டனைகளைச் திருக்குர்ஆனில் சொன்ன இறைவன், இரண்டு பாவங்களுக்கான தண்டனையை உதாரணங்களோடு ஒப்பிட்டுச் சொல்கையில் மிகவும் கடுமையாக எச்சரிக்கின்றான்.

    “(ஒருவரிடமிருந்து ஒருவராக இப்பொய்யான) அவதூற்றை. நீங்கள் திட்டமாக அறியாத விஷயத்தை உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வாயால் கூறிக்கொண்டு திரிகிறீர்கள். இதனை நீங்கள் இலேசாகவும் மதித்துவிட்டீர்கள். ஆனால், இதுவோ அல்லாஹ்விடத்தில் (பாவங்களில்) மிக்க மகத்தானது”. (திருக்குர் ஆன் 24:15)

    “எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாத குற்றத்தை(ச் செய்ததாக)க் கூறித் துன்புறுத்துகிறார்களோ அவர்கள், நிச்சயமாக (பெரும்) அவதூற்றையும் பகிரங்கமான பாவத்தையுமே சுமந்து கொள்கின்றனர்”. (திருக்குர் ஆன் 33:58)

    “எவருடைய குற்றத்தையும் நீங்கள் துருவித்துருவி விசாரித்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றொருவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன் இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதை நீங்கள் வெறுப்பீர்களே. புறம் பேசுவதும் அவ்வாறே. இவ் விஷயங்களில் அல்லாஹ்விற்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து விலகுபவர்களை அங்கீகரிப்பவன், கருணையுடையவன் ஆவான்”. (திருக்குர் ஆன் 49:12)

    எந்த பாவத்திற்கும் இதுபோன்ற ஓர் உதாரணத்தை அல்லாஹ் குறிப்பிடவில்லை. பாவத்தை அதிகப்படியாக சுட்டிக்கட்டுவது மட்டுமல்ல, அதை விட்டு விலகி வருபவர்களை அங்கீகரித்து கருணை காட்டுகிறேன் என்றும் ஆறுதல் சொல்கிறான்.

    இதை அடுத்து பெரும் பாவமாக அல்லாஹ் குறிப்பிடுவது “வட்டி”. நாம் அன்றாடம் உழன்று கொண்டிருக்கும் வாழ்வு சக்கரத்தில் வட்டியும் ஒரு முக்கிய அம்சமாக நம்மை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

    வணிகங்களில், தொழில்களில், வங்கிகளில் பொருள் மாற்று முறையில் நாம் விரும்பாமலேயே வட்டியோடு தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. ‘நான் வட்டி வாங்கவில்லை, ஆனால் வட்டி கொடுக்கும் நிலையில் இருக்கிறேன்’ என்று சொல்வதை நாம் அதிகம் கேட்கிறோம். இதனால், நாமும் நம்மை அறியாமல் அந்த வட்டத்திற்குள் வந்து விடுகிறோம். அதன் வெளிப்பாட்டை நாமும் அனுபவிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகிறோம்.

    காரணம், வட்டி என்பதை அல்லாஹ் எந்த நிலையிலும் அங்கீகரிக்கவில்லை. வட்டி வாங்குவது, கொடுப்பது, அதற்கு சாட்சியாக இருப்பது, அல்லது அதற்கு உதவுவது, அதனை எழுதுவது, அதற்கான கணக்கு வழக்குகளைப் பராமரிப்பது, அந்த நிறுவனங்களில் பணிபுரிவது என்று எல்லா நிலைகளிலும் வட்டி தடை செய்யப்பட்டிருக்கிறது.

    அது மட்டுமல்ல இப் படிப்பட்டவர்களை நான் மறுமையில் எப்படி எழுப்புவேன் என்று குறிப்பிடும் போது அல்லாஹ் இப்படிச்சொல்கிறான்:

    “வட்டி வாங்கி தின்பவர்கள், சைத்தான் பிடித்து பித்தம் கொண்டவர்கள் எழுப்புவது போலன்றி வேறு விதமாக மறுமையில் எழுப்பப்பட மாட்டார்கள்”. (திருக்குர் ஆன் 2:275)

    இறைவன் இன்னுமொரு எச்சரிக்கையும் செய்கின்றான்: “வட்டியை தவிர்த்திடுங்கள். இப்படி நீங்கள் நடக்காவிட்டால் அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் போர் செய்ய தயாராகி விடுங்கள்”. (திருக்குர் ஆன் 2:279)

    அல்லாஹ்வை எதிர்த்து போர் புரிவது என்ற நினைப்பே தவறானது தானே?. அல்லாஹ் நமக்கென்று விதித்த வாழ்வாதாரம் நாம் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் நம்மை வந்து சேர்ந்தே தீரும். வட்டியை சார்ந்து வாழ்ந்தாலும், தவிர்த்து வாழ்ந்தாலும் வாழ்வாதாரம் வந்தே தீரும் என்ற விதி இருக்கும் போது அதை விலகி வாழ்ந்தால் இம்மைக்கும் மறுமைக்கும் நன்மையாக அமையுமே.

    வரதட்சணைக்காகவும், வணிகத்திற்காகவும் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் நாளடைவில் வாழ்வியலைத் தொலைத்த நிகழ்வுகளை அன்றாட வாழ்வில் கண்டு கொண்டு தானே இருக்கிறோம். இப்படி கொடுமைகள் புரியும் வட்டி வணிகத்தில் நாமும் ஒரு அங்கமாக செயல்பட்டால், அத்தனை பாவங்களிலும் நமக்கும் பங்கு உண்டு தானே?. மறுமையில் இதற்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லாமல் சொர்க்கம் செல்ல முடியுமா?

    புறம் பேசுதல், வட்டி இந்த இரண்டும் பாவங்களில் பெரும் பாவமாகும். ஆனால் நம்மில் பலர் மிகச்சாதாரணமாக இந்த இரண்டையும் கடந்து செல்கிறோம். இதனை எளிதாக தவிர்த்து வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கும் போது, நமது வாழ்வாதாரத்திற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளும் போது, சிரமம் இருந்தாலும் அதனை நல்ல வழியில் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம், வாழ்வை வளம் பெறச் செய்வோம்.

    மு.முகமது யூசுப், உடன்குடி.

    பிரார்த்தனை என்பது நாவு சார்ந்த இறை நம்பிக்கை. ஒருவன் பெருமையின் அடிப்படையில் தமக்கு அது தேவை இல்லை என நினைப்பது இறை நம்பிக்கையின் எதிர் வினையான இறை மறுப்பு ஆகும்
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘பாவ மன்னிப்புக் கோருவது’ மற்றும் ‘பிரார்த்தனை புரிவது’ குறித்த தகவல்களை இந்த வாரம் காண்போம்.

    மனந்திருந்தி பாவமன்னிப்புக் கோருவது இறைநம்பிக்கையின் மனம் சார்ந்த ஒரு பகுதி. பிரார்த்தனை புரிவது இறைநம்பிக்கையின் நாவு சார்ந்த ஒரு பகுதி. பிரார்த்தனை நாவிலிருந்து வந்தாலும், அது உள்ளம் உருகி கேட்க வேண்டும்.

    பிரார்த்தனை என்பது பொதுவானது. அதில் குழந்தை வளம், அருள்வளம், பொருள்வளம், உடல் நலம், தொழில் அபிவிருத்தி, மனஅமைதி, உலக அமைதி, மழைவேண்டி, உலக ஒற்றுமை, வெற்றி, தேர்ச்சி, உயர்வு, இன்பம், லாபம் அனைத்தும் அடங்கியிருக்கும். இதன் வரிசையில் பாவமன்னிப்புக் கோருவதும் அடங்கும்.

    முதலில் பாவமன்னிப்பைக் கோருவது குறித்து பார்ப்போம்.

    பாவம் புரிவது மனித இயல்பு. மன்னிப்பது இறைவனின் தயாளம். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள். அதுபோல அவரின் மரபணுவில் வந்த மனிதர்கள் அனைவரும் பாவம் செய்வது மரபுதான். பாவத்தையும், மனிதனையும் பிரிக்கமுடியாது. எனினும் பாவம் செய்ய நேரிடும் போது தடுக்கலாம்.

    ஆதமும், அவரின் மனைவி ஹவ்வா (அலை) ஆகிய இருவரும் இறைவனுக்கு மாறுசெய்த மறுகணமே இறைவனிடம் பாவமன்னிப்பு வேண்டினார்கள். அவ்வாறே மற்ற நபிமார்களும் பாவமன்னிப்பு வேண்டியதை இறைவன் தமது திருமறையில் பதிவு செய்து, பாவம் புரிந்த மக்களும் இவ்வாறு செயல்பட வேண்டுமென அறிவுறுத்துகின்றான்.

    ஆதம் (அலை)

    ‘ஆதம் (அலை) அவர் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்’. (திருக்குர்ஆன் 20:121)

    ஆதம் (அலை), அன்னை ஹவ்வா ஆகியோரின் பாவமன்னிப்பு: “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று (பிரார்த்தித்துக்) கூறினர். (திருக்குர்ஆன் 7:23)

    நூஹ் (அலை)

    “நூஹே, திண்ணமாக அவன் (உம் மகன்) உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். நிச்சயமாக அவன் ஒழுங்கீன மான காரியங்களையே செய்து கொண்டி ருந்தான். எதனுடைய உண்மை நிலையை நீர் அறிய மாட்டீரோ அதைப்பற்றி என்னிடம் கேட்காதீர். அறிவிலிகளில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நான் உம்மை அறிவுறுத்துகிறேன்.”

    ‘அதற்கு (நூஹ் நபி) “என் இறைவனே, நான் அறியாத விஷயங்களைப் பற்றி (இனி) உன்னிடம் கேட்காது என்னை பாதுகாக்குமாறு நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு நீ கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நானும் நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேன்” என்று கூறினார். (திருக்குர்ஆன் 11:46,47)

    இப்ராகீம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை)

    ‘இப்ராகீம் (அலை) தம் தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் இறைவனின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்தபின் அதிலிருந்து விலகிக்கொண்டார். இப்ராகீம் (அலை) பணிவுள்ளவர்; சகிப்புத்தன்மை உள்ளவர்.’ (திருக்குர்ஆன் 9:114)

    ‘(இப்ராகீம் (அலை), இஸ்மாயீல் (அலை); எங்களை மன்னிப்பாயாக. நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன் (என்றனர்)’. (திருக்குர்ஆன் 2:128)

    தாவூத் (அலை), அவரின் மகன் சுலைமான் (அலை)

    ‘அவரைச் சோதித்தோம் என்பதை தாவூத் (அலை) விளங்கிக்கொண்டார். தமது இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார்; பணிந்து விழுந்தார்; திருந்தினார்’ (திருக்குர்ஆன் 38:24)

    ‘சுலைமானை (அலை) நாம் சோதித்தோம். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம். பின்னர் அவர் திருந்தினார். ‘என் இறைவா, என்னை மன்னித்து விடு. எனக்குப்பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு, நீயே வள்ளல்’ என்று கூறினார்’. (திருக்குர்ஆன் 38:34,35)

    மூஸா (அலை)

    ‘அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சார்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா (அலை) ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. ‘இது சைத்தானின் வேலை. அவன் வழிகெடுக்கும் தெளிவான எதிரி’ என்றார். ‘என் இறைவா, எனக்கே நான் தீங்கு இழைத்துவிட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக’ என்றார். இறைவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்’ (திருக்குர்ஆன் 28:15,16).

    ஸாலிஹ் (அலை)

    ‘ஸமூது கூட்டத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை (அலை) (அனுப்பினோம்). ‘என் சமுதாயமே, இறைவனை வணங்குங்கள். அவனின்றி வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு யாருமில்லை. அவனே உங்களை பூமியிலிருந்து படைத்தான். அதில் உங்களை வசிக்கச் செய்தான். எனவே அவனிடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள். பின்னர், அவனை நோக்கித் திரும்புங்கள், என் இறைவன் அருகில் உள்ளவன்; பதிலளிப்பவன்’ என்றார்’. (திருக்குர்ஆன் 11:61)

    சுஅய்ப் (அலை)

    ‘உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள். என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன் (என்றார்)’. (திருக்குர்ஆன் 11:90)

    யாகூப் (அலை), அவரது மகன் யூசுப் (அலை)

    ‘உங்களுக்காக எனது இறைவனிடம் பின்னர் பாவமன்னிப்புத் தேடுவேன். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (யாகூப்) கூறினார்.’ (திருக்குர்ஆன் 12:98)

    ‘இன்று உங்களைப் பழிவாங்குதல் இல்லை. உங்களை இறைவன் மன்னிப்பான். அவன் கருணையாளர்களில் சிறந்த கருணையாளன்’ என்று (யூசுப்) கூறினார்.’ (திருக்குர்ஆன் 12:92)

    யூனுஸ் (அலை)

    ‘மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். ‘அவர் மீது நாம் சக்தி பெறமாட்டோம்’ என்று நினைத்தார். ‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகிவிட்டேன்’ என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.’ (திருக்குர்ஆன் 21:87,88)

    முஹம்மது நபி (ஸல்)

    ‘என் இறைவா, மன்னித்து அருள்புரிவாயாக, நீ அருள்புரிவோரில் சிறந்தவன்’ என கூறுவீராக’.(திருக்குர்ஆன் 23:118)

    ஈஸா (அலை)

    ‘நீ அவர்களை தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. நீ அவர்களை மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்’ (என ஈஸா (அலை) கூறினார்)’. (திருக்குர்ஆன் 5:118)

    பாவமன்னிப்பு என்பது ஒருவர் தாம் செய்த, பிறர் செய்த பாவங்களுக்காக பாவமன்னிப்பு வேண்டலாம். அல்லது தாம் செய்யாத பட்சத்தில் பிறருக்காகவும் வேண்டலாம். அல்லது பிறர் வேண்டும்படி தூண்டலாம். எதுவாயினும் பிரார்த்தனை அவசியம். பிரார்த்தனையின் மூலமே பாவமன்னிப்புக் கோரலாம்.

    ‘எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் பாவம் செய்யவில்லையானால், இறைவன் உங்களை போக்கிவிட்டு, பாவம் செய்யும் ஒரு சமூகத்தை கொண்டு வருவான். அவர்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அவர்களை இறைவன் மன்னிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    ‘நான் ஒரு நாளைக்கு இறைவனிடம் நூறு தடவை பாவமன்னிப்புக் கோருகிறேன் என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அகர்ருல் முஜ்னீ (ரலி), நூல்:முஸ்லிம்)

    பாவமே செய்யாத, முன்பின் பாவம் மன்னிக்கப்பட்ட உத்தம நபி (ஸல்) அவர்களே ஒரு நாளைக்கு 100 தடவை பாவமன்னிப்பு வேண்டி இருக்கும் போது சதாகாலமும் பாவத்தில் புரளும் நாம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா?

    ‘ஆதமுடைய குழந்தைகள் பாவம் செய்பவர்களே, பாவம் செய்பவர்களில் சிறந்தவர்கள் பாவ மீட்சி பெறுபவர்களே என நபி (ஸல்) கூறினார்கள்.’

    இப்போதே இறைவனிடம் பிரார்த்திப்போம். பிரார்த்தனை என்பது வேண்டுதல், உதவி கோருதல், வழிபாடு, வாதிடுதல், அழைத்தல், கூறுதல், புகழ்தல், உயர்அந்தஸ்து, மனிதன் தன் தேவைகளை இறைவனிடம் எடுத்துச் சொல்லி, அவற்றை நிறைவேற்றித் தருமாறு கேட்பதே ஆகும்.

    ‘நபியே, என்னைப்பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால், நான் அருகில் இருக்கிறேன்; பிரார்த்திப்பவர் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே, என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும், என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்.’ (திருக்குர்ஆன் 2:186)

    ‘பிரார்த்தனை என்பது வணக்கத்தின் மூளை ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதி)

    ‘இறைவனிடம் பிரார்த்தனையை விட மிகவும் மதிப்பு மிக்க சங்கையான வேறு எந்த செயலும் கிடையாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    ‘இறைவனிடம் அவனது அருட்கொடையை கேட்டுப் பெறுங்கள். ஏனெனில், தேவைகளை கேட்பவர் மீது இறைவன் பிரியம் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி)

    ‘எந்த மனிதன் தமது தேவைகளை இறைவனிடம் கேட்கவில்லையோ, அவன் மீது இறைவன் கோபம் அடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    ‘இறைவன் சங்கையானவன்; வெட்கம் உள்ளவன். அடியான் இருகரமேந்தி அவனிடம் பிரார்த்தித்தால், அவ்விரண்டையும் வெறுங்கையாக திருப்பி அனுப்புவதைக் கண்டு வெட்கம் அடைகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: ஸல்மான் (ரலி), நூல்: திர்மிதி)

    பிரார்த்தனை என்பது நாவு சார்ந்த இறை நம்பிக்கை. ஒருவன் பெருமையின் அடிப்படையில் தமக்கு அது தேவை இல்லை என நினைப்பது இறை நம்பிக்கையின் எதிர் வினையான இறை மறுப்பு ஆகும். பிரார்த்தனை என்பது ஒரு இறைவணக்கம். அதன்வழியாக இறை இணக்கத்தையும், தமது அனைத்து விதமான தேவை களையும் இறைவனிடம் இருகரமேந்தி கேட்டு பெறலாம்.

    கேட்பது நமது கடமை. கொடுப்பதும், எடுப்பதும் அவனது உரிமை. கேட்டது கிடைத்தாலும் நல்லது. கிடைக்காத பட்சத்தில் இவ்வுலகத்திற்கும் சேர்த்து மறுஉலகில் மொத்தமாக இறைவன் தருவது நலவோ நலவு. நாமும், பிறரும், வீடும், நாடும், நலம் பெற, வளம் பெற பிரார்த்திப்போம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    அமைதியைக் குறித்து வெறுமனே பேசிக்கொண்டிருக்கும் மார்க்கம் அல்ல இஸ்லாம். மாறாக அதனைச் செயலளவில் நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சியையும் முஸ்லிம்களுக்கு வழங்குகிறது.
    ஒரு நாடு நல்ல நாடாக இருக்க வேண்டுமெனில் அங்கு அமைதியான சூழல் நிலவ வேண்டும். அந்த அமைதியான சூழலை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துதான் உருவாக்க முடியும். வாழும் நாட்டில் அமைதியை நிலைநாட்டும் பணியில் முஸ்லிம்களாகிய நமக்கும் பெரும்பங்கு உள்ளது.

    இஸ்லாம் என்பதே அமைதி மார்க்கம்தான். ‘ஸலாம்’ (அமைதி) எனும் வேர்சொல்லில் இருந்துதான் ‘இஸ்லாம்’ எனும் சொல் உருவாகிறது. அதுமட்டுமல்ல, ஒவ்வோர் இறைநம்பிக்கையாளரையும் ஏக இறைவன் இந்த அமைதியின்பால் இவ்வாறு அழைக்கின்றான்:

    “இறைநம்பிக்கை கொண்டோரே, நீங்கள் முழுக்க முழுக்க இஸ்லாத்தில் நுழைந்துவிடுங்கள்” (திருக்குர்ஆன் 2:208).

    இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ‘இஸ்லாம்’ எனும் பதத்தைக் குறிக்க, மூலத்தில் ‘ஸில்ம்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு இரண்டு பொருள்கள் உள்ளன. ஒன்று: அமைதி. இரண்டு: இஸ்லாம்.

    ஆக, இந்த வசனத்தின் பொருளை ஒருவகையில் இப்படியும் கூறலாம்; ‘இறைநம்பிக்கை கொண்டோரே, நீங்கள் முழுக்க முழுக்க அமைதியில் நுழைந்துவிடுங்கள். போருக்கு எதிரான அமைதியில் நுழைந்துவிடுங்கள்’.

    இரு முஸ்லிம்கள் சந்தித்துக்கொண்டால் இருவரும் கூறவேண்டிய முகமன் என்ன?

    ‘அஸ்ஸலாமு அலைக்கும்’. (உங்கள் மீது சாந்தியும் அமைதியும் உண்டாவதாக!).

    அதற்கான பதிலை அடுத்தவர் எவ்வாறு கூற வேண்டும்?

    ‘வ அலைக்குமுஸ்ஸலாம்’. (உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)

    உலகில் சுமார் 150 கோடி முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, ‘அஸ்ஸலாமு அலைக்கும், வ அலைக்குமுஸ்ஸலாம்’ என்று கூறுவதன் மூலம் அவர்கள் வாழும் பகுதியில் எவ்வளவு பெரிய அமைதியை ஏற்படுத்த அவர்கள் முயலுகின்றனர் என்பதை எண்ணிப் பாருங்கள்.

    ஆகவேதான் ‘ஹிஜ்ரத்’ எனும் புலம் பெயர்தலின்போது மதீனாவில் முதன் முதலாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நுழைந்த வேளையில் மக்களிடம் கூறினார்கள்: “மக்களே, ஸலாமை (அமைதியைப்) பரப்புங்கள். அறிந்தவர் அறியாதவர் அனைவர் மீதும் ஸலாமைப் பரப்புங்கள்”. (முஸ்லிம்)

    நபி (ஸல்) அவர்கள், பிற நாட்டு அரசர்களுக்கு கடிதம் எழுதும்போது அந்தக் கடிதத்தை இவ்வாறுதான் தொடங்குவார்கள்: “நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு சாந்தி உண்டாகட்டும்” (திருக்குர்ஆன் 20:47)

    வாழும் தேசத்தில் அமைதியை நிலைநாட்டும் முஸ்லிம்களுக்கு மறுமையில் இறைவன் தரும் சுவனத்தின் பெயர் என்ன தெரியுமா? ‘தாருஸ்ஸலாம்’ (அமைதி இல்லம்). ஆம், சுவனத்தின் இன்னொரு பெயர்தான் இது. அங்கு வீணான தேவையற்ற பாவமான பேச்சுகள் எதுவும் பேசப்படமாட்டாது. மாறாக, அங்கு என்ன பேசப்படும் என்பது குறித்தும் திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ, பாவமான விஷயங்களையோ செவியேற்க மாட்டார்கள், சாந்தி சாந்தி என்ற பேச்சைத் தவிர”. (திருக்குர்ஆன் 56:25,26)

    போர் என்பது ரத்தமும் சதையுமாக பல உயிர்களை காவு வாங்கும் ஒரு வெறுக்கத்தக்க செயல். இஸ்லாமும் தற்காப்புப் போர்களில் ஈடுபட்டுள்ளது. ஆயினும் போர்களில் கிடைக்கும் வெற்றியை ஒருபோதும் இஸ்லாம் சிலாகித்துக் கூறுவதில்லை.

    ஆனால் கத்தியின்றி ரத்தமின்றி கிடைத்த ஹுதைபிய்யா எனும் உடன்படிக்கை குறித்து கூறும்போது மட்டும், “(நபியே) நாம் உமக்கு வெளிப்படையான வெற்றியை அளித்துவிட்டிருக்கிறோம்” என்று கூறுகின்றான் இறைவன். (திருக்குர்ஆன் 48:1)

    ஏன்..? என்ன காரணம்..? அது யுத்தமல்ல. அது ஓர் உடன்படிக்கை மட்டுமே. பத்து வருடங்கள் போர் செய்யக்கூடாது எனும் உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையைத்தான் இறைவன் ‘தெளிவான வெற்றி’ என்று அறிவிக்கின்றான். உடன்படிக்கையை தெளிவான வெற்றி என்று அறிவிப்பதில் இருந்தே இஸ்லாம் எந்த அளவுக்கு அமைதியை விரும்புகின்றது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

    ஒருவருடைய பெயரில் கூட வன்முறையைக் குறிக்கும் சொற்கள் இருக்கக் கூடாது என்று இஸ்லாம் விரும்புகின்றது.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “போர் (ஹர்ப்), கசப்பு (முர்ரா) என்பவை வெறுக்கத்தக்க பெயர்கள் ஆகும்” (அஹ்மத், அபூதாவூத்)

    ஒருமுறை ஓர் ஒட்டகத்தில் இருந்து பால் கறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அருகில் இருந்த மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: “இந்த ஒட்டகத்திலிருந்து யார் பால் கறப்பார்கள்?”. அப்போது ஒருவர் முன் வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உமது பெயர் என்ன?” என்று கேட்டார்கள். அவர், “முர்ரா” (கசப்பு) என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உட்கார்” (நீர் பால் கறக்க வேண்டாம்) என்றார்கள். மீண்டும் ஒருவர் எழுந்தார். அவரிடமும் நபி (ஸல்) அவர்கள், “உமது பெயர் என்ன?” என்று கேட்டார்கள். அவர், “ஹர்ப்” (போர்) என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உட்கார்” (பால் கறக்க வேண்டாம்) என்றார்கள். மூன்றாவதாக ஒருவர் எழுந்தார். அவரிடமும் நபி (ஸல்) அவர்கள், “உமது பெயர் என்ன?” என்று கேட்டார்கள். அவர், “யஈஷ்” (உயிருடன் வாழ்பவர்) என்றார். அவரிடம் பால் கறக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், ஹாகிம்)

    ஆக, பெயரில்கூட வன்முறையும் அமைதியின்மையும் இருப்பதை நபி (ஸல்) அவர்கள் பொருந்திக்கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரிய வருகின்றது. எனவே பெயரில் கூட அமைதியின்மையை விரும்பாத மார்க்கத்தின் சொந்தக்காரர்கள் இந்த நாட்டில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

    அமைதியைக் குறித்து வெறுமனே பேசிக்கொண்டிருக்கும் மார்க்கம் அல்ல இஸ்லாம். மாறாக அதனைச் செயலளவில் நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சியையும் முஸ்லிம்களுக்கு வழங்குகிறது. ஆம், ஹஜ் என்ற பெயரில் உலகளாவிய முஸ்லிம்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் அமைதிப் பயிற்சியை இஸ்லாம் வழங்குகிறது.

    ஹஜ்ஜை நிறைவேற்றுபவர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் குறித்து கூறும்போது அல்லாஹ் கூறுகின்றான்: “ஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக்கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக் கூடாது”. (திருக்குர்ஆன் 2:197)

    நாம் வாழும் தேசத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இயன்றவரை பாடுபட வேண்டும். இல்லையேல் குறைந்தபட்சம் இப்ராகிம் (அலை) அவர்கள் தாம் வாழ்ந்த நாட்டுக்காகப் பிரார்த்தனை செய்ததைப்போன்றாவது பிரார்த்திக்க வேண்டும்.

    மக்கா நகர் குறித்து இப்ராகிம் (அலை) அவர்களின் பிரார்த்தனை இவ்வாறு இருந்தது: “இப்ராகிம் இவ்வாறு பிரார்த்தனை புரிந்ததை நினைவுகூருங்கள்: ‘என் இறைவனே! (மக்காவாகிய) இந் நகரத்தை அமைதி அளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக!” (திருக்குர்ஆன் 14:41)

    நூஹ் மஹ்ளரி, குளச்சல்.
    ‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திரும்பிக் கொள்ளாதே. பூமியில் பெருமையாகவும் நடக்காதே. அகப்பெருமைக்காரர், ஆணவங்கொண்டோர் எவரையும் இறைவன் நேசிக்கமாட்டான்’. (திருக்குர்ஆன் 31:18)
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான பணிவாக இருப்பது மற்றும் தற்பெருமையை கைவிடுவது குறித்த தகவல்களை காண்போம்.

    ஒருவரிடம் பணிவு இல்லாத போது அந்த இடத்தை தற்பெருமை ஆக்கிரமித்து விடுகிறது. தற்பெருமை உள்ளவனிடம் உப்புக்குக்கூட பணிவை எதிர்பார்க்க முடியாது. ஒன்று இருந்தால் மற்றொன்று விலகிபோய்விடும்.

    ‘பணிவு’ என்பது நபிமார்கள், நல்லோர்கள், பெரியோர்கள் ஆகியோரின் குணமாகும். ‘தற்பெருமை’ என்பது சைத்தானின் தனிப்பெரும் நடவடிக்கையும், சர்வாதிகாரிகளின் போக்கும் ஆகும்.

    இறைநம்பிக்கையாளர்கள் பணிவை வெளிப் படுத்துவார்கள். தற்பெருமையை தூக்கி எறிவார்கள். இறைநம்பிக்கை குடியிருக்கும் உள்ளத்தில் பணிவு இருக்கும். அது வெளிப்பட வேண்டிய விதத்தில் வெளிப்படும். அதே வேளையில் இறைநம்பிக்கையும், தற்பெருமையும் ஒன்று சேர வாய்ப்பில்லை.

    பணிவு என்பது அடிமையாக இருப்பதோ, சுயமரியாதையை விட்டுக்கொடுப்பதோ, காக்காய் பிடிப்பதோ, காலில் விழுவதோ, எதற்கெடுத்தாலும் ‘ஆமாம்’ என்று கூறுவதோ, தலையை ஆட்டிக்கொண்டிருப்பதோ, உடலை கூனிக்குறுகி வளைப்பதோ அல்ல என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    பணிவு என்பது உடலில் வெளிப்படும் மாற்றமோ, உடல் அசைவோ, உடலில் தோன்றும் நடிப்போ கிடையாது. அது உள்ளத்திலிருந்து ஏற்படும் தன்னடக்கம், நாவடக்கம், கையடக்கம் ஆகியவை ஆகும். மேலும் பிறரை புண்படுத்தாமலும், மற்றவரை புரிந்து, மதித்து நடப்பதுமே பணிவு.

    பணிவு என்பது இழிவோ, கோழைத்தனமோ அல்ல. அது உயர்வு தரும் அரும்பெரும் குணம். இறைவனுக்காக மற்றவர்களிடம் பணிந்து நடக்கும் போது வானமே குனிந்து நமக்கு குடை பிடிக்கும். பூமியோ தாழ்ந்து விரிப்பு விரிக்கும். வானளாவிய அளவிற்கு உயர்வு கிடைக்கும். இந்த உயர்வு நிச்சயம் சாத்தியம் என்பதை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:

    ‘தர்மம் செய்வதால் பொருளாதாரம் குறைந்து விடாது. ஒரு அடியானை இறைவன் மன்னிப்பதால் கண்ணியத்தைத் தவிர வேறு எதையும் அதிகமாக்க மாட்டான். இறைவனுக்காக பணிந்து நடக்கும் எந்த மனிதனையும் இறைவன் உயர்த்தாமல் விட்டதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    இறைவன் பணிவைக் கற்றுத்தர விரும்பி அனைத்து நபிமார்களையும் ஆடு மேய்ப்பாளராக பணிபுரிய வைத்துள்ளது, பணிவு எனும் குணத்திற்கு கிடைத்த மகுடம் ஆகும்.

    ‘இறைவன் எந்த ஒரு நபியையும் ஆடு மேய்ப்பாளராகவே அன்றி அனுப்பவில்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ‘தாங்களுமா?’ என நபித்தோழர்கள் கேட்டார்கள். ‘ஆம், மக்காவாசிகளுக்காக ‘கராரீத்’ எனும் இடத்தில் நானும் ஆடு மேய்த்திருக்கிறேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’, (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

    பணிவு என்பது கனிவை உருவாக்கும். பணிவு என்பது பாசத்தை வளர்க்கும், பிளவை தவிர்க்கும். பிரிவை குறைக்கும்.

    நாம் இறைவனிடம் காட்டும் பணிவு- சிரசை தாழ்த்துவது, கூனிக்குறுகி குனிந்து நிற்பது, அவனிடம் கையேந்துவது போன்றதாகும்.

    பெற்றோரிடம் காட்டும் பணிவு- அவர்களிடம் அன்புடன், அடக்கத்துடன், குரலை தாழ்த்தி பேசுவது, அவர்களுக்கு பணிவிடை செய்து, பணிந்து நடப்பதில், அவர்களுக்காக பிரார்த்திப்பதில் வெளிப்படுகிறது.

    ‘என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்; பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள் என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால், அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக்கூறாதே, அவ்விருவரையும் விரட்டாதே, மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு, அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக, சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல், இறைவா, இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக என்று கேட்பீராக’. (திருக்குர்ஆன் 17:23,24)

    இவ்வாறு பணிந்து நடக்கும் குழந்தைகளுக்குத்தான் பெற்றோரின் பிரார்த்தனை கிடைக்கும். அவர்களின் எதிர்கால வாழ்வும் சிறக்கும்.

    பணிவுள்ள கணவனால் தான் மனைவியை முழுதிருப்திப்படுத்த முடியும். பணிவுள்ள மனைவிக்குத்தான் கணவனின் முழுபாசம் கிடைக்கும்.

    பணிவுள்ள மாணவ செல்வங்களுக்குத்தான் ஆசிரியரின் கல்வியும், அரவணைப்பும் கிடைக்கும். பணிவுள்ள தொழிலாளிக்குத்தான் முதலாளியின் உதவியும், உபகாரமும் கிடைக்கும்.

    நிமிர்ந்து வாழ வீடு இருந்தாலும், பணிந்து நடக்க வாசல்படி வேண்டும். விட்டுக்கொடுப்பதும் பணிவின் அடையாளமே. அவர்கள் வாழ்வில் என்றும் கெட்டுப் போனதில்லை.

    நாட்டுக்காக, மக்களுக்காக பாடுபடுவது சேவை என்றால், வீட்டு மக்களுக்காக பாடுபடுவது பணிவு, பணிவிடை ஆகும்.

    ஜனாதிபதியாக உமர் (ரலி) இருந்த வேளையில் குடும்பத்தினருக்காக தமது இடது கையில் இறைச்சியையும், வலது கையில் மளிகை பொருட்களையும் சுயமாக சுமந்து கொண்டு வந்தார்கள்.

    மர்வான் (ரஹ்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கவர்னராக நியமிக்கப்பட்டார்கள். கவர்னராக பதவி வகித்துக் கொண்டு, கடைவீதிக்குச் சென்று, விறகுகளை வாங்கி, தானாக சுமந்து கொண்டு வீடு திரும்பினார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் ஏழை-பணக்காரர், சிறியவர்- பெரியவர் என அனைவரிடமும் கை கொடுப்பார்கள். தன்னை எதிர்நோக்கும் தொழுகையாளிகளில் சிறியவர்- பெரியவர், கறுப்பர்-சிவப்பர், அடிமை-எஜமான் எவராக இருந்தாலும் முந்திக்கொண்டு ஸலாம் கூறுவார்கள். இது நபியவர்களின் பணிவான நடத்தையாகும்.

    தற்பெருமை வேண்டாம்

    ‘நீங்கள் பணிவாக நடக்க வேண்டும். எவரும் எவரை விடவும் பெருமை கொள்ளக்கூடாது. எவரும் எவரின் மீதும் வரம்பு மீறக்கூடாது’ இவ்வாறு இறைவன் எனக்கு செய்தி அறிவித்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இயாள் பின் ஹிமார் (ரலி), நூல்: முஸ்லிம்)

    பெருமை என்றால் என்ன?

    சத்தியத்தை மறுப்பதும், மக்களை இழிவாக கருதுவதும் தான் பெருமை.

    இத்தகைய பெருமை ஏன் ஏற்படுகிறது?

    ஒருவன் தன்னை மற்றவரைவிட உயர்வானவனாகவும், பிற மக்களை சிறுமையாகவும், பிறர் தமக்கு பணிய வேண்டும் என நினைத்து பெருமிதம் கொள்வதினால் ஏற்படுகிறது.

    இதுகுறித்த நபிமொழி வருமாறு:

    ‘பெருமை என்பது உள்ளத்தில் தோன்றும் ஒரு உணர்வு. எவரின் உள்ளத்தில் அணு அளவு பெருமை உள்ளதோ, அவர் சொர்க்கம் புகமாட்டார்’ என்று நபிகளார் கூறினார்கள்.

    அப்போது அருகில் இருந்தவர், ‘ஒருவர் தனது ஆடை அழகாக இருக்கவேண்டும்; தமது மிதியடி அழகாக இருக்கவேண்டும் என விரும்புவது பெருமையாகாதா?’ என வினவினார்.

    அதற்கு நபியவர்கள் ‘இறைவன் அழகானவன்; அவன் அழகானதை விரும்புகிறான். (இவ்வாறு விரும்புவது பெருமையாகாது) பெருமை என்பது சத்தியத்தை ஏற்க மறுப்பதும், மக்களை இழிவாக நினைப்பதும் ஆகும்’ எனக் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்)

    உள்ளத்தில் பெருமை தோன்றினாலும், அது வெளிப்படும் நபர்களை வைத்து பலவிதமாக காட்சி தருகிறது. நிறப்பெருமை, மொழிப் பெருமை, குலப்பெருமை, குடும்பப் பெருமை, பணப்பெருமை, பதவிப்பெருமை, மண்பெருமை, பொன் பெருமை, குழந்தைப்பெருமை, தற்பெருமை போன்ற வடிவங்களில் பரிணாமம் பெறுகிறது.

    எது எப்படியோ எந்தவித பெருமையும் இஸ்லாத்தில் கூடாது. அது இறைநம்பிக்கைக்கு எதிரானது. இறைநம்பிக்கையாளரிடம் அது ஒரு போதும் தென்படக்கூடாது. பெருமைப்பட தகுதியுள்ள ஒருவன் இறைவன் மட்டுமே.

    ‘கண்ணியம் என் கீழ் ஆடை; பெருமை என் மேலாடை. இவ்விரண்டில் ஒன்றை என்னிடமிருந்து கழற்ற நினைப்பவனை நிச்சயம் நான் அவனை வேதனை செய்வேன் என இறைவன் கூறியதாக நபி (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்).

    ஆணவம் கொண்டோர் இந்த உலகத்திலேயே அடியோடு அழிக்கப்பட்ட வரலாற்று சான்றுகள் திருக்குர்ஆன் நெடுகிலும் பரவி விரவிக்கிடக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றைக் காண்போம்.

    மூஸா (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவன் காரூன். இவனுக்கு ஏராளமான செல்வங்கள் வழங்கப்பட்டிருந்தது. தமது செல்வத்தைக் கொண்டு பெருமையடித்தான். அதனால் அவன் பூமியில் புதைந்து போனான். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘நிச்சயமாக காரூன், மூஸா (அலை) சமூகத்தைச் சார்ந்தவன். எனினும் அவர்கள் மீது அவன் அட் டூழியம் செய்தான். அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம். நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன. அப்பொழுது அவனது கூட்டத்தார் அவனிடம் ‘நீ இதனால் ஆணவம் கொள்ளாதே. நிச்சயமாக இறைவன் ஆணவம் கொள்வோரை நேசிப்பதில்லை என்றார்கள்’. (திருக்குர்ஆன் 28:76)

    ‘அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம்’. (திருக்குர்ஆன் 28:81)

    பிர் அவ்ன் தமது அதிகாரத்தை வைத்து ஆணவ ஆட்டம் போட்டான். அதனால் அவன் கடலில் மூழ்கி அழிந்து போனான்.

    ஆத் கூட்டத்தார் தமது பலத்தை நம்பி பெருமை யடித்தனர். அதனால் அவர்கள் புயல் காற்றினால் வீழ்ந்து போனார்கள்.

    சைத்தான் வானவர்களுக்கெல்லாம் பாடம் நடத்தும் பெரிய அறிவாளியாக இருந்தான். முதல் மனிதர் ஆதமுக்கு நான் ஏன் பணிய வேண்டும்? என்று திமிராகவும், பெருமையாகவும் பேசியதால் அவன் சொர்க்கத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, சபிக்கப்பட்டவனாக மாறிவிட்டான்.

    ‘ஒருவர் நபி (ஸல்) அவர்களின் அருகாமையில் இடது கையால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வலது கையால் சாப்பிடும்படி அவரிடம் நபிகளார் வேண்டினார். ‘என்னால் அது முடியாது’ என அவர் ஆணவத்துடன் கூறினார். ‘இனி உன்னால் முடியவே முடியாது’ என நபி (ஸல்) பதில் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸலமா பின் அக்வா (ரலி), முஸ்லிம்)

    ஆணவத்துடன் நடந்துகொண்ட இவருக்கு வாழ்நாள் முழுவதும் வலது கை செயல் இழந்து போய்விட்டது.

    ஆணவத்துடன் நடந்து கொண்டோருக்கு இவ்வுலகில் ஏற்பட்ட இழிவையும், அழிவையும் தெரிந்து கொண்டோம். நாளை மறுமையிலும் அவர்களுக்கு இழிவும், அழிவும் உண்டு.

    ‘சொர்க்கமும், நரகமும் வாதம் செய்தன. நரகம் என்னிடம் சர்வாதிகாரிகளும், பெருமையாளர்களும் வருவார்கள் என்றது. சொர்க்கம் என்னிடம் அப்பாவிகளும், ஏழைகளும் வருவார்கள் என்றது என நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம்)

    ‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திரும்பிக் கொள்ளாதே. பூமியில் பெருமையாகவும் நடக்காதே. அகப்பெருமைக்காரர், ஆணவங்கொண்டோர் எவரையும் இறைவன் நேசிக்கமாட்டான்’. (திருக்குர்ஆன் 31:18)

    ‘மறு உலகம் அதை பூமியில் உயர் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக ஏற்படுத்தியுள்ளோம்’. (திருக்குர்ஆன் 28:83)

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    நபிகளார் வலிவுறுத்தும் இத்தகைய உன்னத உயர் பண்புகள் உலகில் என்றுமே தோற்பது இல்லை. அவைகள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கும்.
    ஒரு நாள் இரவு நபிகளார் கனவொன்று கண்டார்கள், அக்கனவில் க அபாவின் திறவுகோல் தமது கையில் இருப்பதாகவும், க அபாவினுள் நபிகளார் நுழைவதாகவும் அது அமைந்து இருந்தது. இதையடுத்த அண்ணலார் தமது தோழர்களை தன்னுடன் புனித யாத்திரை செல்ல வருமாறு அழைப்பு விடுத்தார்கள்.

    யாத்திரையின் போது போருக்கான ஆயுதங்களை எடுத்துச் செல்ல அனுமதி மறுத்த நபிகளார், தத்தமது வாளையும் வேட்டைக்கு தேவையான சில ஆயுதங்களை மட்டுமே உடன் எடுத்துச் செல்ல அனுமதித்தார்கள்.

    நபிகளாரின் தலைமையில் புனித யாத்திரை குழு ஒன்று மதீனாவை விட்டு புறப்பட்டு வருவதை அறிந்த மக்காவின் குரைஷிகள் குலத்தவர்கள் சஞ்சலத்தில் குழம்பி போய் இருந்தார்கள்.

    க அபாவை நோக்கி வரும் யாத்திரையாளர்களை தடுப்பது என்பது புனித மரபுக்கு முரணாகி விடும். அதேவேளை நபிகளாரின் குழுவை புனித யாத்திரை செய்ய அனுமதித்தால் அது நபிகளாருக்கு பெரும் வெற்றியாக அமைந்து விடும். இத்தகைய தர்ம சங்கடத்தில் குரைஷியர் இருந்த போதிலும் காலித் இப்னு வலித் தலைமையின் கீழ் 200 குதிரைப்படை வீரர்களை தயார் நிலையில் நிறுத்தி வைத்தனர்.

    இதை அறிந்த நபிகளார் மோதலை தவிர்ப்பதற்காக மாற்றுபாதை வழியாக மக்கா அருகில் உள்ள ஹுதைபியா என்ற இடத்தில் வந்து முகாமிட்டார்கள். இதை அறிந்த குரைஷிகள் தங்களது நிலைபாட்டைச் கூறிட புதைல் இப்னு வர்கா என்பவரை அனுப்பி வைத்தார்கள்.

    நபிகளாரை சந்தித்த அவர், ‘குரைஷிகளின் கடைசி மனிதர் எஞ்சி இருக்கும் வரை உங்களை நாங்கள் புனித யாத்திரை செய்ய அனுமதிக்க மாட்டோம்’ என்றார்.

    அதற்கு நபிகளார், ‘நாங்கள் இங்கு யுத்தம் புரியும் நோக்கத்தில் வரவில்லை. இறை இல்லத்தை தரிசிக்கவே வந்துள்ளோம். அதனை தடுப்பவர் எவராயினும் அதனை எதிர்த்து நின்று நாங்கள் போராடுவோம்’ என்றார்கள்.

    புதைல் இச்செய்தியை குரைஷியரிடம் சென்று கூறிவிட்டு ‘முஹம்மத் சாந்தமான நோக்கத்தோடே இங்கு வந்துள்ளார்’ என்றார்.

    அதில் திருப்தியடையாத குரைஷியர்கள் நபிகளாரை வேவு பார்த்து உள்ளதை உள்ளபடி தெரிந்துவர உர்வா என்பவரை அனுப்பி வைத்தார்கள்.

    உர்வா நபிகளாரை சந்தித்து உரையாடத் தொடங்கினார். பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டே அங்கு நடப்பவற்றை கண்காணித்தார்.

    பின் குரைஷியரிடம் வந்த உர்வா கூறினார், ‘நான் தூதுவராக கிஸ்ரா ஸீசர், நஜ்ஜாசி போன்ற பல அரசர் களையும் சந்தித்து வந்துள்ளேன். ஆனால் முஹம்மத் அவரது தோழர் களால் கண்ணியப்படுத்தப்படுவதை போன்று வேறு எவரும் உலகில் கண்ணியப்படுத்தபடவில்லை. அவரது கட்டளைகள் யாவும் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது’ என்றார்.

    இதன் பின்னர் குரைஷியர்களிடம் தூது பேச நபிகளார் உத்மான் (ரலி) யை அனுப்பி வைத்தார்கள். பேச்சுவார்த்தைக்கு சென்ற உத்மான் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், இறுதிவரை போராட நபிகளார் தம் தோழர்களிடம் வாக்குறுதி பெற்றார்கள். இச்செய்தி அறிந்த குரைஷியர்கள் நபிகளாருடன் பேசி உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ள சுஹைல் என்பவரை அனுப்பி வைத்தனர்.

    நபிகளாருக்கும் சுஹைலுக்கும் இடையேயான இந்த ஒப்பந்த நிபந்தனைகளை எழுதிடும் பொறுப்பை நபிகளார் அலி (ரலி) யிடம் ஒப்படைத்தார்கள்.

    ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ என்ற வாசகத்தில் உள்ள ‘ரஹ்மான், ரஹீம்’, போன்ற இறை நாமங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெறுவதையும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் என்ற வாசகத்தையும் ஏற்க மறுத்த சுஹைல் அதனை மாற்ற வேண்டும் என்றும் வாதிட்டார்.

    அதனை ஏற்றுக்கொண்ட நபிகளார் ஒப்பந்தம் ‘பிஸ்மிக் அல்லாஹும்ம’ என்று தொடங்கிடவும், அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு பதிலாக ‘அப்துல்லாஹ்வின் மகன் முகம்மத்’ என்றும் மாற்றங்கள் செய்திடவும் நபிகளார் அனுமதித்தார்கள்.

    இந்த உடன்படிக்கை தான் ஹுதைபியா உடன்படிக்கை என்று அழைக்கப்படுகிறது.

    அந்த ஒப்பந்த பத்திரத்தின் இறுதி வாசகம் இவ்வாறு இருந்தது: ‘முஹம்மதே, நீர் இந்த வருடம் மக்காவை விட்டும் நீங்கிச் செல்ல வேண்டும். எனினும் எதிர்வரும் வருடத்தில் நாங்கள் மக்காவை விட்டும் வெளியேறி விடுவோம். நீர் உமது தோழர்களுடன் மக்காவினுள் நுழையலாம். 3 நாட்கள் தங்கிக் கொள்ளலாம். வாளும் உறையுமான பயண ஆயுதங்கள் தவிர்த்து வேறு ஆயுதங்கள் ஏதும் கொண்டு வரக்கூடாது’.

    மிகுந்த ஆவலோடு க அபாவை வலம் வர ஆயிரத்திற்கும் அதிகமான தனது தோழர்களுடன் வந்த நபிகளார் யாத்திரையை ஹுதைபியாவுடன் நிறைவு செய்து மதீனா திரும்பினார்கள்.

    உயர்ந்த லட்சியத்தை அடைய, வெற்றியை உறுதி செய்ய, வீணாக ரத்தம் சிந்தப்படுவதை தவிர்க்க, இணக்கமான சூழல் உருவாகிட, பல்வேறு கொள்கை உடையவர்கள் அமைதியாக இணங்கி வாழ உடன்படிக்கை என்பது மிக மிக அவசியமானது என்பதை நபிகளாரின் இந்த ஹுதைபியா உடன்படிக்கை உலகிற்க்கு உணர்த்தும் உன்னதமான செய்தியாகும்.

    இந்த உடன்படிக்கையில் குரைஷி களின் பல கோரிக்கைகளையும் நபிகளார் ஏற்று வழிவிட்டது ஒரு பின்னடைவை போன்று முதலில் தோன்றினாலும் இறுதியில் நிறைவான வெற்றி நபிகளாருக்கே கிடைத்தது.

    நபிகளார் வலிவுறுத்தும் இத்தகைய உன்னத உயர் பண்புகள் உலகில் என்றுமே தோற்பது இல்லை. அவைகள் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கும்.

    மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.

    அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டிய ஷரியத் சட்டதிட்டங்களை அறிந்து கொள்வது, நன்னெறிகளை வளர்த்துக்கொள்வது போன்றவையாகும்.
    எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையில் ‘இஹ்திகாப்’ பற்றி குறிப்பிடும் போது “ஹஜ்ஜு செய்து அங்கு வந்து அதை சுற்றுபவர்களும், தியானம் புரிய அங்கு வந்து தங்குபவர்களுக்கும், எனது அந்த வீட்டை சுத்தமாக ஆக்கி வையுங்கள்” (திருக்குர்ஆன் 2:125) என்று இப்ராகிம் நபிகளுக்கு கட்டளை இடுகின்றன.

    இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் நம் அனைவரையும் நோக்கி, “என் இல்லத்தில் வந்து தங்கி இருந்து இரவு வேளைகளில் திக்ரு, தியானம், வணக்கம் என்று அமல் செய்யுங்கள்” என்று மறைமுகமாக எடுத்தியம்புகின்றான்.

    இறை இல்லத்தில் தங்கி தியானம் செய்வதையே கண்மணி நாயகம் (ஸல்) அவர்களும் ‘இஹ்திகாப்’ என்ற அமலாக நமக்கு அமைத்து தந்தார்கள்.

    ‘இஹ்திகாப்’ என்பதின் அர்த்தம், ஒரு இறையடியான் தன் உலக வாழ்வின் தொடர்புகள் அத்தனையும் துறந்து, தனிமையை நாடி, இறை இல்லத்தில் (பள்ளிவாசல்) வந்து தங்கி இருந்து இறைவனோடு நேரடி தொடர்பில் ஈடுபடுவதே. இது பரவலாக ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் கடைப்பிடிக் கப்பட்டு வருவதை உலகெங்கும் நாம் கண்டு வருகிறோம்.

    நாம் கடைப்பிடிக்கின்ற முறைகளைக்கொண்டு ‘இஹ்திகாப்’ மூன்று விதமாக கருதப்படுகிறது. ரமலான் மாதத்தில் கடைசி பத்து நாட்கள் கடைப்பிடிக்கப்படுவதற்கு சுன்னத்தான ‘இஹ்திகாப்’ என்றும், பத்து நாட்களுக்குப் பதிலாக அதற்கு குறைந்த எண்ணிக்கையில் இருப்பதற்கு ‘நபில் இஹ்திகாப்’ என்றும், ரமலான் மாதத்தில் கடைசி பத்து தவிர்த்து, மற்றைய நாட்களில் அல்லது பிற மாதங்களில் தன் நேர்ச்சைக்காகவோ அல்லது எண்ணிய எண்ணங்கள் நிறை வேறுவதற்காகவோ பள்ளிவாசலில் வந்து தங்கி இருந்து அமல் செய்வது ‘வாஜிபான இஹ்திகாப்’ என்றும் அழைக்கப் படுகிறது.

    இஹ்திகாபின் முக்கிய அம்சம் நோன்பிருந்து மட்டுமே இஹ்திகாப் இருக்க வேண்டும். அது வரையறுத்துச் சொல்லப்பட்ட கட்டளை. இந்த மூன்று நிலைகளையும் தவிர்த்து எப்போதெல்லாம் தொழுகையை நிறைவேற்றுவதற் காக பள்ளிவாசல் வருகிறோமோ அப்பொழுதெல்லாம் நுழைவு வாசலில் வைத்து, நான் பள்ளிவாசலில் தங்கி இருக்கும் காலஅளவு முழுவதும் ‘இஹ்திகாப்’ இருக்க நிய்யத் செய்கிறேன்” என்று சொல்லி விட்டு பள்ளிவாசலில் வந்து தொழுகையை நிறைவேற்றிச் செல்லலாம். இதன்மூலம், பள்ளிவாசலில் நாம் தங்கி இருந்த அந்த கால அளவுக்கு இஹ்திகாப் இருந்த நன்மைகளை இறைவனிடம் பெறலாம்.

    நம் செயல்பாடுகள் அனைத்தும் ‘நிய்யத்’ (எண்ணத்தின்) அடிப்படையிலேயே அளவிடப்படுகின்றன. உலக ஆசாபாசங் கள், குடும்பம், தொழில், வணிகம், பணி போன்ற எல்லா வற்றையும் அல்லாஹ்விற்காக துறந்து விட்டு, அந்த உலக தொடர்புகள் அறுந்த நிலையில் அல்லாஹ்விடம் வந்து தனிமையில் கெஞ்சி, இறைஞ்சி தன் தேவைகளைப் பெற்றுக்கொள்வதே ‘இஹ்திகாப்’ இருப்பதன் முக்கிய நோக் கம் ஆகும்.

    ‘இஹ்திகாப்’ இருக்கும்போது நாம் செய்யவேண்டியவை வருமாறு:

    பர்ளான, சுன்னத்தான, நபிலான அத்தனை தொழுகை களையும் தொழுவது,

    அருள்மறை திருக்குர்ஆன் ஓதுவது, அதன் விளக்கங் களை அறிந்து கொள்வது, திக்ர் செய்வது,

    அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டிய ஷரியத் சட்டதிட்டங்களை அறிந்து கொள்வது, நன்னெறிகளை வளர்த்துக்கொள்வது போன்றவையாகும்.

    10 நாட்களில் இத்தனை அமல்களை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் தான் ‘இஹ்திகாப்’ இருப்பது பூர்த்தியாகும்.

    மேலும் ‘இஹ்திகாப்’ இருப்பவர்களால் ‘லைலத்துல் கத்ர்’ என்ற மிகச்சிறந்த இரவை பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல இன்னும் நம் கற்பனைக்கு எட்டாத எத்தனையோ நன்மைகளை அள்ளித்தருவதும் ‘இஹ்திகாப்’ என்ற இந்த அமல் தான்.

    பெண்களின் ‘இஹ்திகாப்’

    ஆண்கள் போன்று பெண்களும் ‘இஹ்திகாப்’ இருப்பது சுன்னத்தான வழிமுறையாக அறியப்படுகிறது. அவர் களுக்கான ‘இஹ்திகாப்’ வழி முறைகள் சற்று தளர்த்தப் பட்டுள்ளது. அவர்கள் தங்கள் வீடுகளில் இஹ்தி காப்பில் இருப்பதே சாலச்சிறந்தது. தங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கு வேறு ஏற்பாடுகள் தனியாக இருப்பின் அவர்கள் அந்த முஹல்லாவைச் சார்ந்த பெண்கள் மதரஸா போன்ற இடங்களில் சென்று ‘இஹ்திகாப்’ இருக்கலாம்.

    வீடுகளில் ‘இஹ்திகாப்’ இருக்கும் பெண்கள் தாங்கள் ஏற்கனவே தொழுவதற்காக ஏற்படுத்தி வைத்திருக்கின்ற இடங்களில் அல்லது சற்று மறைவான வெளியார் யாரும் சுலபமாக அணுக முடியாத பகுதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். படுக்கையை கூட அங்கே யே நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

    தொழுகை, குர்ஆன் ஓதுவது, திக்ர் போன்ற அமல்களை சரியான நேரங்களில் நிறைவேற்றுவதற்காக கால அளவை நிர்ணயம் செய்து கொள்ளவேண்டும். சமையலுக்காகவும், கணவன், குழந்தை பராமரிப்பிற்காகவும் உள்ள நேரங்களில் அந்த கடமையை அவர்கள் சென்று நிறைவேற்றலாம். இரவில் தனியாகவே உறங்க வேண்டும்.

    மேலும், இரவு நேரங்களில் முடிந்த அளவு தூங்காமல் இருந்து பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் அல்லாஹ் உங்கள் தேவைகளை நிறைவேற்றித் தருவான்.

    இஹ்திகாபை நிறைவேற்றுபவர்களுக்கு, இரண்டு ஹஜ் மற்றும் இரண்டு உம்ராவை நிறைவேற்றிய நன்மையை வழங்குவதாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அத் தகைய நன்மையைப் பெற்றுக்கொண்ட நல்லடியார்களாக நம்மையும் ஆக்கி அருள்வானாக. ஆமீன்.

    மு. முகமது யூசுப், உடன்குடி.
    ‘இறை நம்பிக்கையாளர்களே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் (என்னிடம்) உதவி தேடுங்கள். இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 2:153)
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான பொறுமையை கடைப்பிடிப்பது மற்றும் கோபத்தை அடக்குவது குறித்த தகவல்களை காண்போம்.

    பொறுமை என்பது இறைகுணம். இறைவனிடமிருந்து வரும் ஒரு அருள் குணம். இதற்கு எதிர்மறையான குணங்கள் என்று வரும்போது அவசரம், ஆத்திரம், உணர்ச்சிவசப்படுதல், கோபம் போன்றவை அடங்கும்.

    எங்கும், எதிலும், எப்போதும், பொறுமை அவசியம். குறிப்பாக, இறை நம்பிக்கையாளர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். இதனால்தான் இறைவன் தன்னிடம் உதவி கோரும்போது ‘முதலில் பொறுமையைக் கொண்டும், பிறகு தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்’ என்று வற்புறுத்துகிறான்.

    ‘இறை நம்பிக்கையாளர்களே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் (என்னிடம்) உதவி தேடுங்கள். இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 2:153)

    பொறுமை இருந்தால்தான் முழுமையான முறையில் நேரம் தவறாமல் தொழ முடியும்; கடுமையான கோடை காலங்களில் கடமையான நோன்புகளை நோற்கமுடியும். நாம் நேசிக்கும் செல்வத்தை நம்மிடம் யாசிக்கும் ஒருவருக்கு ஜகாத், ஸதகா மூலம் வழங்கமுடியும்; பிரியமானவர்களிடமிருந்து பிரிந்து சென்று ஹஜ் செய்யமுடியும்.

    இப்படிப்பட்ட பொறுமை பலவிதமான சந்தர்ப்பங்களில் தேவைப்படுகிறது. விலக்கப்பட்டதை விடுவதற்கு, நஷ்டம், தோல்வியை சந்திக்கும் போது, விபத்து, ஆபத்து, நோய், சோதனை, வேதனை ஆகியவை தொடரும் போதும் பொறுமை அவசியம். இதுபோன்ற தருணங்களில் பொறுமையை கடைப்பிடிக்கும் போது இக்கட்டான நிலையை மிக எளிதில் கடந்து விட முடிகிறது. எதையும் தாங்கும் இதயம் மனவலிமையில் மட்டுமல்ல. பொறுமையிலும் அடங்கியுள்ளது.

    ‘பொறுமை ஒரு அருட்கொடை. யார் பொறுமையை மேற்கொள்ள முயல்கிறாரோ அவரை இறைவன் பொறுமையாளராக ஆக்குவான். மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஸயீத் குத்ரீ (ரலி), புகாரி)

    ‘ஓர் இறை நம்பிக்கையாளரின் நிலையானது இளம்பயிர் போன்றதாகும். காற்றடிக்கும் திசையில் அதன் இலை சாயும். காற்று நின்றுவிட்டால் நேராக நிற்கும். இவ்வாறுதான் இறை நம்பிக்கையாளரும் சோதனைகளின் போது அலைக்கழிக்கப்படுகிறார். எனினும், அவர் பொறுமை காப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரலி), புகாரி)

    பொறுமை என்பது துன்பம், துயரம் நடக்கும் சமயத்தில் முதன்முதலில் கடைப்பிடிப்பதாகும். பொறுமையை இழந்து, அழுது புலம்பி, ஆடி அடங்கி, ஓடி ஒடுங்கி, தெம்பு குறைந்த பிறகு, மூச்சுவிட சக்தி இல்லாத போது இப்போது நான் பொறுமை காக்கிறேன் என்று கூறுவது போலியான பொறுமையாகும்.

    ‘பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி)

    வாழ்க்கையில் சோதனைகளைச் சந்திக்கும்போது பதற்றப்படாமலும், இறைவனை நிந்திக்காமலும் மனஉறுதியுடன் நிதானம் தவறாமல் பிரச்சினைகளை எதிர்கொள்வதே பொறுமை எனப்படும். நபி (ஸல்) அவர்களுக்கு பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு திருக்குர்ஆனில் இருபதுக்கும் அதிகமான இடங்களில் இறைவன் கட்டளை பிறப்பித்துள்ளான்.

    ‘நீங்கள் பொறுமையை மேற்கொள்வதே உங்களுக்குச் சிறந்ததாகும்’. (திருக்குர்ஆன் 4:25)

    நபியவர்கள் தமது வாழ்க்கையில் பலவிதமான சோதனைகளையும், துயரங்களையும் சந்தித்த போதெல்லாம் அழகிய முறையில் பொறுமையைத் தாமும் கடைப்பிடித்து, தமது தோழர்களையும் கடைப்பிடிக்கச் செய்தார்கள்.

    ‘ஓர் உண்மையான இறை நம்பிக்கையாளரின் நிலை ஆச்சரியம் நிறைந்ததாகும். இன்பமும், துன்பமும் அவருக்கு நன்மையாகவே முடிகின்றன. இன்பத்தைக் கண்டால் அவர் நன்றி செலுத்துகிறார்; துன்பத்தைக் காணும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: சுஹைப் (ரலி), முஸ்லிம்)

    கோபம் வரும் போது பொறுமை தேவை

    துன்பங்கள், சோதனைகள் வரும் காலகட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் பொறுமையை விட கோபம் வரும்போது கடைப்பிடிக்கப்படும் பொறுமையே சிறந்த செயல்.

    கோபம் வரும் போது நிதானம், மென்மை, பொறுமை அவசியம். நிதானம் இழந்த கோபத்தால் சமூக நல்லிணக்கம் சீர் கெடுகிறது; குடும்ப உறவு சீர் குலைகிறது; நட்பு வட்டாரத்தில் விரிசல் ஏற்படுகிறது. கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக எதிர்மறையான, மோசமான விளைவுகளை உண்டாக்கி விடுகிறது.

    “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘எனக்கு அறிவுரை கூறுங்கள்’ என்றார்.

    ‘கோபத்தை கைவிடு’ என நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள். அவர் பலமுறை கேட்ட போதும் ‘கோபத்தை கைவிடு’ என்றே நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

    கோபம் வரும் போது அதை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரே உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆவார். கோபத்தை அடக்கி வைப்பதுதான் உண்மையான இறை நம்பிக்கை ஆகும்.

    ‘(உண்மையான) இறை நம்பிக்கையாளர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரை இறைவன் நேசிக்கிறான்’. (திருக்குர்ஆன் 3:134)

    “கோபம் வரும் போது அதை வெளிப் படுத்த சக்தி இருந்தும் எவர் அதை மென்று விழுங்குகிறாரோ, அவரை இறைவன் மறுமையில் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அழைத்து ‘சொர்க்கக் கன்னிகளில் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யும்படி அனுமதி வழங்குவான்’ என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: முஆத் (ரலி), அபூதாவூத்)

    ‘மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), புகாரி)

    கோபம் வரும் போது அதைக் கட்டுப்படுத்த வேண்டும். வாய்க்கு வந்தபடி, கண்டவரை கண்டபடி வசை பாடுவதிலிருந்து மவுனம் காக்க வேண்டும். பிறரின் மீது ஏற்படும் கோபத்தை நாம் தடுத்து வைக்கும் போது நம் மீது இறைவனுக்கு ஏற்படும் கோபத்தையும் அவன் நிறுத்தி வைத்து விடுகின்றான்.

    ‘கற்றுக்கொடுங்கள்; நற்செய்தி கூறுங்கள்; சிரமத்தை தராதீர்கள்; உங்களில் ஒருவருக்கு கோபம் வந்தால், அவர் மவுனமாக இருந்து கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: பைஹகீ)

    ‘எவர் தமது கோபத்தை தடுத்துக் கொள்கிறாரோ, அவரை விட்டும் இறைவன் தமது வேதனையை மறுமையில் தடுத்துக்கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: பைஹகீ)

    கோபம் சைத்தானின் குணம்

    ‘நிதானம் இறைவனிடமிருந்து வரும் குணம்; கோபம் சைத்தானிடமிருந்து வரும் குணம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: அபூயாலா)

    ‘நிச்சயமாக கோபம் சைத்தானின் குணம். சைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டான். நீரைக் கொண்டுதான் நெருப்பை அணைக்க முடியும். எனவே உங்களில் ஒருவர் கோபப்பட்டால் ஒளு (உறுப்புக்களை நீரால் கழுவி சுத்தம்) செய்து கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அதிய்யா (ரலி), நூல்: அபூதாவூத்)

    ‘உங்களில் ஒருவருக்கு நின்ற நிலையில் கோபம் வந்தால், அமர்ந்து கொள்ளட்டும். அவரை விட்டும் கோபம் விலகிச் சென்றால் சரி. இல்லையெனில் அவர் படுத்துக் கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூதர் (ரலி), நூல்: அபூதாவூத்)

    ‘பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக’ (திருக்குர்ஆன் 39:10)

    கோபம் வரும் போது சகித்துக் கொள்ள வேண்டும். பொறுமை நன்மையின் பொக்கிஷம். அதை இறைவன் சங்கையான அடியார்களுக்கு மட்டுமே வழங்குவான். பொறுமையாளர்களுக்கு இறைவனிடம் நிறைவான கூலி உண்டு.
    துஆவும் ஸதகாவும் அதாவது பிரார்த்தனையும் தர்மமும் மனிதனின் தலைவிதியை எப்படியோ புரட்டிப்போட்டு விடுகின்றன. அப்படியானால் அவ்விரண்டின் மகிமை என்ன என்பதை நம்மால் நன்கு புரிந்து கொள்ளமுடிகிறது.
    விதியை வெல்ல முடியுமா? நிச்சயம் விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள் எல்லோரும். ஆனால் அது எப்படி என்று கேட்டால் எல்லோரும் சற்று யோசிப்பார்கள்.

    இந்த இக்கட்டான காலகட்டத்தில் தான் இஸ்லாம் துல்லியமாக நமக்கு இரண்டு வழிகளைக் காட்டுகிறது. ஒன்று ‘துஆ’ எனும் பிரார்த்தனை. மற்றொன்று ‘ஸதகா’ எனும் தான தர்மம். இந்த இரு வழிகளையும் நாம் கைவிடாது மேற்கொள்கிறபோது நிச்சயம் நம்முடைய தலைவிதிகள் யாவும் மாறும் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை.

    ‘துஆ’ எனும் இறைஞ்சுதலை கெஞ்சிக்கேட்பதை அல்லாஹ் மிகவும் விரும்புகிறான். நாம் அவனிடம் துஆ கேட்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். ‘யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபப்படுகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    கேட்டால் கோபப்படுபவன் மனிதன். கேட்காவிட்டால் கோபப்படு பவன் இறைவன். எனவே நாம் நமது பிரார்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து திருக்குர்ஆன் வசனம் 40:60 இப்படிக் கூறுகிறது:

    “உங்கள் இறைவன் கூறுகிறான்: என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்”.

    இவ்வசனம் பிரார்த்தனை அது ஒரு வணக்கம்; அதை விடுவது பெருமையடிக்கும் செயல்; அதனால் நரகம் கிடைக்கக் கூடும். எனவே நாம் நமது பிரார்த்தனை விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை வெகுஅழகாகக் கூறுகிறது.

    ஆகவே தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் “பிரார்த்தனை: அது ஒரு வணக்கம்” என்று கூறினார்கள். அதாவது தொழுவது எப்படி ஒரு வணக்கமோ அதுபோல பிரார்த்தனை செய்வதும் ஒரு வணக்கம் தான்.

    பிரார்த்தனை செய்யும் போது நாம் கேட்பது நிச்சயம் நமக்கு கிடைக்கும் என்ற மிக உறுதியான உள்ளத்துடன் மனம் உருகிக் கேட்க வேண்டும். அப்போது தான் நாம் கேட்பது நமக்கு கிடைக்கும். இல்லை எனில் நமது அன்றாடப் பிரார்த்தனைகளில் எவ்விதப் பலனும் இருக்காது.

    அடுத்து தர்மம். இதுவும் இன்றைக்கு முழுமையாக நிறைவேற்றப் படுவதில்லை என்பது தான் மிகுந்த வேதனைக்குரியது. நாம் மட்டும் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் நம்மை நம்பி வரும் அந்த இறையடியார்களுக்கு மட்டும் கஞ்சத்திலும் கஞ்சமாய் வடிகட்டி ஓரிரு சில்லறைக்காசுகளை தூக்கிப்போட வேண்டும். கோடான கோடிச் செல்வமும் அல்லாஹ் நமக்கு போட்ட பிச்சை என்பதை ஏனோ நாம் அவ்வப்போது மறந்து போய் விடுகிறோம்.

    இதனால் தான் இறை வசனம் செல்வங்களைக்குறித்துப் பேசும் போதெல்லாம் “நாம் கொடுத்ததிலிருந்து...” என்று அடிக்கோடிட்டுக் காட்டிச் செல்கிறது.

    “நீங்கள் நேசிக்கும் பொருள்களி லிருந்து தானம் செய்யாதவரை நிச்சயமாக நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 3:92)

    நாம் விரும்பியதை கொடுக்காதவரை நமக்கான நன்மைகளை நிச்சயம் நாம் பெற்றுக்கொள்ள முடியாது என்று பேசும் இவ்வசனம் நமது அன்றாட தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகத்தௌிவாக சொல்லிச் செல்கிறது.

    ஆனால் நாம் இன்றைக்கு எப்படியிருக்கிறோம்? ஒன்றுக்கும் உதவாத பொருட்களை தர்மம் என்ற பெயரில் கொடுக்கிறோமே அது எந்த வகையில் நியாயம்? தான தர்மம் என்பது அது ஏதோ அடுத்தவர்களுக்கு அள்ளிக்கொடுப்பது; தூக்கிக் கொடுப்பது என்பது மட்டுமல்ல. அதையும் தாண்டி அடுத்தவர்களையும் வாழவைப்பது என்பதும் தர்மம் தான்.

    எனவே நாம் கொடுக்கும் தர்மம் கட்டாயம் பயனுள்ளதாக சிறப்பானதாக உயரியதாக இருக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் உங்களுக்கு எதை விரும்புவீர்களோ அதையே நீங்கள் மற்றவர்களுக்கும் விரும்புவதாக இருக்க வேண்டும். இப்படி செய்வது தான் உண்மையில் மிகச்சிறந்த தர்மமாகும்.

    துஆவும் ஸதகாவும் அதாவது பிரார்த்தனையும் தர்மமும் மனிதனின் தலைவிதியை எப்படியோ புரட்டிப்போட்டு விடுகின்றன. அப்படியானால் அவ்விரண்டின் மகிமை என்ன என்பதை நம்மால் நன்கு புரிந்து கொள்ளமுடிகிறது.

    வாருங்கள் தர்மங்களையும் நல்ல பிரார்த்தனைகளையும் செய்வோம்.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி ஈரோடு-3
    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்- பெண் மறைக்கப்பட வேண்டியவள் ஆவாள். அவள் வெளியேறி விட்டால் ஷைத்தான் அவளை தலையை நிமிர்த்தி பார்க்க வைக்கிறான் (திர்மிதி: 1173)
    நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்- பெண் மறைக்கப்பட வேண்டியவள் ஆவாள். அவள் வெளியேறி விட்டால் ஷைத்தான் அவளை தலையை நிமிர்த்தி பார்க்க வைக்கிறான் (திர்மிதி: 1173)

    அதாவது ஒரு பெண் தனது இருப்பிடத்திலிருந்து வெளியேறி பலருக்கு முன்னால் வந்து விட்டாலே, பார்ப்போருக்கு அவளை ஷைத்தான் அலங்கரித்துக் காட்டுவான். பார்ப்போரின் உள்ளத்தில் சபலத்தை உருவாக்குவான். இதையடுத்து தவறுகள் நடக்க வாய்ப்பு ஏற்பட்டு, மனித ஷைத்தான்கள் அவளிடம் வரம்பு மீறி நடக்க முனைவார்கள்.

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்- ஒரு பெண் மணமுடிக்கக் கூடாத நெருங்கிய உறவினருடன் இருக்கும் போதே தவிர வேறு எந்த (அன்னிய) ஆணும் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கலாகாது என்று கூறினார்கள். உடனே ஒருவர் எழுந்து, இறைத்தூதர் அவர்களே. என் மனைவி ஹஜ் செய்யப் புறப்பட்டு விட்டாள். இன்ன இன்ன போரில் என் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்நிலையில் நான் என்ன செய்வது?) என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “(போருக்குச் செல்வதிலிருந்து பெயரை) திரும்பப் பெற்றுக் கொண்டு, நீர் உம்முடைய மனைவியுடன் ஹஜ் செய்வீராக என்று கூறினார்கள் (புகாரி: 5233)
    அந்நியப் பெண்ணுடன் ஓர் ஆண் தனிமையில் இருக்கும்போது அங்கே மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (திர்மிதி 1171)

    தனிமையில் இருக்கும் வாலிப பெண்ணுக்கு ஓர் ஆண் சலாம் சொல்லக் கூடாது. அப்படி ஒருவன் சலாம் சொன்னால் அந்தப் பெண் பதில் சலாம் சொல்லக் கூடாது என்று இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (கிதாபுல் அஸ்கார்: 368). இதன் மூலம், ஒரு அந்நியப் பெண்ணுக்கு வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் எந்தவிதமான தகவல் பரிமாற்றமும் செய்யக் கூடாது என்பதை அறியலாம்.
    ஆண்கள் இருக்கும் பகுதிக்கு அறவே செல்லக் கூடாது

    மூசா (அலை) அவர்கள் மத்யன் நகரத்தின் நீர்நிலைக்கு வந்தபோது, அங்கு மக்கள் தம் கால்நடைகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருந்தார். ஆனால் ஷுஐப் (அலை) அவர்களின் இரு மகள்கள் மட்டும் தம் கால்நடைகளுக்கு நீர் புகட்டாமல் ஒதுங்கி நின்றிருந்ததைக் கண்ட மூசா (அலை) அவர்கள், இவர்களுடன் சேர்ந்து நீங்கள் ஏன் நீர் புகட்டாமல் நிற்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்மணிகள் சொன்ன பதில் அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்து விட்ட காரணத்தால், அதைக்  சூர்ஆனில் இடம் பெறச் செய்தான். அவர்கள் கூறிய பதில்: இந்த ஆண் இடையர்கள் விலகிச் செல்லும் வரை நாங்கள் நீர் புகட்ட மாட்டோம். எங்கள் தந்தை மிகவும் முதியவர். (அல்குர்ஆன் 28:23)

    இதில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவெனில் மக்களுடன் சேர்ந்து நீங்கள் ஏன் நீர் புகட்டவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது எங்கள் தந்தை மிகவும் முதியவர். அதாவது எங்கள் தந்தையால் ஆடு மேய்க்க முடியவில்லை. எனவே நிர்பந்தமாக நாங்கள் வெளியில் வந்தோம். அப்படி வெளியில் நிர்பந்தமாக  வந்தாலும் ஆண்கள் இருக்கும் இடத்திற்கு அறவே செல்ல மாட்டோம் என்றனர். இங்கு பர்தாவின் இலக்கணத்தை கற்பித்து விட்டனர்.

    சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாத பெண்கள்

    நபி (ஸல்)அவர்கள் முன்னறிவிப்பு செய்தார்கள்: ஆடையணிந்தும் நிர்வாணிகளாக இருக்கக் கூடிய, ஆண்களை தன் பால் சாய்க்கக் கூடிய, தாங்களும் ஆண்களின்பால் சாயக்கூடிய சில பெண்கள் தோன்றுவார்கள்.... இவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். ஏன் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். (முஸ்லிம்: 5582-4316)

    உலக அழிவின் அடையாளம்:

    நபி (ஸல்) அவர்களிடம், ஜிப்ரீல் (அலை) அவர்கள் உலக அழிவின் அடையாளம் பற்றி கேட்டபோது, ஓர் அடிமைப் பெண் தன் எஜமானியாகப் போகிறவளைப் பெற்றெடுத்தல் என்று பதிலளித்தார்கள். அதாவது, ஆண் பிள்ளைகள் தாய் பேச்சை கேட்க மாட்டார்கள் என்ற காலமெல்லாம் சென்று பெண் பிள்ளைகளே தாய் பேச்சை மட்டுமல்ல தாயையே மதிக்காமல் தாயை அடக்கி ஆள்பவளாக மகள் மாறி விடுவான். இது உலக அழிவின் ஓர் அடையாளமாகும்.

    -சலாவூதின்
    பொறாமைக்காரனிடமிருந்து பாதுகாப்பு தருமாறு இறைவனிடம் கோர வேண்டும். இதையேய திருக்குர்ஆன், ‘பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக’ என்று (திருக்குர்ஆன் 113:5) குறிப்பிடுகிறது.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றை கைவிடல்’ குறித்த தகவல்களை காண்போம்.

    பொறாமை என்பது வளமாக வாழும் ஒருவரைப் பார்த்து, மற்றொருவர் உச்சக்கட்ட கவலையால் அடையும் ஓர் உணர்வு. இந்த உணர்வு இறைநம்பிக்கையை பாழாக்கிவிடும். இந்த உணர்வை கைவிடுவதுதான் இறைநம்பிக்கை. பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடுபவரே உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆவார்.

    பொறாமைகள் பல விதம், அவை:

    1) ஒருவருக்கு கிடைத்திருக்கும் பாக்கியம் அவரை விட்டும் முற்றிலும் நீங்கிவிட வேண்டும். அது தமக்கு மட்டுமே கிடைத்திட வேண்டும் என வஞ்சகமாக நினைப்பது.

    2) நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அடுத்தவருக்கு எதுவுமே கிடைக்கக்கூடாது. அனைத்து பாக்கியமும் அடுத்தவனை விட்டு மிக தூரமாக இருக்க வேண்டும் என கருதுவது.

    3) தான் நோயாளியாக இருந்தால், அனைவருமே நோயாளிகளாக இருக்க வேண்டும். தான் ஏழையாக இருந்தால், மற்ற அனைவருமே ஏழைகளாக இருக்க வேண்டும். தனக்கு ஒரு சோதனை வந்தால், மற்றவருக்கும் அதுபோல வரவேண்டும் என நினைப்பது.

    இப்படிப்பட்ட கீழ்த்தரமான எண்ண அலைகள் எவருக்கும் எள் அளவு கூட வந்துவிடக்கூடாது. குறிப்பாக இறைநம்பிக்கையாளர்களுக்கு அந்த வாடை கூட அடிக்கக்கூடாது.

    ‘இறைநம்பிக்கையும், பொறாமை எண்ணமும் ஒரே உள்ளத்தில் குடியிருக்க முடியாது என்பது இஸ்லாமிய இறைநம்பிக்கையின் அடிப்படை கோட்பாடு. இது குறித்து நபிகள் பெருமான் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுவதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்:

    “ஒரு இறையடியாரின் உள்ளத்தில் இறைநம்பிக்கையும், பொறாமை எண்ணமும் ஒன்று சேரமுடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    ஒரு அறிஞரின் கூற்று இவ்வாறு வருகிறது:

    ‘பொறாமையிலிருந்து மனித உடலை கழற்றிவிட முடியாது. அந்த பொறாமையிலிருந்து உள்ளத்தை தூய்மையாக வைத்திருக்கும் மனிதர்கள் குறைவு’.

    முதல் பாவமே பொறாமையின் விளைவால் தான் ஏற்பட்டது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை இறைவன் படைத்ததும் அவருக்கு சிரசை தாழ்த்தி, மரியாதை செலுத்திட வேண்டும் என சைத்தானுக்கு இறைவன் உத்தரவிட்டபோது, சைத்தான் தனது பிடிவாத குணத்தாலும், தற்பெருமையாலும், பொறாமையாலும் அவன் கொட்டிய வார்த்தையால் அவன் கெட்டுப் போனான்.

    ‘நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?’ என (இறைவன்) கேட்டான். ‘நான் அவரைவிடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்’ என்று கூறினான். (திருக்குர்ஆன் 7:12)

    இந்த பொறாமை, மற்றும் வஞ்சக வாதத்துக்காக இன்றுவரை சைத்தான் விரட்டப்படும் நபராக, சபிக்கப்படும் நபராக ஆகிவிட்டான்.

    பொறாமை என்ற கொடிய எண்ணம் உடன் பிறந்தவரைக் கூட உண்டு, இல்லை என உருப்படாமல் ஆக்கிவிடும். இதற்கு சரியான சான்று நபி யூசுப் (அலை) அவர்களே ஆவார்கள்.

    நபி யாகூப் (அலை) அவர்களுக்கு, நபி யூசுப் (அலை) உட்பட 12 குழந்தைகள் உண்டு. தமது குழந்தைகளில் யூசுப் (அலை) மீது யாகூப் (அலை) அவர் களுக்கு அலாதி பிரியம். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத மற்ற குழந்தைகள் தமது தந்தைக்கு பிரியமான குழந்தை யூசுபை (அலை) கடத்தி கொலை செய்ய துணிந்து விடுவர். கடைசியில் அந்த முடிவை கை விட்டு விட்டு பாழடைந்த கிணற்றில் தள்ளிவிடுவர். இது குறித்து இறைவன் திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்:

    “நாம் கூட்டமாக இருந்தும் யூசுபும், அவரது சகோதரரும் நம்மைவிட நமது தந்தைக்கு மிக விருப்பமாக உள்ளனர். நமது தந்தை பகிரங்க தவறில் இருக்கிறார்” என்று (அவரது சகோதரர்கள்) கூறியதை நினைவூட்டுவீராக. “யூசுபைக் கொன்று விடுங்கள். அல்லது ஏதாவது நிலப்பரப்பில் அவரை வீசி எறிந்து விடுங்கள். உங்கள் தந்தையின் கவனம் உங்களிடமே இருக்கும். அதன் பிறகு நல்ல மக்களாக நீங்கள் ஆகிக் கொள்ளலாம்” (எனவும் கூறினர்). “நீங்கள் (எதுவும்) செய்வதாக இருந்தால் யூசுபைக் கொலை செய்யாதீர்கள். அவரை ஆழ்கிணற்றுக்குள் போட்டு விடுங்கள். பயணிகளில் யாரேனும் அவரை எடுத்துக் கொள்வார்கள்” என்று அவர்களில் ஒருவர் கூறினார். (திருக்குர்ஆன் 12:8-10)

    உலகில் நடந்த முதல் படுகொலை ஒரு பெண்ணை அடைவதற்காக பொறாமையாலும், வஞ்சகத்தாலும் அரங்கேறியது. ஆதம் (அலை) அவர்களுக்கு ஹவ்வா (அலை) மூலமாக முதல் பிரசவத்தில் ‘காபீல்’ எனும் ஆண் குழந்தையும், ‘இக்லிமா’ எனும் பெண் குழந்தையும் பிறந்தது. இரண்டாவது பிரசவத்தில் ‘ஹாபீல்’ எனும் ஆண் குழந்தையும், ‘லுபூதா’ எனும் பெண் குழந்தையும் பிறந்தது. இனவிருத்திக்காக முதல் பிரசவத்தில் பிறந்த ஆண், இரண்டாவது பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை மணந்து கொள்ள ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டது. இவ்வாறே முதல் பிரசவத்தில் பிறந்த பெண் இரண்டாவது பிரசவத்தில் பிறந்த ஆணை மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

    இதற்கு மாற்றமாக, மூத்த மகன் காபீல் தன்னுடன் முதல் பிரசவத்தில் பிறந்த பேரழகியான இக்லிமாவை மணந்து கொள்ள ஆசைப்பட்டு, அதற்கு தடையாக இருந்த தமது இளைய சகோதரரான ஹாபீலை பொறாமையால் படுகொலை செய்து விடுவார். இதுதான் உலகில் நடந்த முதல் படுகொலையாகும்.

    ‘தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே அவன் நட்டமடைந்தவனாக ஆகிவிட்டான்’. (திருக்குர்ஆன் 5:30)

    இத்தகைய பொறாமை எண்ணம் குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கிறார்கள்:

    ‘(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித்துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக) இறைவனின் அடியார்களே, (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

    இஸ்லாத்தை பொருத்த அளவில் பொறாமைக்கு இடமில்லை. ஒருவேளை பொறாமைப்பட அனுமதி இருக்குமானால் பின்வரும் நன்மைதரும் இரண்டு விஷயங்களில் மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதை நபி (ஸல்) அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விடுகிறார்கள்.

    ‘இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக்கூடாது. ஒரு மனிதருக்கு இறைவன் வழங்கிய செல்வத்தை அவர் நல்வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு இறைவன் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது. (அவரைப் போன்று நாமும் செய்ய வேண்டும் என்பதே அந்த இரண்டு விஷயங்கள்) என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி), புகாரி)

    அனைத்து விதமான பாக்கியமும் வழங்கப்பட்ட பிறரைப் பார்த்து பொறாமைப்படுவது எந்தவகையில் நியாயம்?. தமக்கு வேண்டுமானால் அதை இறைவனிடம் கேட்டுப் பெறலாமே.

    ‘இறைவன் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள் கிறார்களா?’ (திருக்குர்ஆன் 4:54)

    பொறாமைப்படுவதின் வாயிலாக அடுத்த வருக்கு நாம் நோவினை கொடுக்கக்கூடாது. இவ்வாறு இழிவான செயலில் நாம் ஈடுபடும்போது நமது இறை நம்பிக்கை அழிந்துவிடுவதுடன், நமது நல்லறமும் பாழாகி விடுவது நிச்சயம். பொறாமைப்படுவோருக்கு அண்ணலார் விடுக்கும் எச்சரிக்கை இதோ....

    ‘நான் உங்களையும், பொறாமைப்படுவதையும் எச்சரிக்கை செய்கின்றேன். நிச்சயமாக பொறாமை என்பது நெருப்பு விறகுகளை கரித்துவிடுவது போன்று, அது நன்மைகளை விழுங்கிவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்)

    பொறாமைக்கு உள்ளாக்கப்படுவோரின் கனிவான கவனத்திற்கு... ‘நீங்கள் பொறாமைக்காரர்களின் வஞ்சகத்திலிருந்து தப்பித்துக்கொள்ள சுலபமான வழி, உங்களது காரியங்களையும், உங்களது நிறைவேறும் தேவைகளையும் மறைவாக, ரகசியமாக, பாதுகாப்பாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

    ‘நீங்கள் உங்களின் தேவைகளை வெற்றியாக நிறைவேற்றுவதில் மறைத்து செய்வதைக் கொண்டு உதவி அடைந்து கொள்ளுங்கள். ஏனெனில், ஒவ்வொரு பாக்கியமும் பொறாமைப்படுவதற்கு உட்படுத்தப்படும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆத் (ரலி), நூல்:அல்பானீ)

    மேலும் பொறாமைக்காரனிடமிருந்து பாதுகாப்பு தருமாறு இறைவனிடம் கோர வேண்டும். இதையேய திருக்குர்ஆன், ‘பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக’ என்று (திருக்குர்ஆன் 113:5) குறிப்பிடுகிறது.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    இறைவன் முன் என்பது தான் இஸ்லாத்தின் அரிய உயர்ந்த கொள்கை, தான் வாழ மட்டுமல்லாமல், பிறரையும் வாழ்விக்க வேண்டும் என்பது கடமையாக்கப்பட்டுள்ளது.
    உலகம் தோன்றி, மண் தோன்றி, கடல் தோன்றி, விலங்கு தோன்றி, மனிதனும் தோன்றி, ஷைத்தானும் தோன்றி, இறைவனின் வார்த்தைகளை மனிதன் மறக்க பெண் சுவர்க்கத்தின் கதவுகளை வெளி திறக்க மனிதர்களை உலகுக்கு அனுப்பிய இறைவன் எத்தனை, எத்தனை இன்னல்களும், பட்டும் படாத கஷ்டங்களையெல்லாம் மனிதரின் நடமாட்டத்தையும் கண்டு, தூதுவர்களை தோன்றச் செய்தீர் நன்றி.

    நன்றாக வாழ மட்டுமல்ல இறைவன் தூதுவரை அனுப்பியது வழி காட்டவே. ஆம் இழந்த சுவர்க்கத்தை எப்படி அடைவது. இறைவன் நினைத்திருந்தால் தவறு செய்த போது உடனே நரகத்திற்கு ஆதம் ஏவாளை அனுப்பி இருந்தால் நாமெல்லாம் தோன்றவே வழியிருந்திருக்காது. அவகாசம் கொடுத்து மனமாறுவீர்கள் என்பதால், சமாதானத்தையும், மன்னிப்பையும் கற்றுக் கொடுக்கின்ற மார்க்கமாய் இஸ்லாம் விளங்கும்.

    இஸ்லாம் மார்க்கம் வாழ் நாளிலேயே எண்ணிப் பார்க்க வேண்டிய மார்க்கம். உலகில் எத்தனை மதங்கள், சமயங்கள், குலங்கள், வழக் கங்கள், அத்தனைக்கும் இறுதி யாகவும், உறுதியாகவும் ஒரு இறை தூதுவரை அனுப்பினார் என்பது தான் இஸ்லாம் மார்க்கத்தின் ஆணி வேர். நபிமார்கள் எத்தனைபேர் இவ்வுலகில் இறைவனால் அனுப்பப்பட்டார்களோ அவர்களின் வழித்தடங்களை எல்லாம் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்பவும், உறுதிப்படுத்தியும், உலகம் தோன்றியது முதல் அழியப்போகும் காலம் வரை இறைவனின் விருப்பம் தான் நடக்கும் என்பது எல்லா மதங்களும் கூறும் உண்மையே.

    காட்சிகள், நிகழ்வுகள் மாறலாம். ஆனால் இறைவன் என்ற ஈடு இணையற்றவனும், எல்லா புகழுக்கும் உரியவனும், தேவை அற்றவருக்கும், தேவையானதை கொடுக்கக்கூடிய வரும் ஆகிய அந்த ஏக இறைவனை இஸ்லாம் என்ற மார்க்கத்தில் நாம் உற்றுநோக்குவோமேயானால் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் உலகில் எந்த ஒரு முஸ்லிமும், அடுத்த முஸ்லிமை விட உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ இல்லை - இறைவன் முன் என்பது தான் இஸ்லாத்தின் அரிய உயர்ந்த கொள்கை, தான் வாழ மட்டுமல்லாமல், பிறரையும் வாழ்விக்க வேண்டும் என்பது கடமையாக்கப்பட்டுள்ளது. உரிமைகள், கடமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு உள்ளன. அன்பு, கோபம், சட்ட திட்டங்கள், உறவு, பகை, சமாதானம், மன்னிப்பு, மனித நேயம், தண்டனை எல்லாமே எளிமையாகவும், அருமையாகவும், இறைவன் விளக்கியதாக கூறும் இஸ்லாம் உண்மைகளை எல்லோரும் கடைப்பிடிக்க முஸ்லிம்களை மட்டும் அல்லாது மனிதர்களை மனிதர்களால் அறிவுறுத்துவது அற்புதம்.

    அ.செ.வில்வநாதன் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
    இஸ்லாமிய வரலாற்றில் எதிர் கொள்ளப்பட்ட போர்கள் அனைத்தும் திருக்குர்ஆன் கூறும் வரையறைகளுக்கு உட்பட்டு அமைந்ததாகச் சான்றுகளால் அறிய முடிகின்றது.
    இஸ்லாமியச் சமயம் என்பதில் தனிப்பட்ட ஒருவரின் பெயரோ, குறிப்பிட்ட நாட்டின் பெயரோ, குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரோ என்ற வரையறை இல்லை. இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்குக் கீழ்படிதல், கட்டளை நிறைவேற்றுதல், சாந்தி, சமாதானம் என்று பல்வேறு பொருள்கள் உள்ளன. ஆகவே இஸ்லாமியச் சமயம் என்று சொல்வதைக் காட்டிலும் இஸ்லாமிய மார்க்கம் என்று சொல்லலாம். இம்மார்க்கத்தின் அருமறையாம் திருக்குர்ஆன் உலக அமைதிக்கு எவ்வாறு வழிவகுக்கின்றது என்பதை அறிவுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    இன்று மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் உலகமே அல்லல்பட்டு கொண்டு இருப்பதை நாம் காண முடிகின்றது. எங்கு பார்த்தாலும் வன்முறை, தீவிரவாதம், குண்டுவெடிப்புகள், பிறநாட்டை அபகரித்தல், பிறநாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதித்தல், தன் படை வலிமையால் அடுத்த நாட்டைத் தாக்குதல் போன்ற செயல்கள் சர்வசாதரணமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதனால் உலகில் எங்கு பார்ப்பினும் போர்களும், போர் மேகங்களும் சூழ்ந்து மக்களை பயமுறுத்துகின்றன. விளைவு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு எப்போது எது நடக்குமோ என்ற உணர்வே மேலோங்கி நிற்கின்றது.

    இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் போரினைப் பற்றிக் கூறுமிடத்து தற்காப்புப் போரினையே வலியுறுத்துகின்றது. இஸ்லாமிய வரலாற்றில் எதிர் கொள்ளப்பட்ட போர்கள் அனைத்தும் திருக்குர்ஆன் கூறும் வரையறைகளுக்கு உட்பட்டு அமைந்ததாகச் சான்றுகளால் அறிய முடிகின்றது. நீ எவரையும் தாக்காதே:

    ஆனால் ஒருவன் உன்னைத் தாக்கும் போது நீ அதனை முறியடிக்காமல் இருந்தால், அது குழப்பத்தை அதிகப்படுத்துவதற்குக் காரணமாகவும், ஒழுங்கையும், அமைதியையும் அது கெடுத்து விடுவதாக வும் இருந்தால் நீ அவரது தாக்குதலை எதிர்கொண்டு போரிடு (திருக்குர் ஆன் 2:190) என்று சுட்டிக்காட்டுவது தற்காப்பு போரினை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

    அபூஹ்ல் என்பவன் கூட்டத்தோடு பெருமானார் (ஸல்) அவர்களைத் தாக்குவதற்காக வருகின்றான். அவ்வேளையில் செய்தி அறிந்த பெருமானார் (ஸல்) அவர்கள் தம்முடன் இருக்கும் தோழர்களைப் பார்த்து முதலில் நீங்கள் தாக்காதீர்கள் என்று அறிவுறுத்து கின்றார். இந்நிகழ்வினை எம்.ஆர்.எம்.அப்துஸ்-றஹீம்,

    எவரும் என்றன் ஆணையின்றி,

    இந்த கோடு தாண்டியே

    துவங்க வேண்டாம் எதிரி மீது

    முதலில் போரைத் தோழர்காள் !

    அவர்கள் உம்மைத் தாக்க வந்தால் அம்பால் அவரை எதிர் கொள்க (நபிகள் நாயகக் காவியம், ப.354) என்று சுட்டிக் காட்டுகின்றார். ஆக, போரிடுவது என்பது சுயநலத் திற்காகவோ, பேராசைக்காகவோ இருத்தல் கூடாது என்பதைத் திருமறை அறிவுறுத்துகின்றது.

    முனைவர். கி.சையத் ஜாகிர் ஹசன், விலிஷி இணைச் செயலாளர்.
    ×